தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆலயம் சென்று வழிபடுவோம்!!
ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது! மகோத்சவங்கள் நடைபெறுகின்றன , அலங்கார உத்சவங்கள் நடைபெறுகின்றன! அடியவர்களின் நன்மை கருதியே இவை நாடைபெறுகின்றன!
”இந்த இந்த வடிவங்களில் இன்ன இன்ன மாதிரி என்னை வழிபடு” என்று கட்டளையிட்டிருப்பதும் இறைவனே.
இல்லையென்றால், இறைவனுடன் உறவாடிய நம்முடைய நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து, துதிப் பாடல்களைப் பாடி, அவற்றை நமக்குப் பொக்கிஷமாக அளித்திருக்க மாட்டார்கள். அவர்கள் அளித்த பொக்கிஷங்களைத்தான் நாம் இன்று பின்பற்றுகிறோம்.
இறைவனை ஒரு வடிவத்தில் கோயிலில் வைத்து வழிபடுவது உயர்ந்த நிலையே. கோயிலில் நடைபெறும் வழிபாடுகள், ஞானியர், குறிப்பிட்ட நபர்கள் என்று தனிப் பட்ட சிலருக்காக மட்டுமல்லாமல், உலகத்தின் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான வழிபாடுகள்தான் ஆலயங்களில் நடைபெறுகின்றன!
அனைத்து இடங்களிலும் இறைவன் இருந்தாலும், ஆலயங்களில் சிற்பியின் கை வண்ணத்தில் உருவான சிலா விக்கிரகங்கள், ஆசார்யர்களின் மந்திர சக்தியினால் – பிரதிஷ்டை என்னும் செய்கையினால் உயிர் பெற்றதாகிவிடுகின்றன.
தற்காலத்தில் ‘ஆக்டிவேஷன்’ என்று கூறுவதைப்போல், எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறை சக்தியை, அனைவரின் நலன் வேண்டி ஓர் இடத்தில் நிலைநிறுத்தச் செய்யும் உயர்ந்த ரகசியத்தை நம்முடைய ஆலயங்கள் நமக்கு அருளியுள்ளன. இன்றளவும் ஆசார்ய பெரு மக்களும் சிற்பிகளும் இவற்றைப் பின்பற்றியே செய்து வருகிறார்கள்.
அனைவரின் நலனுக்காக இறைவன் திருவுள்ளபடி அமைந்தவையே ஆலயங்கள். அங்கு இறையருள் நிறைந்திருப்பதை அனுபவத் தால் உணரலாம். ஆலயங்களில் சிலை வடிவத்தில் உறைந்திருக்கும் இறை வடிவின் வழியாக இறையுணர்வைப் பெறுவதை, ஓர் எளிய முறையாக நம் சனாதன தர்மம் அளித்துள்ளது.
ஆனபடியினால்தான் நண்பர்களே, வீட்டில் நாம் வழிபாடு இயற்றினாலும் ஆலயம் சென்று வழிபடுவது மிகப் பிரதானம் என்று நாம் வழியுறுத்துகிறோம்! பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆலயம் சென்று வழிபடும் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும்.
ஆலயம் சென்று வழிபடுவோம் , பலன் அடைவோம்!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயம் சென்று வழிபடுவோம்!!