காசிக்கு செல்வது சிறப்பு!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:-

நன்றாக இயங்கும் உடல் உறுப்புகள், தெளி வான மனநிலை கொண்ட சுகாதாரமான தருணத்தில் காசிக்குச் செல்வது சிறப்பு. அங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய சடங்குகளைக் குறைவில்லாமல் செய்வதற்கு உடல் ஆரோக்கியம் தேவை. காது மந்தம்… கண் பார்வை குன்றி விட்டது… ஊன்றுகோல் இல்லாமல் செல்ல இயலாது… அவ்வப்போது மறதி தென்படுகிறது… இந்த நிலையில் காசிக்குப் போனால், செய்யும் சடங்கு நாடகமாக இருக்கும்; பலன் இருக்காது. வயதான பிறகே காசிக்குச் செல்ல வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லாது.
புதல்வன் குடும்ப பாரத்தை ஏற்கும் தகுதியை அடைந்த பிறகு, நிம்மதியாக காசிக்குப் போவோம் என்று தகப்பனார் எண்ணுவார். அப்போது அவருக்கு வயதாகி இருக்கலாம். அதை வைத்து, வயதான பிறகே காசிக்குப் போக வேண்டும் என்று ஒரு கட்டளையை தர்ம சாஸ்திரத்தில் இடைச்செருகலாகத் திணிக்கக் கூடாது. இளம் வயதில் காசிக்குப் போவது சிறப்பு. ஈடுபாட்டுடன் சடங்கில் ஈடுபட முதுமையை விட இளமையே சிறந்தது. அது போல தாய் – தந்தையரை இழந்தவர் மட்டுமே காசிக்குப் போக வேண்டும் என்பதும் இல்லை. பெற்றோரை இழந்தவர்களுக்கு கங்கைக் கரையில் தன் முன்னோருக்கு ஆராதனம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். பெற்றோர் இருப்பவர்களும் கங்கையில் நீராடித் தூய்மை பெற்று, ஈசனை வணங்கி அருள் பெறலாம்.

காசி என்பது புண்ணிய க்ஷேத்திரம். அங்கு எல்லோரும் சென்று வழிபடலாம். அங்கு முன்னோருக்கு ஆராதனை செய்வது தனிச் சிறப்பு. இளம் வயதிலேயே நோய் – நொடிகளைச் சந்திப்பவர்கள் தற்போது அதிகம். அதை அகற்ற கங்கா ஸ்நானம் பயன்படலாம். நம் முன்னோர்கள், காசியில் உயிர் துறப்பதற்காக அங்கு தங்குவது உண்டு. அங்கு உயிர் துறந்தால், ஈசன் நம் காதில் தாரக மந்திரம் ஓதி, மோட்சம் அளிப்பார்.

போக்குவரத்தும், பொருளாதாரச் செழிப்பும் உள்ள தற்போது காசிக்குச் சென்று வருவது சிரமம் இல்லாதது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது, பயன்படுத்தி பலன் அடையலாம். உடம்பில் காற்று இருக்கும்போதே செய்துவிட வேண்டும். நமது முடிவு நம் கையில் இல்லை. இளமையிலேயே காசிக்குச் சென்று பயன் பெறுங்கள். அதில் தவறு இல்லை!
நன்றி: பிரம்மஸ்ரீ சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.

Write a comment…
 
காசிக்கு செல்வது சிறப்பு!
Scroll to top