“விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.
‘விபூதி பூதிரைச்வர்யம்’ எனறு “அமர கோச”த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும்.
எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போகும்!சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும்.
ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்து விட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் அவன். பஸ்மமாக நீற்று வெளுத்துப்போனதற்கு முந்திய மாறுதல் கறுப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.
நன்றி:- ”தெய்வத்தின் குரல்.”