தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இறைவழிபாட்டை இடைவிடாது தொடர்வோம்!!!
எங்களின் செயல்பாடுகள் , நாம் செய்யும் நன்மை தீமைகள் இப்படியான பல காரணிகள் அடிப்படையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இதில் இறைவன் அருள் என்பது மிக மிகப் பிரதானம். ஏதும் கொஞ்சம் மனத்துன்பம் அடையும் போது சிலர் இறைவனை நிந்திப்பதைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். கடவுள் கண் திறக்கவில்லை என்பார்கள்! கடவுளுக்கு கண் இல்லை என்பார்கள்! அப்படி எண்ணுவது மிக மிகத் தவறு!!!
கடவுளிடம் நாம் செலுத்தவேண்டியது அன்பு. அன்பானது எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காது. எதிர்பார்ப்பு வியாபாரத்தில்தான் இருக்கும்.
எப்படி நம் தாய் தந்தையரிடம் அன்பு செலுத்துவது நம் கடமையோ, அதுபோன்று இந்த உலகைப் படைத்து, காத்துவரும் இறைவனுக்கு பூஜை செய்வது என்பது நம் முதல் கடமை.
இன்பமோ அல்லது துன்பமோ மனத்தில் சஞ்சலம் இல்லாமல், ஒரே நிலையில் இருப்பதே சிறந்த பக்தனுக்கு உரிய இலக்கணம். பூஜை செய்வது என்பது நம்முடைய நன்மைக்காகத் தானே தவிர, கடவுளுக்கு அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அவரை உத்தேசித்து நாம் பூஜை செய்தாலும்கூட, அதன் பலன் என்னவோ நமக்குத்தான் கிடைக்கப்போகிறது. அவர் விருப்புவெறுப்பு அற்றவர்.
நமக்கு சில நேரங்களில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், மூச்சை நிறுத்திவிட்டால் நல்லது என்று யாராவது சொன்னால் கேட்பீர்களா? இல்லையே. சரியான முறையில் நாம் மூச்சுவிட்டால்தான் நாம் உயிர் வாழ முடியும். அதேபோன்று நமக்குத் துன்பம் ஏற்படும்போது யாராவது வந்து நம்மிடம் பூஜை செய்வதை நிறுத்திவிடச் சொன்னால், அதைக் கேட்காமல், மேலும் சிறப்பான முறையில் சிரத்தையுடன் கடவுளை வழிபடுவதே சிறந்த பக்தி.
உண்மையான பக்திமான்கள் இப்படித்தான் செய்வார்கள்.
நம்முடைய இந்த தர்ம வரலாற்றில் எத்தனையோ மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றோர் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும், தங்களுடைய அசைக்க முடியாத பக்தியினால்தான் கடவுளை அடைந்தார்கள். இதை நினைவில்கொண்டு, துன்பங்கள் வரும்போது மேலும் கடவுள் வழிபாட்டினைத் தொடர வேண்டும். நாம் இந்த உலகத்தில் வெற்றி அடையவும், அதன் பிறகு எல்லையில்லாத ஆனந்தமயமான முக்தியைப் பெறுவதற்கு உகந்த வழியாகும். இந்த வழியைத்தான் நம் முன்னோர்கள் காட்டியுள்ளார்கள்.
ஆகவே இடைவிடாது இறைவனை வழிபடுவோம். நிச்சயம் பலன் உண்டு நண்பர்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
இறைவழிபாட்டை இடைவிடாது தொடர்வோம்!!!