பாபம்

பாபம்

கடவுளின் சட்டங்களை வேண்டுமென்றே மீறுவது அல்லது கடவுளுக்கு எதிராக புரட்சி செய்வது பாபம் என்பதுதான் உலகம் தழுவிய பல சமய மரபுகளின் சித்தாந்தம். உதாரணத்துக்கு, கிறித்தவத்தில் ஒரிஜினல் சின் என்று ஒன்று இருக்கிறது. முதல் பாபம் செய்த ஆதாமுக்குப்பின் வந்த அத்தனை பேரும் அந்தப் பாபத்தால் பீடிக்கப்பட்டிருப்பதாக கிறித்தவம் சொல்கிறது. இது போல் எது பாபம், யார் பாபிகள், எது பாப விமோசனம் என்பது பற்றி உலகத்தில் உள்ள ஏறத்தாழ அத்தனை சமயங்களும் தங்களுக்கு என்று ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்து சமயத்தில் பாபம் அல்லது பாதகம் என்ற சொல் பாபத்தை விவரிக்கிறது. ஒரு மனிதனுக்கு எப்படி மோட்சம் கிட்டும், அதற்கு தடைகள் என்ன, அந்தத் தடைகளைக் கடந்து செல்வது எப்படி என்பது போன்ற விஷயங்களை இந்தத் தத்துவம் சொல்கிறது. இருந்தாலும், பாதகம் என்பது மிகவும் தீவிர சமயத்தன்மை கொண்ட சிந்தனை, இறைச் சித்தத்துக்கு எதிராகச் செய்யப்படும் விஷயங்களை அது சொல்கிறது. எனவே பாபம் குறித்து இந்து சமயங்கள் சொல்வது எல்லாம் அற-ஆன்மிக விஷயங்கள்தான். சமயம் அல்லது ஒழுக்கங்களை மட்டும் அவை தனியாகப் பேசுகின்றன என்று சொல்ல முடியாது. பொதுவாகச் சொன்னால் இந்து சமயங்களில் சமயமும் ஒழுக்கமும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத தனித்தனி விஷயங்கள் அல்ல.

ஆனால் எந்த ஒரு செயலையுமே ஏன் பாபம் என்று சொல்ல வேண்டும்? அப்படியே பார்த்தாலும், சில செயல்களை பாபச்செயல்கள் என்று சொல்ல முடியுமானால், ஆண்களும் பெண்களும் ஏன் பாபம் செய்கிறோம்? எதெல்லாம் பாபச் செயல்கள், ஏன் அப்படிச் சொல்லப்படுகின்றன? ஒருவன் பாபம் செய்தால், பாப விமோசனம் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

இந்து சமயங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று குணங்கள் அல்லது சுபாவங்கள் உண்டு. அவற்றை சத்வம், ரஜஸ், தமஸ் என்று அழைக்கிறோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் இந்த மூன்று குணங்களும் கலந்து இருக்கின்றன. இந்தக் கலவைகளில், ரஜோ குணம் மேலோங்கி இருந்தால் அவர்கள் சில கெட்ட காரியங்கள் செய்யக்கூடும். கீதையில் கிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார், “காமம், கோபம், பேராசை” மனிதர்களை அழிக்கின்றன, எனவே மனிதன் அவற்றைத் தவிர்க்க வேண்டும் (பகவத் கீதை, 15, 21). அதே போல், “காமமும் கோபமும் ரஜோ குணத்தில் தோன்றுகின்றன… இந்த உலகத்தில் அவை மனிதனுக்கு விரோதிகள்” என்றும் சொல்கிறார் (பகவத் கீதை, 3, 37)

ஏதோ ஒரு எண்ணம், சொல், செயல், தொடர்பு, அல்லது சம்பவம் ஒரு மனிதனைச் சீரழிக்கிறது அல்லது அவனது அமைதியைக் குலைக்கிறது என்றால், அது மன அளவில் இருந்தாலும் சரி, உடல் அளவில் இருந்தாலும் சரி, பாபம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது போல் ஒழுக்கம் கெட்டுப் போவது முடிவில் மோட்சம் அடைவதற்குத் தடையாக இருக்கும். இதை இன்னும் கொஞ்சம் விரிவாக யோசித்தால், இது போன்ற ஒரு சீரழிவு அந்த மனிதன் வாழும் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும். இந்த அர்த்தத்தில் பார்க்கும்போது, ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்வது எதுவாக இருந்தாலும் சரி, சமூகத்தில் அமைதியைக் குலைப்பது எதுவாக இருந்தாலும் சரி, இறைவனை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து மனிதனையோ அல்லது ஒரு குழுவையோ திசைதிருப்புவதும் சரி, எல்லாமே பாபம் என்றுதான் சொல்லப்படுகிறது.

பாதகங்கள் எத்தனை, அவை என்னென்ன என்ற கேள்விகளுக்கு பதில் மிகப் பழமையான இந்து சாஸ்திரங்களிலேயே இருக்கிறது. காலத்துக்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கையும் பெயர்களும் மாறி வந்திருக்கின்றன. ஆனால் இவற்றில் ஐந்து பாபங்களை மாபாதகங்கள் என்று சொல்கிறார்கள், அவற்றின் பெயர் மட்டும் வெவ்வேறு சாஸ்திரங்களில் மாறுபடுகின்றன.

பொதுவாக அனைவரும் இவற்றை பஞ்ச மாபாதகங்களாக ஒப்புக் கொள்கின்றனர்-

களவு, மது அருந்துதல், கொலை, குரு பத்தினியுடன் உறவு கொள்ளுதல், மேற்கண்ட நான்கு பாபங்களைச் செய்தவர்களோடு நட்பாக இருப்பது (சாந்தோக்ய உபநிடதம், 5.10.9)

இதில் பலரும் நான்காவது பாபம் ப்ருணஹத்தி அல்லது கருச்சிதைவு என்று சொல்கிறார்கள். வேறு சிலர், கோவதை அல்லது பசுவதை என்று சொல்கிறார்கள்.

பாபங்கள் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து விடுபட என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தொகுக்கப்பட்டு இந்து சமய பனுவல்களில் பலவிதங்களில் பட்டியல்கள் இடப்பட்டிருக்கின்றன. பொதுவாக இவற்றில் இரு வகைகள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்- மாபாதகங்கள், உபபாதகங்கள். மாபாதகங்கள் கொலைக்குற்றம் போன்றவை, உபபாதகங்கள் அவற்றைவிட கொஞ்சம் சாதாரணமான பாபங்கள்.

பாபம்
Scroll to top