ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள்

நன்றி: மதிப்புக்குரிய தில்லை – கார்த்திகேயசிவம் அவர்கள்.
ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மாதொருபாகனார்க்கு வழி வழி அடிமைசெய்யும் சிவவேதியர்கள்.சிவபூஜைக்காகவே தோன்றியவர்கள்.
ஆதிசைவர்கள் சைவசமத்தின் முதல் நூல்களாக விளங்கும் வேதங்களை பொதுவாகவும், ஆகமங்களை சிறப்பாகவும் கொண்டு சிவபூஜை செய்பவர்கள்.அதோடு தேவார திருமுறைகளை போற்றி ஓதி வருபவர்கள்.
இன்றும், பல கோயில்களில் சிவாச்சாரியார்கள் பூஜையின் நிறைவில் வேத ஆகமங்களை ஓதுவதோடு, திருமுறைகளையும் அவர்களே ஓதி பூஜையை நிறைவு செய்கின்றனர்.
சிவாச்சாரியார்கள் சிறு கணபதி ஹோமம் செய்தாலும் தேவாரம் ஓதாமல் நிறைவு செய்வதில்லை.
சிவாச்சாரியார்கள் வேதாகமங்களையும் திருமுறைகளையும் போற்றும் மரபுடையவர்கள்.
தேவார திருமுறைகளை தில்லையில் கண்டெடுத்து தொகுத்து தந்தருளிய ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் ஓர் ஆதிசைவரே என்பதும் சிந்திக்கத்தக்கது.
கோயிலின் கற்பக்கிரஹத்தில் பிரதான சிவாச்சாரியாரின் அங்கமாகவே அதாவது அவருக்கு உதவியாகவே வேதம் ஓதுபவரும், ஆகமம் ஓதுபவரும், திருமுறை ஓதுபவரும் உள்ளனர்.
கோயில்களில் கடந்தகாலங்களில் சிவாச்சாரியார்களே பூஜை செய்வதோடு, அவர்களே திருமுறைகளும் ஓதி வந்தனர் என்பதை கல்வெட்டுகளில் பல இடங்களில் காணமுடிகின்றது.
திருமுறைகளை ஞானநூல்கள் என்று அழைப்பார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், திருவாலீஸ்வரம் என்ற தலத்தின் திருமதில்களில்,
திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியனது 3 ஆம் ஆட்சியாண்டில் அமைந்த சாசனம் ஒன்றில் (359 Of 1916),
திருஞானம் விண்ணப்பம் செய்வதற்க்குச் சிவப்பிராமணர் எண்மர் கோளகிமடத்து ஞானாமிர்தாசாரிய சந்தானத்தைச் சார்ந்த புகலிப் பெருமான் என்பாருடன் உடன்படிக்கையின் பேரில் நிலம் பெற்றனர் “என்று வரையப்பெற்றுள்ளது.
ஆக கோளகி மடம் சார்பாக எட்டு சிவபிராமணர் தேவாரம் ஓத திருவாலீஸ்வரர் கோயிலில் நியமிக்கப்பட்டது தெரியவருகிறது.
இங்கு சிவப்பிராமணர் என்பது சிவாச்சாரியார்களை சுட்டும்.
இங்கு குறிப்பிடும் கோளகி மடம் என்பது வடநாட்டு கோளகிமடத்தின் கிளைமடமாகும். இது ஒரு ஆகம மடமாகும்.
திருஞானம் என்பது மூவர் தேவாரங்களையே குறிக்கும் என்கிறார், கல்வெட்டு ஆய்வாளர்
கா.ம.வேங்கடராமயா.
மேலும், திருத்தவத்துறை ஸப்த ரிஷீஸ்வரர் கோயில் மூலத்தான தென் சுவரில் (கல்வெட்டு எண் 99Of 1929),
“மதுரை கோப்பரகேசரிவர்மனுடைய 37வது ஆட்சியாண்டில், சிவகோசரி பிடாரன் என்பவர் திருத்தவத்துறை பட்டாரகர் (சுவாமி) திருமுன்பு நித்தம் மூன்று காலமும் சிவப்பிராமணர் இருவர் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய, நிலம் உதவிய செய்தி கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சிறப்பு இதில் யாதெனில், மேற்கண்ட மன்னனின் பெயரன் ராஜகேசரி இரண்டாம் பராந்தக சோழன் 3ஆம் ஆண்டு கல்வெட்டில்,
அவ்வாறு சிவபிராமணர்கள் திருப்பதியம் ஓத விடப்பட்ட மானியம் போதாமையால், அந்த சிவகோசரி பிடாரன் வாரிசு ஒருவன், மேலும் சில நிலங்களை விலைக்கு வாங்கி, அதன் நெல் வாரத்தை திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்க்கு வழங்கிய செய்தியும் கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து சிவபிராமணர்கள் ஆலயங்களில் திருப்பதியம் விண்ணப்பம் செய்ததையும், அவர்களை தலைமுறை தலைமுறைகளாக மன்னர் முதல் சைவசமய பெருங்குடிகள் வரை ஆதரித்துவந்ததையும் உணர்ந்துக்கொள்ளலாம்.
