சடங்கு சம்பிரதாயங்களை கேலி பண்ணாதீர்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நம்மில் பலர் தங்கள் மத அனுட்டானங்கள், குடும்ப வழமை, பெரியவர் முடிவுகள், போன்ற அடிப்படைகளில் பல சடங்குகளை செய்து வருகிறார்கள். நண்பர்களே, நீங்கள் இதை பின்பற்றுகிறீர்களோ இல்லையோ அது வேறு விடயம், ஆனால் இந்த சடங்குகளை பின்பற்றுபவர்களை கேலி பண்ணாதீர்கள். பிரதானமாக தமிழ் நாட்டில் சிலர் கேலி பண்ணுவது போல அடுத்த மாநிலங்களில் கேலி பண்ண முடியாது.
ஒரு சடங்கை அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் பரவாயில்லை. அந்த மரபை அவர் அவரையும் அறியாமல் காப்பாற்றியபடி அடுத்த தலைமுறைக்கு ஏந்திச் சென்று கொண்டிருக்கிறார் என்பதே வெளிப்படை உண்மை. அடுத்ததாக, என்றோ ஒருநாள் தான் ஏன் இம்மாதிரி விபூதி பூசிக் கொள்கின்றோம் என்று ஆழமாக யோசிக்கும்போது தத்துவத்தை நோக்கி நகர்ந்து விடுவார்.
ஞான யோகத்தில் விபூதி என்பது எல்லாம் அழிந்த பிறகும் அழியாத ஆத்ம சொரூபமாக மிஞ்சி நிற்பதுதான் விபூதி என்று ஆழமாக அறியும்போது, விபூதியை தரிக்கும்போதே அந்தத் தத்துவம் அவருள் அகக் கதவுகளை திறக்கும். எல்லோரும் இப்படி புரிந்துதான் செய்கிறார்களா என்றால் என்றோ ஒருநாள் நிச்சயம் புரியும் என்பதுதான் உண்மை.
நாம் தொடர்ந்து செய்யும் காரியங்கள் நம்முள் நம்மையும் அறியாது ஒரு ஆழத்திற்குள் சென்று கொண்டேயிருக்கும். அந்தச் சடங்கு எதைக் குறிக்கின்றதோ அந்த இலக்கானது மேல் மனதிற்கு தெரிய வரும். இந்து மதத்தில் நிறைய சடங்குகள் மிகவும் தொன்மையான காலத்திலிருந்து வருவதாகும். நிறைய பழங்குடி மரபுகளிலிருந்து வருபவை. எனவே, இங்கு நாம் அன்றாடம் கடைபிடிக்கும் சடங்குகளை எந்தவித கேள்வியுமில்லாமல் ஒதுக்குவது கூடாது. ஏன் இந்தச் சடங்கை இத்தனை வருடங்கள் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள் என்று யோசியுங்கள்.
அப்படிச் சென்றால் ஒரு வரலாற்று நிகழ்வை சடங்காக மாற்றி வைத்திருப்பதை அறிவீர்கள். அல்லது ஆன்மிக மரபில் வரும் ஒரு தத்துவத்தை உணர்த்தும்படியாக இருக்கும். அல்லது மூதாதையர்களின் சம்பிரதாயங்களை ஏந்தி வருவது புரியும். பலதும் வழிகாட்டி பலகைபோல செயல்படுவதாகவும் இருக்கும். அடுத்தவர் சடங்கு சம்பிராதாயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைக்காதீர்கள் நண்பர்களே!
 
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture.Org
www.modernhinduculture.com
சடங்கு சம்பிரதாயங்களை கேலி பண்ணாதீர்கள்.
Scroll to top