தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மந்திரங்களின் மகிமை என்ன? வலிமை என்ன?
கோயிலின் உச்சியில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. அபிஷேகங்கள் நடைபெறுகின்றன, குடத்தில் இருக்கும் நீர் சற்று முன்னர்தான் எதிரேயுள்ள குளத்திலிருந்து அல்லது கோவில் கிணற்றில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதுவரை சாதாரணமாக இருந்த நீர் இப்போது புனித தீர்த்தமாக, கும்பாபிஷேக தீர்த்தமாக மாறிவிட்டது.
அபிஷேகம் நடந்த உடன் அந்த நீரை பருகவோ அல்லது தமது தலையில் தெளித்துக் கொள்ளவோ ,அதை எடுத்துக்கொள்ள போட்டியே நடக்கிறது. என்ன காரணம்? அந்த நீரில் வேத மந்திரங்கள் ஏற்றப்பட்டிருக்கிறது. மந்திரங்களை அந்த திரவம் தாங்கியிருக்கிறது. அந்த மந்திரங்களுக்குள் தெய்வம் அமர்ந்திருக்கிறது.
உபாசகர்கள் என்று சிலரிடம் அமர்ந்து மந்திரங்களை சொல்லச் சொல்லி நீங்கள் அதைக் கேட்டுச் சொல்லத் தொடங்குங்கள். மந்திரங்கள் மாயமோ, ஜாலமோ செய்வதில்லை. மகாசக்தியின் கட்டளையை ஏற்றுத்தான் காரியங்களை செய்கிறது என்பதை புரிந்து கொண்டாலே போதும். ஏனெனில், மந்திரம் வேறு, மகாசக்தி வேறு அல்ல.
மனதை மந்திரங்கள் தொடும்போது மனதின் தன்மையே மாறிவிடுகிறது. மந்திரத்தினுள் இருக்கும் சக்தி மெல்ல மெல்ல வெளிப்பட்டு மனதை வலிமையாக்குகிறது. திறனைக் கூட்டுகிறது. புத்தியை சுறுசுறுப்பாக்குகிறது. பிராண சக்தியை உடல் முழுவதும் பரவச் செய்து புத்துணர்ச்சியை கூட்டுகிறது. மூச்சுகளின் கதியை சீராக்குகிறது. மனதை ஒருமையாக்கி பசுமரத்தாணி போல நினைவுத் திறனை பெருக்குகிறது. அதுமட்டுமல்லாது ஆச்சரியமாக மந்திரங்கள் அஸ்திரம்போல அருவமாகவும் செயல்படுகிறது.
‘’மனனாத் த்ராயதே இதி மந்த்ர:’ என்பார்கள். மனதால் நினைப்பவரை, மனனம் செய்பவரை தன் மகத்துவத்தால் காப்பாற்றுவதால் இதற்கு மந்திரம் என்று பெயர்.