தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சித்திரப் புத்தாண்டு அண்மிக்கிறது. அடுத்தவாரம் சித்திரப் புத்தாண்டில் எல்லோரும் வழிபாடுகளிலும் பரஸ்பரம் வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டும் இருப்பார்கள். இந்த நேரத்தில் ” சித்திரையை” தெரிந்து கொள்வோம் என்ற எங்கள் பதிவை பகிர்கிறோம் நண்பர்களே!
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் முழு நிலவு தோன்றினாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி மகத்துவம் உண்டு. “சித்திரை மாதம்… பௌர்ணமி நேரம்… முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்…” என கவிஞர்களை பாட்டெழுத வைக்கும் மாதமிது. இத்தனைக்கும் சித்திரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பகல் பொழுது முழுவதும் சூரியன் சுட்டெரிக்கும், ஆயினும் இந்த மாதத்தினை வசந்த காலம் என்கிறோம். பஞ்சாங்கத்திலும் வஸந்த ருது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.,
ஏன் இந்த முரண்பாடு? நவக்ரகங்களின் தலைவனான சூரியன் தனது முழு வலிமையுடன், அதாவது, உச்ச பலத்துடன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை மாதம். சூரிய பகவானின் தாக்கம் முழுமையாக நிறைந்திருக்கும் காலம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் சூரியனுக்குரிய நட்சத்திரங்கள். அதிலும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை அக்னி. (‘அக்னிர்ந பாது க்ருத்திகா:’ என்று வேதம் சொல்லும்) மிகவும் உஷ்ணமான நட்சத்திரம். அந்த கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது வெயில் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வசந்த காலம் என்ற பெயர் ஏன் வந்தது? மாசி, பங்குனி மாதங்கள் இலையுதிர் காலம். முக்கால் வாசி மரங்கள், இலைகள் உதிர்ந்து மொட்டையாகக் காட்சியளிக்கும். சித்திரை மாதத்தில்தான் அந்த மரங்களில் இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக மரங்கள் முழு வதிலும் பசுமை ஆக்கிரமிக்கும். தாவரவியல் ரீதியாகச் சொல்வதென்றல், சூரியனின் துணையோடு மரங்கள் குளோரோஃபில் எனப்படும் பச்சையம் என்ற ஆகாரத் தினை அடைந்து தங்களை முழு வலிமையாக ஆக்கிக் கொள்ளும்.
.
சித்திரைத் தென்றல் நம்மை சுகமாக வருடிக் கொடுக்கும். மரங்கள் நிறைந்த நிழற்சாலைகளில் (அவென்யூ) வசிப்போர் இதனை அனுபவித்து உணர்ந்திருப்பர். சித்திரை மாதம் என்றவுடன் தற்காலத்தில் தாய்மார்களின் நினைவிற்கு வருவது அக்ஷய திருதியை. அதுவும் கடந்த சில வருடங்களாக தீபாவளிக்கு இணையாகப் பெண்களால் பேசப்படும் பொன்னாள்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அதுவும் பீமனுக்கு உணவு சமைக்க வேண்டும் என்றால் சும்மாவா? மனம் வருந்திய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள்.
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசீர்வதித்தார் சூரிய பகவான்., க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்ற பெயர் வந்தது.
ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய திருதியை நாள்.
திரௌபதிக்கு சூரிய பகவான் அக்ஷய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் மட்டும் சாப்பிடுவதற்காக அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்ய வேண்டும் என்பதற்காக.
அவர்களை நாடி வரும் ரிஷிகளும், முனிவர்களும் வயிறு நிறைய உண்ண வேண்டும் என்பதற்காக. அக்ஷய திருதியை நாளினுடைய உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், அநாதைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நாமும் நம்மால் இயன்ற அன்னதானத்தினையும், பொருளுதவியையும் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பௌர்ணமி என்றவுடன் சித்ரா பௌர்ணமி என்ற வார்த்தை கூடவே நினைவிற்கு வருகிறதே, வேறெந்த மாதத்தின் பெயரோடும் பௌர்ணமியை இப்படி இணைத்துச் சொல்வதில்லையே, சித்ரா பௌர்ணமிக்கு அப்படி என்ற சிறப்பு? புராணத்தின் வழியில் பார்த்தால் நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் தோன்றிய நாள் சித்ரா பௌர்ணமி. இந்த நாளில் ஆலயங்களில் சித்ரகுப்த பூஜை செய்வார்கள். சிவபெருமான் தன்னைப் போலவே ஒரு சித்திரத்தை வரைந்து, சக்தி தேவியின் துணையுடன் அதற்கு உயிரைக் கொடுத்து சித்திரகுப்தன் தோன்றச் செய்ததாகச் சொல்வார்கள்.
நண்பர்களே,, மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மூளை சுறுசுறுப்பானால் நமது இயக்கமும் வேகம் பெறும். இயக்கம் வேகம் பெற்றால் லட்சியத்தை எளிதாக அடைய முடியும். அக்ஷய திருதியையில் அன்னதானமும், சித்ரா பௌர்ணமியில் எல்லோரும் இறைவழிபாட்டுடன்,ஒன்றாக இருந்து உணவு அருந்தியும், பிறக்க இருக்கும் புதிய சித்திரையில் முத்திரை பதிப்போம்…!