தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
இறைவனும் நைவேத்தியமும்!
பிற மக்களால் தொடுக்கப்படும் பூமாலைகளை இறை உருவங்களுக்கு சாத்தும் அர்ச்சகர்கள், அவர்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை மட்டும் நைவேத்தியம் செய்ய மறுக்கிறார்களே… இதற்கு சாஸ்திர ரீதியாக ஏதும் காரணம் உள்ளதா? என்று பக்தர் ஒருவர் மிகவும் ஆதங்கப்பட்டார்! அவருடைய ஆதங்கத்தை நிவர்த்தி செய்யும் கடமை நமக்கு உண்டு நண்பர்களே!
புஷ்பங்கள் இயற்கையின் படைப்பு. மாலையாக மாற்றுவது பக்தனின் வேலை. அதில் தவறு இருக்க அவகாசம் இல்லை. பக்தர்கள் தொடுத்த மாலையைச் சாத்துவதும் சரியில்லை. மாலை தொடுப்பதற்கு ஒருவரை நியமிக்க வேண்டும். தெய்வங்களுக்கு உகந்த புஷ்பங்களை அறிந்தவராகவும், தெய்வ வடிவத்துக்கு உகந்த முறையில் மாலை கட்டும் பாங்கும் அவருக்கு இருக்க வேண்டும்.
பாமரர்களது பூமாலைகள் எல்லாம் தெய்வத்துக்குச் சேர்க்கும் தகுதி உடையதாக இருக்க முடியாது. அதை அர்ச்சகர்கள் கவனத்தில் கொண்டிருப்பார்கள். உகந்த மாலையை அடையாளம் கண்டு அதை சாத்துவதில் தவறில்லை. பூமாலை அணிகலனாக விளங்குவதால் அதில் தவறு குறைவு. நைவேத்தியம் அப்படியல்ல. அது அர்ச்சகரின் மேற்பார்வையில் தயாராக வேண்டும். நைவேத்தியம் செய்யும் முறை தெரிந்தவர் மட்டுமே அதில் ஈடுபடலாம். கடவுளுக்குப் படைக்கும் பொருளில் தூய்மையும் வேண்டும்.
கோயிலுக்கு உள்ளேயே அர்ச்சகர் மேற்பார்வையில் ஏற்படும் தூய்மை நம்பகமானது. எனவே வெளியில் இருந்து வரும் நைவேத்தியத்தை நம்ப இயலாது. எப்படியான தூய்மையாக அந்த நைவேத்தியம் ஆலயத்துக்கு வருகிறது என்று ஆலய நிர்வாகிகளுக்கோ அர்ச்சகருக்கோ தெரிய வாய்ப்பில்லை!
ஆலயங்களில் ‘மடப்பள்ளி’ என்ற நைவேத்தியம் செய்யும் அறை தனியாக இருக்கும். செய்பவர் ஒருவர் இருப்பார்.
அடுத்ததாக, தங்களுக்கு அளிக்கும் நைவேத்தியத்தை தெய்வங்கள் உட்கொள்வதில்லை. நைவேத்தியத்தைப் பார்த்து திருப்திபடுபவர்கள் (த்ருஷ்டா த்ருப்யந்தி). பூஜைகள் முடிந்த பின் அந்த பிரசாதங்களை பக்தர்கள் உட்கொள்வார்கள். அவர்களின் ஆரோக்கியத்துக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் நைவேத்தியம் இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பு அர்ச்சகருக்கும் கோயில் நிர்வாகத்தினருக்கும் நிச்சயம் உண்டு!!! இங்கு சுகாதாரமும் மிக முக்கியமாகிறது!
பக்தர்கள் கொண்டுவரும் நைவேத்தியங்களை ஏற்க மறுப்பது பக்தர்களின் விருப்பத்தை, சிதைப்பதல்ல. மற்றவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதும் பிரதானமான காரணியாக அமைகிறது என்பதை பக்தர்கள் உணர வேண்டும்!
தேங்காய், பழம் போன்றவை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதில் நம்பகத்தன்மை உண்டு. ஆலயத்தில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கும்போது, ‘நான் செய்ததை ஏற்க வேண்டும்’ என்று பக்தன் அடம் பிடிக்கக் கூடாது. பக்தி மட்டும் இருந்தால் போதாது. பரந்த எண்ணமும் வேண்டும். கோயில் சட்ட திட்டத்தை மதிப்பது கடவுள் சேவையாகும். தனி மனிதனின் சுதந்திரத்தை நுழைத்து, சட்டத்தை செயலிழக்கச் செய்வது பெருந்தன்மை அல்ல.
நியாயமான விடயங்களை அறிவோம்! தெரிவோம் ! அனாவசிய ஆதங்கங்களை தவிர்ப்போம் நண்பர்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

இறைவனும் நைவேத்தியமும்!