தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
அவ்வப்போது நன்மைகள் பல தரும் விடயங்களை பற்பல ஆன்மிக இதழ்களில் இருந்து திரட்டித் தருவது மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் (MIH) இணைய தளம். பலரின் பலமான வரவேற்புடன் இந்த நிறுவனம் வலம் வருகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில் இன்று ”அர்த்த நாரீஸ்வர தத்துவம்” என்ன என்று பார்போம்.
இறை சக்தியின் ஆண் வடிவத்தை `சிவம்’ என்றும் பெண் வடிவத்தை `சக்தி’ என்றும் வணங்குவது நம் முன்னோர் வகுத்த பாதை. ஆன்மிக மரபில் சிவம் என்பது ஞானத்தின் குறியீடு; சக்தி- ஆற்றலின் குறியீடு.
இதை நம் குடும்பத்திலேயே பார்க்கலாம். ஒரு குழந்தையை வழிநடத்துவதில், தந்தையின் வழி வேறாகவும் தாயின் வழி வேறாகவும் இருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, தன்னம் பிக்கையைப் போதிக்கும் இடத்தில் தந்தையும்; அன்பு, கருணை ஆகிய அக உணவையும் புகட்டுவதோடு, தந்தை தரும் அறிவைச் செயல்படுத்தத் தேவையான சக்தியைத் தருபவராகவும் தாய் திகழ்கிறாள்.
நித்ராதேவி, அன்னலட்சுமி, திருமகள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதாவது, எங்கெல்லாம் நமக்கு ஆறுதலும், உற்சாகமும், தொடர்ந்து செயல்பட சக்தியும் கிடைக்குமோ, அந்த இடங்களை எல்லாம் ஒரு பெண்ணாகவே உருவகம் செய்திருக்கிறோம்.
ஆக தாய்மையின் அன்பும் கருணையும் கலந்த… உலகில் வாழத் தேவையான சக்தியைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே, இறையின் பெண் வடிவமான சக்தி வழிபாட்டை முன்னோர் நிறுவியிருக்க வேண்டும்.
சரி! சிவம், சக்தி எனும் இரண்டு சக்தி நிலைகள் எதற்கு?
எதிர் முனை, நேர்முனை என இரு வகைகள் இருந்தால்தான் மின்சாரத்தின் பயன்பாடு சாத்தியம். முற்றிலும் வேறுபட்ட இரு குணாதிசயங்கள் இணையும்போது மட்டுமே அங்கு ஆற்றல் நிகழும்; முழுமை சாத்தியமாகும்.
அதேபோல் சக்திகள் இரண்டிலும் உயர்வு தாழ்வும் இல்லை. மழை உயர்வெனில், வெயிலும் உயர்ந்ததுதான். பகல் உயர்ந்ததெனில் இரவும் அவ்வாறே.
இரு விதமான சக்திகள் இருப்பது, ஒன்றுக்கொன்று உதவவும், ஒன்றையொன்று முன்னேற்றவும், பொது நலன்களைப் பெறவுமே அன்றி, ஒன்றையொன்று அவமானப்படுத்த அல்ல.
பெண்களை இழிவு செய்வது, பேராற்றலையே அவமானப்படுத்துவதாகும். தன்னில் பாதியான பெண்ணை அவமானம் செய்யும் மனிதன் வாழ்வில் முழுமை அடையமாட்டான். பெண்களை மட்டம் தட்டும் சமூகம் முழுமையான சமூகம் ஆகாது.அருகில் இருக்கும் பெண்ணை மதிக்காதவருக்கு, ஆண்டவனின் அன்பு எங்கிருந்து கிடைக்கும்?
இதை உணர்த்துவதே அர்த்தநாரீஸ்வர தத்துவம் எனலாம்.
இந்த உலகுக்குப் பெண்ணின் கர்ப்ப வாசல் மூலம் வருகிறோம். ஆலயங் களில் மூலவர் உறையும் இடத்தையும் கர்ப்பக்கிரஹம் என்றே அழைக்கிறோம். இரண்டுக்கும் ஒரே பெயர் திகழ்வது தற்செயலானது அல்ல. பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தெய்வம் வாழ்கிறது!