தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஒரு மனிதனின் வாழ்க்கையில் குரு என்பவர் மிக மிக அத்தியாவசியமாகிறார். அது எந்தக் கல்வி ஆனாலும் குருவுன் துணை அவசியம்.
‘குரு இல்லா வித்தை குப்பையிலே’ என்று நம் முன்னோர்கள் கூறுவர். எப்படி ஒரு மருத்துவர் நமது உடலைப் பரிசோதித்து, பிறகு மருந்துகளைப் பரிந்துரைக்கிறாரோ , அதுபோன்று குரு என்பவர் சிஷ்யனின் மனபரிபாகத்தை அறிந்து, அதற்கேற்ப மந்திரங்களினால் தீட்சை அளித்து, பரம்பொருளை அடையும் வழியைக் காட்டக்கூடிய சாமர்த்தியம் படைத்தவர்.
கு’ எனில் இருட்டு; ‘ரு’ எனில் இருளைப் போக்குபவர் என்று சொல்வர். `குரு என்பவர், நமது அக இருளைப் போக்கி ஞானத்தை அளிப்பவர்’ என்கின்றன சாஸ்திரங்கள். முழு நம்பிக்கையுடன் தன்னைச் சரணடையும் சீடனுக்கு, தமது தவ வலிமையாலும் அன்பாலும் ஞானத்தை அருள்வார் குரு என்பதே சாஸ்திரங் களின் முடிவு..
அடுத்து மந்திரங்கள், காற்று எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால், அந்தக் காற்றை நாம் உணர, நமக்கு ஒரு விசிறியோ அல்லது மின்விசிறியோ தேவைப்படுகிறது. அதேபோல், எங்கும் நிறைந்திருக்கும் இறை சக்தியை நாம் உணர்ந்து ஆனந்தம் அடைவதற்கு மந்திரங்கள் வழிகாட்டுகின்றன.
தகுதியான குரு ஒருவரிடம் முறைப்படி மந்திர உபதேசம் பெற்று, தொடர்ந்து சில மாதங்கள் ஜபம் செய்து வந்தால், அதனால் ஏற்படும் அனுபவம் என்ன என்பது உங்களுக்குப் புரியும். இனிப்பு என்றால் என்னவென்றே தெரியாதவ ரிடம், ‘சர்க்கரை இனிக்கும்’ என்று சொன்னால், அவருக்கு ஒன்றும் புரியாது. ஆனால், சிறிது சர்க்கரையை எடுத்து அவர் தமது வாயில் போட்டுக்கொண்டால், இனிப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வார்.
நன்றி: ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து.