மேலும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் இரண்டாம் பிரகார கல்வெட்டில், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் 15 வது ஆட்சியாண்டில்,
“திரிபுவன சக்கரவர்த்தி கோநேரின்மை கொண்டான் கீழ் வேம்பநாட்டு உடையார் திருநெல்வேலி உடையார் கோயில் பதிபாத மூலப்பட்டுடைப் பஞ்சாசாரிய தேவகன்மிகளுக்கு, இறைவன் திருமுன் திருஞானம் ஓத அமைக்கப்பட்டவர்களாகிய திருஞானசம்பந்தன், வன்றொண்டர் சிஷ்யன் அறம் உரைத்த பெருமாள் இவரும், இவர் வர்க்கத்தில் திருஞானம் ஓதுவார்க்கும் யாண்டு பதினைந்தாவது முதல் நிவந்தம் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
இங்கு பதிபாத மூலப்பட்டுடைப் பஞ்ச ஆச்சாரியர்கள் என்போர் ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியார்கள்.
அதாவது,
பதி -இறைவன்,
பாதம் -திருவடி,
மூலப்பட்டுடை -மூலஸ்தானம் என்ற கற்பக்கிரகம்,
பஞ்ச ஆச்சார்யர் -சிவபெருமான் திருமுகத்தில் அவரித்த ஐந்து ரிஷி வம்சத்தார்.
ஆக மூலஸ்தானத்தில் இறைவன் திருவடியை தீண்டி பூஜிக்கும் பஞ்சாசாரிய வம்சத்தினராகிய ஆதிசைவர்கள் என்பது பொருள்.
மேற்காண் கல்வெட்டு மூலம் நெல்லையப்பர் ஆலயத்திலும் சிவாச்சாரியார்கள் திருப்பதியம் ஓதும் தொண்டு செய்துள்ளது தெரியவருகின்றது.
இவ்வாறு ஆதிகாலம் முதல் சிவாச்சாரியார்கள் ஆகமபூஜையோடு, திருமுறைகளையும் சித்தாந்தங்களையும் கண்போல் போற்றியே வந்துள்ளார்கள்.
ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிதமிழ் இயக்கத்தின் பெயரிலும், திராவிட வாடையாலும் பிரமணர் -பிராமணர் அல்லாதோர் கலகம் ஏற்படுத்தி பல நூறுஆண்டுகளாக திருமுறைகளை போற்றிவந்த சிவாச்சாரியார்களை தமிழ் விரோதி ,திருமுறை விரோதி பிராமணர்களாக சித்தரித்து,
சிவாச்சாரியார்களை ஏதோ சமஸ்கிருத வழியில் வந்தவர்களாக கதைகள் கற்ப்பித்து, ஒரு இரண்டு தலைமுறை சிவாச்சாரிய வாரிசுகளிடம் இருந்து தமிழுக்கும், திருமுறைகளுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் வரலாற்றை சிலர் புணைந்து உருவாக்கியுள்ளனர்.
எனவே,இவ்வரலாற்று திரிபுகளை அறிந்து,
மன்னர்காலம் முதல் சிவாச்சாரியார்கள் ஆகமபூஜையோடு, திருமுறைகளை விண்ணப்பம் செய்து வந்துள்ளதை, இக்கால இளம் சிவாச்சாரியார்கள் உணர்ந்து திருமுறைகளையும், சித்தாந்தந்களையும் போற்றவேண்டும்.
சிவார்ப்பணம் .
@பதிவு.தில்லை கார்த்திகேயசிவம்.
Prepared:
Panchadcharan Swaminathasarma,
E Magazine Editor,  Modern Hindu Culture.Org
www.modernhinduculture.com
ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள்
Scroll to top