தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — முதலாவது பகுதி! –part 1
இந்த பகிர்வு மங்கலம் சம்பந்தமாக பல விடயங்கள் உள்ளடக்கி இருப்பதனால் மூன்று பிரிவுகளாக பகிரப்படுகிறது நண்பர்களே!
மங்கலம் என்றால் அழகு, சுபம், நன்மை, தாலி என்று பொருள். வேதம் ஓதும் அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட (இறையிலி) கிராமங்களை ‘மங்கலம்’ என்ற பெயரில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவபெருமானும் உமாதேவியும் கணங்களுடன் மகா கயிலாயத்தில் கொலு வீற்றிருக்கும் திருமாளிகை வாயில்களில் அஷ்டமங்கலங்கள் ஏந்திய தேவ மகளிர் (அஷ்ட ரம்பையர்) நிற்கின்றனர்.
இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவுள்ளது, நம் சமுதாய வாழ்வில் இன்றியமையாத மங்கலப் பொருட்களாகும். அவை: மஞ்சள், குங்குமம், புஷ்பம், திருவிளக்கு, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு.
மங்கலப் பொருட்களில் முதன்மையானது மஞ்சள். சகல சுப நிகழ்ச்சிகளிலும், கோயிலில் அபிஷேகப் பொருட்களிலும் மஞ்சளுக்கே முதல் மரியாதை! சமையலிலும் பங்குண்டு. பெண்கள் முகத்தில், உடலில் மஞ்சளைத் தேய்த்துக் குளிப்பது வழக்கம். இது மிகச்சிறந்த கிருமிநாசினி.
அஷ்ட மங்கலங்கள் என்பன, எட்டு திசைகளிலும் இருந்து சிவபெருமானின் மேன்மையைப் போற்றி அளிக்கப்பட்ட மங்கலப் பொருட்களாகும். அவை: பூரண கும்பம், அடுக்கு தீபம், ஸ்வஸ்திகம், இரட்டை சாமரம் (விசிறி), கொடி, சங்கு, ஸ்ரீ வத்ஸம், கண்ணாடி. அஷ்ட மங்கல பொருட்களில் தோட்டி (அங்குசம்), முரசு, ஆகியவற்றை இணைத்துச் சொல்லும் வேறு விதமான பட்டியலும் உண்டு.
எந்த பூஜையும் தொடங்குமுன் மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து வைப்பர். ஆசீர்வாதம் செய்ய அரிசியில் மஞ்சள் தடவி, அட்சதை தயாரிப்பர். தாலிக் கயிற்றில் மஞ்சள் பூசுவர். அக்காலத்தில் தாலிக்கயிற்றில் மஞ்சள் துண்டு ஒன்றை கட்டி முடித்து வைப்பது வழக்கம். சில வகுப்பினர், திருமணத்தின்போது மஞ்சள் நீரில் நனைத்த துணியையே மணமக்களுக்கு உடுத்துவது வழக்கம். மணமக்களின் முக்கியமான விளையாட்டு மஞ்சள் நீராட்டு.
மேலும், வாசல் கதவுகளில் பொட்டு இடவும், புதிய ஆடையிலும் மற்றும் புதுக்கணக்கு எழுதத் தொடங்கும்போது நோட்டிலும் பொட்டு வைக்கவும், உண்டியல் மூடுவதற்கான துணியிலும், ஆரத்தியில் கரைக்கவும் மங்கலப் பொருளாகப் பயன்படுகிறது மஞ்சள். மேலும், அடிபட்ட புண்ணில் தடவ, கை வீக்கத்துக்குப் பற்றுப் போட, இருமல் நீங்க பாலில் கலந்து பருக… என நோய் நீக்கும் மருந்தாகவும் மஞ்சள் திகழ்கிறது.!
இரண்டாவது பகுதி தொடரும் நண்பர்களே!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — முதலாவது பகுதி! –part 1