திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் – இலங்கை
தலவரலாறு.
இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், வாய்மொழிக் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் ராஜேந்திர சோழனுடைய காலமாகிய 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இவ்வாலயம் அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழிபாட்டுக்குரிய தலமாக இருந்துவந்துள்ளதென்பதை அறியலாம்.
கேதாரகௌரி விரதம்.
இவ்வாலயத்தில் கடந்த 150 வருடகாலமாக மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது, கேதாரகௌரி விரதம். புரட்டாசி மாதம் விஜயதசமி முதல் ஐப்பசி மாதம் அமாவாசைத் திதி வரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுஷ்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரத நூலும், பூஜைப்பொருட்களும் வைக்கப்பட்டு அலங்காரப்பூஜை நடைபெறும். பூஜையின் முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவு செய்து கொண்டவர்களை அழைத்து பூஜைப்பெட்டிகளை வழங்குவார்கள். தனியாக விரத நூலை மட்டும் பெற்று இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களும் உண்டு.
திருவிழாக்கள்.
வைகாசிப் பொங்கல்.
வைகாசிப் பூரணைக்கு முன்னர் வரும் திங்கட்கிழமை, ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்று வருகின்றது. இம்முறை பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலையில் சக்தி வழிபாட்டின் பக்தி வெள்ளத்தில் பக்தர்கள் மூழ்கியிருப்பார்கள்.
நவராத்திரி விழா.
லட்சார்ச்சனை : இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திதி அன்று ஆண்டுதோறும் சங்காபிஷேகம் செய்வார்கள். சங்காபிஷேகத்திற்கு முன்னுள்ள பத்து நாட்களும் லட்சார்ச்சனை நடைபெற்று மறுநாள் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பவிழா.
விஜயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.
அமைவிடம்.
திருகோணமலை நகரின் பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் எதிரே பரந்த விளையாட்டு மைதானமும், அதையடுத்து விரிந்து கிடக்கும் கடலும் இவ்வாலய சூழலின் இயற்கை அழகை மெருகூட்டுகின்றது.