தீபம் ஏற்றி வழிபடுவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தீபம் ஏற்றி வழிபடுவோம்!
தீப வழிபாடுகள் சைவ மக்கள் மத்தியில் மிக மிக பிரதானமான ஒன்று. அது ஆலயத்தில் என்றால் என்ன வீட்டில் என்றால் என்ன தீப வழிபாடு இல்லாமல் எந்த விடயங்களும் இல்லை நண்பர்களே!
இன்று சற்று நிதானித்து பார்த்தீர்கள் என்றால் சிலரது வீடுகளிலேயே தீபம் ஏற்றி வழிபாடு செய்வது குறைந்துதான் காணப்படுகிறது!!!
நீர் இல்லாமல் இந்த உலகம் இல்லை, அதே போலத்தான் கிரகங்கள் தொடங்கி ஓருயிர் ஜீவன்கள் வரை இயங்குவது உஷ்ணத் தினால் என்கிறது அறிவியல்.
தீபம் என்றால் ஆதி உருவைத் தீயில் காண்பது என்று பொருள். `தீபம்’ என்ற சொல்லே மனத்தில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கும் உற்சாகச் சொல்லாகிறது. அதுதான் தீபத்துக்கான மகத்துவம்.
””சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதாசத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:”’
தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது இந்த ஸ்லோகம்.
நம் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள்!!!
கண்ணும் ஒளியும் சேரும் இடத்திலேயே காட்சி தெரிகிறது. ஜீவனும் பரமாத்மாவும் இணையும்போது ஆன்ம காட்சி விரியும். ஒரு விளக்கில் ஒளி விரியும்போது, அந்த இடத்தில் ஓர் அளப்பரிய ஆன்ம சக்தியும் விரிவடைகிறது. ஆகவே, விளக்கைச் சுற்றி எழும் அதீத ஆற்றலோடு உச்சரிக்கப்படும் வார்த்தைகளும் மந்திரங்களும் வலிமை பெறுகின்றன என்கின்றன சாஸ்திரங்கள்.
மொத்தத்தில் உயிர்களின் அச்சத்தை, அறியாமையை அகற்றும் அற்புத வழிபாடு தீப வழிபாடு. தொன்றுதொட்டு நம் முன்னோர் கடைப்பிடித்த முதன்மை வழிபாடும்கூட. நாமும் அனுதினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவோம்; இறையாகிய பேரொளியின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின் இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com
May be an image of fire
தீபம் ஏற்றி வழிபடுவோம்!
Scroll to top