தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆடி என்றாலே, அது ‘அம்மன் மாதம்’ என்ற அளவுக்கு அம்பிகையின் அனைத்துக் கோயில்களிலும் விழா நடக்கும். மிக அற்புதமான இந்த மாதத்தில் அம்பிகையைக் கொண்டாடும் விதம், அம்மனின் மகிமைகள் சிலவற்றைப் படித்து மகிழ்வோம்;
படிப்பதுடன் நின்றுவிடாமல், அருள் சுரக்கும் அவளின் ஆலயங்களுக்கும் நேரில் சென்று, அம்மையைத் தரிசித்து வழிபடுவோம். நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நிரந்தரமாகக் குடிகொள்ளும்படி அவளை வேண்டிக்கொள்வோம்.
ஆடி மாதம், அம்பிகை அவதரித்த பெருமையைப் பெற்றது. அம்பிகை பக்குவம் அடைந்ததாகச் சொல்லப் படும் மாதமும் இதுவே என்கின்றன ஞானநூல்கள்.
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்… நல்லன எல்லாம் தரும்…’ என்று அபிராமிப் பட்டர் பாடியதற்கேற்ப, நல்ல எண்ணங்களை நம்முள் விதைத்து நாளும் நலமுடன் வாழ அருளும்படி அவளைப் பிரார்த்திப்போம்.
நமது இந்தப் பிரார்த்தனையால் மனம் கசிந்து நம் இல்லம் தேடி வருவாள், அருள் மழை பொழிவாள்… அந்த வேப்பிலைக்காரி!