நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!!
பெற்றோர்களே, நண்பர்களே, எங்கள் பிள்ளைகள் சிறார்களின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் அவர்களுக்கு ஆன்மீக கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள்! பிள்ளைகளின் எதிகால நல்வாழ்வில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது!
சிவனாரின் சீடர்!
நந்தி என்றால் ஆனந்தம், ஞானம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். `ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப…’ எனும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக உள்ளது. ஆக, நந்தி வழிபாடு தொன்மையானது என்பதை அறியலாம். `நந்தி சிவனாரின் சீடர்; ஈசனின் எட்டுத் தளபதிகளில் ஒருவர்; நாத சைவத்தின் எட்டு சீடர்களில் ஒருவர்’ என்கின்றன புராணங்கள்.
எத்தனை நந்திகள்?
ஐந்து நந்தியரைப் பற்றி விவரிக்கின்றன ஆகமங்கள். அதன்படி ஆலயங்களில் இடம்பெறும் ஐந்து நந்திகள்: தரும நந்தி, விஷ்ணு நந்தி, அதிகார நந்தி, சாமான்ய நந்தி, மகா நந்தி. இவை தவிர, சில கோயில்களில் அம்பாள் சந்நிதியிலும் நந்தி இடம்பெறும். அவரைச் சோம நந்தி என்பார்கள். மேலும் போக நந்தி, பிரம்ம நந்தி, ஆன்ம நந்தி, மால்விடை, கயிலாச நந்தி ஆகிய மூர்த்தங்களும் அமைக்கப்படுகின்றன.
நந்தியின் திருப்பெயர்கள்…
ரிஷபன், ருத்ரன், தூயவன், வெண்ணிற விடையோன், சைலாதி, மிருதங்கப்ரியன், சிவப்ரியன், ஞான விடை, தருணாகரமூர்த்தி, வீர மூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் ஆகிய பெயர்களும் நந்திக்கு உண்டு.
நந்தியிடம் ஐக்கியமாகும் புனித தீர்த்தங்கள்!
பிரதோஷ காலத்தில் அனைத்துப் புனித தீர்த்தங்களும் நந்தியிடம் ஐக்கியமாவதாக ஐதிகம். ஆகவே அன்று அவரை வழிபடுவது விசேஷம். பிரதோஷ காலத்தில் நந்திக்கு அருகம்புல் மாலையும், அரிசி, வெல்லம், பழம் கலந்த நைவேத்தியமும் நெய்விளக்கும் வைத்து வழிபடுவார்கள். இதனால் தோஷங்கள் விலகி இன்ப வாழ்வு கிட்டும்.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be an image of monument
நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!!
Scroll to top