தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு?
`பார்வதிதேவி, நீராடும் வேளையில் தனது பாதுகாப்புக்காக ஒரு புதல்வனைத் தோற்றுவித் தாள். அவரே நாம் வணங்கும் பிள்ளையார்’ என்கிறது சிவபுராணம். எனவே, அவர் நீர் நிலைகளின் கரையில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. ‘முதல் படைப்பு நீர்!’ என்கிறது வேதம். பரம்பொருளில் முதல் தோற்றம் பிள்ளையார். முதலும் முதல்வனும் அருகருகே இருப்பது சிறப்பு தானே.
சைதன்யமும் ஜடப்பொருளும் சேரும்போது… அதாவது, சிவனும் பார்வதியும் சேரும்போது புதுப் பொருள் ஒன்று தோன்றும். அப்படித் தோன்றி யவரே முழுமுதற் கடவுளான பிள்ளையார். நீரில் அத்தனை தேவதை களும் குடிகொண்டுள்ளன என்று வேதம் கூறும் (ஆபோவை ஸர்வா தேவதா). அத்தனை ஜீவராசிகளது மொத்த உருவம் பிள்ளையார். மனித ரூபமும் விலங்கு ரூபமும் இணைந்த வடிவானவர். எல்லா உயிரினங்களும் தன்னுள் அடக்கம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.
அறிவு புலன்கள் கழுத்துக்கு மேலும், செயல் புலன்கள் உடலிலும் இருக்கும். வேதம் சொல்லும் கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம் என்ற பிரிவுகளே உடலும், தலையுமாகக் காட்சியளிக் கின்றன. வேதத்தின் கடைசிப் பகுதி உபநிடதம். அதற்கு, ‘வேத சிரஸ்’ என்று பெயர். அது அளவிலும், கருத்தாழத்திலும் மிகப் பெரியது. இதைச் சுட்டிக்காட்ட யானைத் தலையுடன் பிள்ளையார் காட்சியளிப்பது பொருந்தும். உடல் செயல்பட தலையும்; தலை செயல்பட உடலும் வேண்டும். அதாவது உழைப்பும் (செயல் புலன்களும்) வேண்டும்; அறிவும் (அறிவுப் புலன்கள்) வேண்டும். காலையில் நீராடியதும், நமது உழைப்பும் அறிவும் சிறப்புற்று விளங்க விநாயகரைப் பணிவது சிறப்பு.
நெருப்பில் தோன்றிய முருகன், சரவணப் பொய்கையில் உருப்பெற்றார்.
நீரில் தோன்றிய தாமரையில் பிரம்மன் வீற்றிருக்கிறார். பாற்கடலை இருப்பிடமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்ரீமந் நாராயணன். மலையில் இருந்தாலும், தலையில் கங்கையைச் சுமக்கிறார் ஈசன். இந்தத் தெய்வங்கள் அனைவருமே படைப்புக்கு ஆதாரமான நீருடன் இணைந்திருப்பவர்கள். மும்மூர்த்திகளை, அவர்களது இருப்பிடம் சென்று வணங்குவது சிரமம். ஆனால், மும்மூர்த்திகளின் இணைப்புடன் விளங்கும் மோதகப்பிரியனை வணங்குவது சுலபம். கருணைகூர்ந்து நாம் நீராடும் இடத்துக்கே வந்து அருள்பாலிப்பது அவரது தனிச் சிறப்பு.
குடமுழுக்கின்போது, நீரில் தங்கும் இறை சாந்நித்தியம் சிலைகளில் ஒன்றி விடும். மறை ஓதுபவர்கள் காலைக் கடனை தொடங்கும்போது (அதிகாலை நீராடும் வேளையில்) தனது பவித்ர விரலால், ‘ஓம் கேசவாய நம’ என்று எழுதுவார். இதில் உள்ள பிரணவத்தில் பிள்ளையார் உறைந்திருக்கிறார்.
ஓங்காரத்தின் உட்பொருள் அவர். ‘சூடு’ என்ற இயல்பு, நெருப்பை விட்டு விலகாது. ‘குளிர்ச்சி’ தண்ணீரை விட்டு விலகாது. அதுபோல, ‘ஓம்’ என்ற பிரணவமும் பரம் பொருளை விட்டு விலகாது. பிள்ளையாரும் நீரோடு ஒன்றியிருப்பார். ஆகையால், அவரை நீர் நிலைகளின் அருகில் வைத்து வணங்குவதும் சிறப்பு.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு?