மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — மூன்றாவதும் இறுதியுமான பகுதி! -Part 3

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! —
மூன்றாவதும் இறுதியுமான பகுதி! -Part 3
இந்த பகிர்வு மங்கலம் சம்பந்தமாக பல விடயங்கள் உள்ளடக்கி இருப்பதனால் மூன்று பிரிவுகளாக பகிரப்படுகிறது நண்பர்களே!
வெப்பம் நீக்கி குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது சந்தனம். அனைத்து மங்கல விழாக்களிலும் வரவேற்பில், முதலில் அனைவரிடமும் நீட்டுவது சந்தனப் பேழையைத்தான்.
ஆரம், ஈங்கம், குசந்தனம், குலவிரி, கோவாரம், சந்தனம், சந்திலகம், சந்து, சாதகம், சிசிரம், சீதம், செலிட்டம், சேலேகம், சேலோதம், மலையாரம் ஆகிய பெயர்களும் சந்தனத்துக்கு உண்டு. இறைவனுக்குச் சந்தன அபிஷேகம் செய்தால் செல்வம், சுவர்க்க போகம் கிடைக்கும்.
கடவுள் சிலைகளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் விசேஷம்! சிவன் கோவில் சந்தன அபிஷேக தீர்த்தம், நோய் தீர்க்கும் மகத்துவம் மிக்கது.
அக்காலத்தில் ஆண்கள் மார்பில் சந்தனம் பூசி மகிழ்வர். அதேபோல், வயிறு நிறைய உண்டபின் வயிற்றில் சந்தனம் பூசினால், விரைவில் செரிமானம் ஆகிவிடும் என்பர். இன்றைய நாளில் திருமண விழாவில் கன்னங்களிலும், மோவாயிலும், கைகளிலும் சந்தனம் பூசுவது வழக்கத்தில் உள்ளது.
திருக்கோயில் வைபவங்களிலும், இறைச் சடங்குகளிலும் முக்கிய இடம் பெறுவது தேங்காய். கும்பத்தின் (குடத்தின்) மேலே பூரணமாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள மங்கலப் பொருள் தேங்காய். கோயில்களில் நம் வினைகள் சிதற, விநாயகருக்கு தேங்காயை ‘சிதறுகாய்’ உடைப்பது என்ற வழக்கம் ஏற்பட்டது. தேங்காயை மட்டையுடன் தானம் செய்வது, கோ தானம் செய்வதற்குச் சமம் என்பார்கள்.
சிவனுக்கும் மூன்று கண்கள்; தேங்காய்க்கும் மூன்று கண்கள். சிவனாருக்கும் ஓடு உண்டு (கபாலம்); தேங்காய்க்கும் ஓடு உண்டு. சிவன் கல்லால் அடியுற்றார் (சாக்கிய நாயனார் திருக்கதை); தேங்காயும் தினம் தினம் கல்லில் அடிபடுகிறது. ஹோமம், யாகம், மஹா பூர்ணாஹுதியில் தேங்காய்க் கொப்பரை முதலிடம் பெறும். தேங்காய் உடைத்து நைவேத்தியம் செய்தால்தான் பூஜை நிறைவுபெறும். தேங்காய் எண்ணெய் புண்ணை ஆற்றும்;
பலகாரத்துக்குச் சுவை கொடுக்கும். இப்படிப் பலவிதமான பயன்பாடுகள் மிக்க தேங்காய்க்கு இலாங்கலி, சாமபோத்திரி, தென், நெய்யரி, தெங்கு என்ற பெயர்களும் உண்டு.
