அட்சதை!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

நம் மக்களின் எல்லாச் சடங்குகளிலும் ‘அட்சதை’ எனும் மங்களப் பொருள் கட்டாயம் இருக்கும். எல்லா வாழ்த்துகளிலும் இதைத் தூவி வாழ்த்துவதைப் பார்த்திருப்போம். தூவி வாழ்த்துவதில் மலர்களைவிட மேலானது இது. அட்சதை இல்லாதபோதே மலர்களும் புனித தீர்த்தமும் உபயோகிக்கலாம் என்பது ஐதீகம்.

வடமொழியில் ‘க்ஷதம்’ என்றால் இடிப்பது என்று பொருள். ‘அக்ஷதம்’ என்றால் இடிக்கப்படாதது அல்லது குத்தப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத அரிசியை ‘அட்சதை’ என்கிறார்கள். ‘முனை முறியாத அரிசி’தான் அட்சதை எனப்படும். முனை முறிந்த அரிசிகளைக்கொண்டு இதைத் தயாரிப்பது தவறானது.

அரிசியோடு தூய மஞ்சள் கலந்து, அதனோடு பசுநெய் சேர்த்து உருவாக்கப்படுவதே அட்சதை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இது தேவதைகளின் அம்சம்கொண்டது. பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து செல்லும் வாகனமாக அவை பயன்படுகின்றன.

நிலத்தின் அடியில் விளையும் மஞ்சள், நிலத்தின் மேலே தோன்றும் நெல்லுடன் இணைவதும், அதோடு குற்றமே இல்லாத நெய்யோடு இணைந்ததும் தெய்வீகத் தன்மை பெறுகிறது. சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் ஆதிக்கம் கொண்ட மஞ்சள் மகாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் சேரும்போது அங்கு நல்ல அதிர்வுகள் உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.

அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது. அரிசி, உணர்வையும் சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. அதனால்தான் அரிசியை கையில் தொட்டுக் கொடுக்க மாட்டார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தட்டில் வைத்து, அட்சதையை எடுத்துக்கொள்ளச் சொல்வதே நல்லது.

இதை வீசி எறிவது தவறான விஷயம். திருமண வீடுகளில் எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு வீசி எறிவதைப் பார்க்கிறோம். இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம். ஒவ்வொருவராகச் சென்று வாழ்த்தி தலையில் மெள்ளத் தூவுவதே சிறந்தது. இன்னும் சொல்லப்போனால், மெள்ளத் தலையில் வைப்பதுதான் சிறந்தது.

புதிய காரியங்கள் எதைத் தொடங்கினாலும் பெரியவர்கள், நண்பர்கள் கூடி இதைத் தூவி வாழ்த்துவது நல்லது. இதனால் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் அடைவார்கள் என்பது நிச்சயம்.

Image may contain: one or more people and food
அட்சதை!
Scroll to top