தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
”கோலமா மஞ்ஞைதன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலனென்றிருந்தேன் அந்நாட் பரிசிவை
யுணர்ந்திலேன் யான்
மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி அன்றோ”
இது கந்த புராணப் பாடல் ஓன்று!
சிவபெருமானின் ஐந்து முகங்களும், சக்தியின் ஒரு முகமும் கூடிய ஆறுமுகமே – சண்முகர். அவரைப் பாலன் என்று நினைத்ததாகவும், பின்னர், அவரே அனைத்துக்கும் மூலகாரணம் என்று உணர்ந்ததாகவும் கந்தபுராணத்தில் விளக்குகிறார் ஸ்ரீகச்சியப்ப சிவாசார்யர்.
பஞ்சபூதங்களே இந்த உலகம். அதை ஒருநிலைப் படுத்துவதே சக்தி. சிவனும் சக்தியும் இணைந்த சண்முகர், நமக்கு அனைத்து ஆற்றலையும் அளிப்பதுடன், நம்மைக் காக்கக் கூடிய கடவுளா கவும் விளங்குகிறார். சிவாகமங்கள் சண்முகரை சிறப்பாகப் போற்றுகின்றன. அனைத்துச் சித்தர் களும் சிவபெருமானின் அருளைப் பெற்றிட கந்தனைத் துதித்தார்கள்.
முருகனின் ஆறுமுகங்களும் நான்கு திசைகளில் மட்டுமின்றி மேற்புறமும் உள்புறமுமாக தன்னுடைய ஆற்றல்களை வெளிப்படுத்த வல்லவை. எப்படி காற்றானது ஒரு மனிதனுக்கு இன்றியமையாததோ, அதுபோல் முருகனின் அருள் மிகவும் அவசியமானது.
உடலில் காணப்படும் ஆறு சக்கரங்களைத் தாண்டி, ஏழாவது நிலையான ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையில் ஆனந்த அனுபவத்தை அளிக்கவல்ல கடவுள் ஆறுமுகர். தெற்கு நோக்கி ஆறுமுகரை அமைத்திருப்பது, எதிரிகளைப் போக்கி நம்மைக் காப்பாற்றுவதற்காக.
இதனாலேயே ஸ்ரீசண்முகருக்கு, ஆறு கோணங் களில் பூஜை, ஆறு அக்ஷரங்கள் கொண்ட மந்திரம், ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்த திருக்கதை, ஆறு சிறப்புத் தலங்களில் பூஜைகள், சஷ்டி தினத் தன்று விரதங்கள் என்று ` 6 ‘ என்ற எண்ணிக்கை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
—நன்றி: ஷண்முக சிவாச்சாரியார்.