தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்! (வைரவர் வழிபாடு)
சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம். பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள். அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர். ஸ்ரீபைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலவற்றை இங்கு பார்ப்போம்!
சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார். எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர். இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார். அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.
இன்னொரு புராணக் கதையும் சொல்வார்கள்.
திருமாலும் பிரம்மனும் சிவனாரின் அடி-முடியைத் தேட முயன்றபோது, பிரம்மன் அன்னபட்சியாகி வானில் பறந்து சென்று சிவனாரின் திருமுடியைக் காண இயலாமல் தோற்றார். ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி, திருமுடியைக் கண்டதாக பொய்யுரைத்து, திருமுடியில் இருந்து வீழ்ந்ததாக தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்லவைத்தார். குறிப்பாக, பிரம்மனது ஐந்தாவது தலை இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னதாம்.
ஒருவன், தான் பெற்ற கலைகளால், கல்வியால், செல்வத்தால் ஆணவம் கொள்ளும்போது, அவனுள் தீய எண்ணங்களும் உண்டாகும். இதை தெய்வம் ஏற்காது; தண்டிக்கும் என்பதையே மேற்சொன்ன திருக்கதைகள் விளக்குகின்றன.
பிரம்மதேவனின் அகங்காரத்தை அடக்க, அவருடைய சிரத்தைக் கொய்த பைரவ மூர்த்தியை `பிரம்மசிரக் கண்டீஸ்வரர்’ என்று அழைப்பார்கள்.
ஞானநூல்கள் பலவும், பெரும் வல்லமை மிகுந்த பைரவ மூர்த்தியிடம் உலகைக் காக்கும் பொறுப்பை சிவபெருமான் ஒப்படைத்ததாகச் சொல்கின்றன. ஆகவே அவரை வழிபட்டால், தீய வினைகளும், சத்ரு தொல்லைகளும் நம்மை நெருங்காது.
நம்மை எதிரிகளிடம் இருந்தும் , உடன் இருந்தே தீமை விளைவிக்கும் துரோக சிந்தனை கொண்டவர்களிடம் இருந்தும், மந்திர தந்திரங்களால் விளையும் தீமைகளில் இருந்தும் நம்மை காப்பவர் பைரவ மூர்த்தி.
நமது செல்வம் கொள்ளை போய்விடாமலும் வீண் விரயம் ஆகாமலும் தடுத்து, அச்செல்வங்களால் மகிழ்ச்சி அடைய துணை நிற்பவர் பைரவ மூர்த்தி. மேலும் அவர் வழக்குகளில் வெற்றி தருவார், தீய வழியில் சென்று விடாமல் தடுத்தாட்கொள்வார்.
பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும்.சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
பைரவ தியானம்
ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம் |
டக்கா சூல கபால பாசகதரம்
ரக்ஷாகராம் பைரவம் ||
நிர்வாணம் ஸுநவாஹனம்
த்ரிநயனஜ் சாநந்த கோலாஹலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||
கருத்து: சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத் திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும், பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக் கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
வைரவப் பெருமானை அஷ்டமியிலும், சதுர்த்தி திதிகளிலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்குவது விசேஷம். இவரை செந்நிற மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.அதேபோல் செவ்வாடை அணிவித்து, செந்நிற பழங்களை நிவேதனம் செய்து வழிபடலாம்.
அதேபோன்று அனுதினமும் ராகு கால பூஜையில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்வது மிகவும் நன்மைபயக்கும். இதனால் நம் மனதில் தாழ்வு மனப்பான்மை அகலும்; நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
பைரவர் அவதரித்தது கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி. இந்த புண்ணிய தினத்தை `காலபைரவாஷ்டமி’ என்று போற்றுவார்கள். இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கும். இதில் கலந்துகொண்டு பைரவரைத் தரிசித்து வழிபடுவது, அதீத பலன்களைப் பெற்றுத் தரும்.
பைரவ திருவடிவங்களில் மிக முக்கியமானது ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ வடிவம் ஆகும்.
இவர் பொன் நிறத்தில் திகழ்பவர். இவருடைய பின் கரங்களில் தாமரை, சங்கு ஆகியனவும், முன் கரங்களில் அபய-வரத முத்திரைகளும் திகழ்கின்றன.
இவர் மஞ்சள் பட்டாடைகளை அணிந்திருப்பார். மாணிக்கம் போன்ற அணிகளால் இழைக்கப்பட்ட தங்க அட்சய பாத்திரத்தை ஏந்திருப்பார். தமது மடியில் ஸ்வர்ணாதேவியை அமர்த்தியிருப்பார். இந்த தேவி, தன்னுடைய திருக்கரங்களில் தங்கக் காசுகள் நிரம்பிய குடத்தை வைத்திருப்பாள்.
ஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவரும், ஸ்வர்ணாதேவியும் தங்களை வழிபடும் பக்தர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அள்ளி வழங்குபவர்கள்.
புராணங்கள் பஞ்ச பைரவர்கள், நவ பைரவர்கள், அஷ்ட பைரவர்கள் என்று பல வகையாக பைரவ வடிவங்களை விளக்கிக்கூறுகின்றன. இதுவரை, எண்ணில்லாத அரக்கர்களை அழிக்க எண்ணில்லா முறை அவதரித்து, பகைவர்களை அழித்தும் மன்னித்தும் அருள் புரிந்துள்ளார் பைரவமூர்த்தி. அவ்விதம் தோன்றிய அத்தனை வடிவங்களையும் போற்றி வணங்குவது கடினம் என்பதால், அவற்றில் முதன்மைபெற்ற எட்டு இடங்களை தேர்ந்தெடுத்து, அஷ்ட பைரவர்களாக வணங்கி வருகிறோம்.
சிவபெருமான் அசுரனை அழிக்க மகாபைரவராக எழுந்தருளும் வேளையில், அவரது திருமேனியில் இருந்து அவரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்த அஷ்ட பைரவர்கள், அந்தகாசுர வதத்தின்போது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அஷ்டமாதர்களான பிராமி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகிய எண்மரை மணந்தனர்.
அஷ்ட பைரவர்களை `அஷ்டபால பைரவர்கள்’ என்றும் அழைப்பது உண்டு.
அஷ்ட பைரவர்கள் யார் யார் ?
எட்டு திசைகளில் இருந்து உலகை பாதுகாப்பவர்களாகவும், அஷ்ட ஐஸ்வரியங்களுக்குத் தலைவர்களாகவும் திகழ்பவர்கள் அஷ்ட பைரவர்கள். இந்த பைரவர்கள் எண்மருக்கும் அவரவர் குணநலன்களுக்கு ஏற்ப திருப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதுகுறித்த தகவல்களை விரிவாகக் காண்போம்.
1.அசிதாங்க பைரவர்: திகம்பரத் தோற்றம் கொண்டவர்; வெல்லமுடியாத அங்கங்களை உடையவர்.
தேவி: பிராமி
வாகனம்: அன்னம்
திசை: கிழக்கு
நிறம் : வெண்மை
2.ருரு பைவர்: அளவில்லாத ஆற்றலுடையவர்; தலைமை பண்பாளர்.
தேவி: மஹேஸ்வரி
வாகனம்: காளை
திசை: தென்கிழக்கு
நிறம்: ஸ்படிகம்
3. சண்ட பைரவர்: இயற்கைக்கு மாறான எதையும் எளிதில் நிகழ்த்திவிடும் ஆற்றல் மிகுந்தவர்.
தேவி: கௌமாரி
வாகனம்: மயில்
திசை: தெற்கு
நிறம்: பொன்,
. குரோதனர்: கோபத்தை மனதில் அடக்கியவர்; பேராற்றல் அளிப்பவர்.
தேவி: வைஷ்ணவி
வாகனம்: கருட வாகனம்
திசை: தென்மேற்கு
நிறம்: கறுப்பு
5. உன்மத்தர்: அடியார்களுக்கு அருள்வதில் மெய்ம்மறந்து செயல்படுபவர்.
தேவி: வாராஹி
வாகனம்: குதிரை
திசை: மேற்கு
நிறம்: பொன் நிறம்
6. கபால பைரவர் : காலத்தை வென்றவர்; கபால மாலை அணிந்தவர்.
தேவி: மஹேந்திரி
வாகனம்: யானை
திசை: வடமேற்கு
நிறம்: பத்மராக காந்தி
7. பீஷ்ணர்: தான் அழிவற்றவராக இருப்பது போல், பக்தர்களுக்கும் அழிவில்லாத செல்வத்தை வழங்குபவர்.
தேவி: சாமுண்டி
வாகனம்: சிம்மம்
திசை: வடக்கு
நிறம்: சிவப்பு
8.சம்ஹாரர்: மேலான தர்மத்தை காக்கும்விதம், அநீதியை அழிக்கும் வல்லமை கொண்டவர்,
தேவி: சண்டிகாதேவி
வாகனம்: நாய் .
திசை: வடகிழக்கு
நிறம்: வெண்மை
பைரவர்களின் இந்தத் திருவடிவங்கள் எட்டும் சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களாக நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் நீக்கமற நிறைந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனவாம். அஷ்டபைரவர்களை வழிபடுவதால் மனநிம்மதி கிடைக்கும்.
ஆன்மீக நூல்களில் இருந்து தொகுத்தவர்:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்! (வைரவர் வழிபாடு)