புதிதாக செய்து பிரதிஷ்டை செய்யப் பட உள்ள இறைவனின் சிலைகளின் கண்கள் திறக்கும் வைபவம்!!!

புதிதாக செய்து பிரதிஷ்டை செய்யப் பட உள்ள இறைவனின் சிலைகளின் கண்கள் திறக்கும் வைபவம்!!!
கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிலையை சிற்பி செய்து முடித்தவுடன், அச்சிலைக்கு கண் திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். இது மிக முக்கியமானது. ஸ்தபதியானவன் குளித்து, புத்தாடை உடுத்தி, பூணூல் அணிந்து (சிலை செய்யும் விஸ்வகர்மா சமூகத்தினர் பூணூல் அணிவர்) நெற்றிக்குத் திலகம் இட்டு, விரல்களில் மோதிரம் அணிந்து, இடது தோளில் மேலாடை தரித்த பின், முதலில் கணபதி பூஜை செய்ய வேண்டும். பிறகு படிமத்திற்கு (விக்கிரகம்) அருகில் அரிசியால் பீடம் அமைத்து, அதன் மீது கலசத்தை வைக்க வேண்டும்.
கலச பூஜை செய்து, அக்கலச நீரால் உரிய தேவதையை படிமத்தில் ஆவாஹனம் செய்து, தேவதையின் மந்திரத்தை ஜபித்து, படிமத்தை பூஜை செய்ய வேண்டும். இத்தருணத்தில் மணி ஒலித்து, மங்கல கோஷங்கள் முழங்கச் செய்தல் வேண்டும். பின், சிற்பியானவன் பிரம்மனை வணங்கி, அவன் அனுமதி பெற்று, கண் திறப்பதற்கு படிமத்தின் அருகில் சென்று, பொன்னால் ஆன உளியால் முதலில் வலது கண்ணைத் திறக்க வேண்டும். பின், இடது கண்ணையும், நெற்றிக் கண்ணையும் திறக்க வேண்டும்.
இறைவனின் வலது கண் சூரியனைக் குறிப்பதால், சூரிய பீஜ மந்திரத்தை மனதில் துதித்து, கண் திறக்க வேண்டும். அதே போன்று, இடது கண் சந்திரனைக் குறிப்பதால், சந்திர பீஜத்தையும், நெற்றிக் கண் அக்னியைக் குறிப்பதால் அக்னி பீஜத்தையும் துதித்து செதுக்குதல் வேண்டும். இதற்குப்பின் கூரிய உளியால் ஒளி மண்டலம் மற்றும் வழி மண்டலம் ஆகிய இரண்டையும் தெளிவுறச் செய்தல் வேண்டும். இரு கண்கள் மட்டும் இருப்பின், அவ்விரண்டு கண்களைத் திறத்தல் வேண்டும். பல முகங்கள் இருப்பின், அம்முகங்களில் உள்ள கண்களையும் திறந்திடல் வேண்டும். படிமத்திற்குக் கண் திறக்கும்போது, ஸ்தபதியைத் தவிர வேறு யாரும் பார்க்கக்கூடாது.
எனவே, படிமத்திற்கு நாற்புறமும் திரையிட்டே இப்பணியைச் செய்தல் வேண்டும். தூப, தீபம் காட்டி, பாலும், பழமும், தேனும் படைக்க வேண்டும். இதுவும் திரைக்குள்ளே நடைபெற வேண்டும். கண்கள் திறந்தவுடன் முதன் முதலில் முகம் பார்க்கும் கண்ணாடியை (புதியது) சுவாமிக்கு முன் காட்டி, தர்ப்பண தரிசனம் செய்வதுடன், பசுவைக் கன்றுடன் கொண்டு வந்து நிறுத்தி பார்த்திடச் செய்தல் வேண்டும். பின், சுமங்கலிப் பெண்கள், நவதானியங்கள், கன்னியர், சந்நியாசிகள், வேத விற்பன்னர்கள், இறுதியாக ஆலயம் கட்டுவித்த எஜமானன் என வரிசை கிரமமாக சுவாமி முன் நிறுத்தி, வணங்கிடச் செய்ய வேண்டும். இவை ஆகம விதிகள்! (”சிவ ஆகமச் செந்தூல்’ எனும் நூலிலிருந்து)

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization.
www.modernhinduculture.com
புதிதாக செய்து பிரதிஷ்டை செய்யப் பட உள்ள இறைவனின் சிலைகளின் கண்கள் திறக்கும் வைபவம்!!!
Scroll to top