கடவுளையும் பண்டிகைகளையும் நிந்திப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆன்மீக நண்பர்களே, அன்பர்களே! எம்மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்துப் பண்டிகைகள் வரும் போது அது தீபாவளியாக இருக்கலாம் , சூர சம்ஹாரமாக இருக்கலாம், சிவராத்திரியாக இருக்கலாம், ஆடிப் பூரமாக இருக்கலாம், சித்திரைப் புத்தாண்டாக இருக்கலாம் , ஒரு சிறு கூட்டம் வன்மம் கக்கத் தொடங்கி விடும்! அந்தக் கூட்டம் கடவுள் இல்லை என்று சொல்லும் அதனூடாக வந்த பண்டிகைகள் போய் என்று சொல்லும்! அவற்றை புறம் தள்ளுங்கள்!
பார்க்க முடியாததை நம்ப மாட்டேன் என்பது அறிவுடைமை ஆகாது. பார்க்க முடியவில்லை என்றாலும் பலவற்றை நம்புகிறார்கள்.
ஆனால் கடவுள் என்று வரும்போது பார்த்தால்தான் நம்புவேன் என்கிறார்கள். இது சொல்லிக் கொடுக்கப்பட்ட விதண்டாவாதம். அனுபவத்தை ஒப்புக்கொள்ளாத வீண் சவடால்.
கடவுள் என்பது உணர்ந்து கொள்வது, அறிந்து கொள்வது இல்லை என்பதை எத்தனை முறை எத்தனை ஞானியர் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாத ஒரு சிறு கூட்டம் எழுப்பும் வீண் கூச்சல் இது என்று விலகிச் சென்று விடுங்கள். நமக்குச் செய்ய வேண்டிய பணிகள் ஆயிரம் உண்டு.
ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் ஆண்டவனைப் பார்க்க வேண்டியதில்லை. இறைவன் மீது நம்பிக்கையே இல்லாதவர்கள் அவரைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
நண்பர்களே, நாங்கள் எல்லோரும் இறைவனின் அம்சம். இறையின் பெருங்கருணையால் மானுட வடிவெடுத்து அவன் புகழைப் பாடும் பெரும் பேறு பெற்றவர்கள். தேனில் இருந்து இனிப்பை பிரிக்க முடியாது என்பதைப் போல படைப்பில் இருந்து படைத்தவனையும் பிரிக்க முடியாது. படைத்தவனின் சாயலே இல்லாதவர்கள் வேண்டுமானால் இறைவன் இல்லை என்று கூறிக் கொள்ளட்டும்.
பூமியிலிருந்து நிலவு இத்தனை கி.மீ தூரம் என்று உங்களுக்குத் தெரியும். அதை அறிவியலாளர் அளந்து சொல்லி இருப்பதால் நம்புகிறீர்கள். ஒருவேளை அதை நானே அளந்தால்தான் நம்புவேன் என்றால், பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளக்க உங்களிடம் தகுந்த வசதிகள் இருக்க வேண்டும், இல்லையா! அது போலத்தான் கடவுளை நேரில் கண்டால்தான் நம்புவேன் என்று சொல்வதும்! கடவுளை நீ நம்பவில்லை என்றால் கடவுள் உனக்கு ஏன் நேரில் வரவேண்டும்!!!
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணருங்கள். நீங்கள் அறிந்து கொண்ட எதுவுமே உங்களால் உருவானதில்லை. நிலா, பூமி, காற்று என்று எதற்கும் நீங்கள் பெயர் வைக்கவில்லை. எதையுமே நீங்கள் கண்டறியவில்லை. ஆனால் அவற்றை அப்படியே நம்புகிறீர்கள்.
கடவுளையும் பண்டிகைகளையும் பரிகாசம் பண்ணுபவர்களுக்கு திருவாசகம் பதில் சொல்கிறது கேளுங்கள்.
“கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்..”
நல்ல அடியார்களின் நடுவே நின்று அருளும் ஈசனைப் பற்றிக் கொள்ளுங்கள். நலமே விளையும்!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
May be an image of temple
கடவுளையும் பண்டிகைகளையும் நிந்திப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்!!!
Scroll to top