பூஜை பொருட்களில் ‘பழம்’ என்ற பெருமை வாழைப் பழத்துக்கு மட்டுமே உண்டு. ஆம்! பழம்பெருமை உடையது அல்லவா? முக்கனி கூட்டணியிலும் வாழைக்குப் பங்குண்டு. அசோனம், அரம்பை, கதலி, காவாகிலி, சமி, சகுந்தம், சோகிலி, ததபத்ரி, தந்துவிக்ரியை, மடல், மோசகம் என்ற பல பெயர்கள் இதற்கு உண்டு. வாழைப் பழங்களில் பூவன், மொந்தன், பேயன், கர்ப்பூரவல்லி (தேன்கதலி), ரஸ்தாளி, மலைப்பழம், செவ்வாழை, நேந்திரம், நற்கொம்பு, பச்சை, பூவில்லா வாழை, பச்சைநாடன், ஏலக்கி என்று எத்தனையோ ரகங்கள் உண்டு.
ஆயினும், பூவன் வாழைப்பழத்தையே பெரும்பாலோர் பூஜைக்கு ஏற்றதாகக் கொள்வர். பூவன் என்பது (தாமரை) பூவில் அமர்ந்த பிரம்மனுக்கு உரியது. முகுந்தன் (திருமால்) திரிந்து மொந்தன் ஆயிற்று. சிவபெருமானுக்கு பேயன் என்றொரு பெயர். எனவே, பேயன் அவருக்கு உரியது. இது மிக உயர்ந்த வகை. தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிட, மலச்சிக்கல் இருக்காது. மலைப்பழம் கொண்டு பஞ்சாமிர்தம் செய்தால், பல மாதங்கள் ஆனாலும் கெடாது.
வெற்றிலையும் பாக்கும் சேர்ந்தது தாம்பூலம். இதற்கு ‘சுருளமுது’ என்றும் பெயர். ‘பாக்கு வெற்றிலை மாற்றிக்கொள்வது’ என்ற சமுதாயப் பழக்கம் திருமண நிச்சயதார்த்தத்தில் காணலாம். இதைப் பற்றிய முதற் குறிப்பு,
குப்தர் காலத்து (ஐந்தாம் நூற்றாண்டு) கல்வெட்டில் காண முடிகிறது.
வெற்றிலை பாக்கு இல்லாமல் எந்த ஒரு சைவ/இந்து மதச் சமுதாயச் சடங்கும் இல்லை. திருக்கோயில் வழிபாட்டிலும் அது முக்கியமானது.
தாம்பூலம் சுவைப்பது பற்றிய இலக்கிய ஆதாரம் சிலப்பதிகாரத்தில் உள்ளது. இதற்கு ‘அடைப்பம்’ ‘வெற்றிலைச் செல்வம்’ என்ற பெயர்களும் உண்டு. சிவனாகினி, சூக்குளி, சூளின், தாம்பூரவல்லி, திரையல், நாகவல்லி, மடியிற்குருவி, மண்ணில் வேந்தன் வரிவம் என்று பல பெயர்களைக் கொண்ட வெற்றிலை, பூப்பதோ காய்ப்பதோ இல்லை. வெறும் இலை மட்டும் உடையதால் வெற்று இலை வெற்றிலை என்று பெயர் பெற்றது. இது மிகச் சிறந்த மருத்துவ குணமுடையது. வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புடன் சேர்ந்து வாயைச் சிவக்கவைக்கும். இது செரிமான சக்தியை அளிப்பது.
கமுகு, அந்திர வசனம், கிமுகம், கூந்தல், கைச்சி, சகுந்தம், சுரஞ்சனம், தற்பதி, தாலம், மதுரபாகம், அடக்கை போன்ற பல பெயர்களை உடையது பாக்கு. வெற்றிலைப் பெட்டி, பாக்குப் பெட்டி உருவங்கள் தாங்கிய நாணயத்தை மலேசிய நாட்டில் வெளியிட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!
அஷ்ட மங்கலப் பொருட்களைப் பார்த்தோம். இவை தவிர, இன்னும் பல மங்கலப் பொருட்கள் உண்டு. பிறிதொரு பதிவில் அறிவோம் நண்பர்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர், www.modermhinduculture.com
May be an image of coconut
மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — மூன்றாவதும் இறுதியுமான பகுதி! -Part 3
Scroll to top