தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இறைவனுக்கு கும்பாபிஷேகம் ஏன், அதன் தாத்பரியம் என்ன என்பதற்கு வாரியார் சுவாமிகள் அற்புதமாக விளக்கம் தருகிறார். தெரிந்து கொள்வோம்!
எங்கும் நிறைந்த இறைவன் ஜோதி வடிவானவன் என்கின்றன வேதங்கள். அப்படி, ஜோதி வடிவான இறைவனை, திடவடிவமான கல்லில் வடிப்பது வழக்கம்.
குற்றமற்ற கருங்கல்லால் சிலை உருவாக்கப்பட்டு, அதை தான்ய வாசம், தன வாசம், ஜல வாசம், ரத்ன வாசம், புஷ்ப வாசம், வஸ்திர வாசம், சயன வாசம் என முறையாக வைத்திருப்பர். அதிலும் அந்த சிலைக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் அதை நீக்கி சிலையைத் தேர்ந்தெடுப்பர்.
பிறகு, குற்றமற உருவான தெய்வச் சிலைக்கு மந்திர உச்சாடனங்களால் உரு ஏற்றுவார்கள். பிறகு, சிலை பிரதிஷ்டையின்போது குறிப்பிட்ட தெய்வத்துக்கான மந்திர யந்தி ரத்தை எழுதி, ஆகம முறைப்படி, மூர்த்தத்தின் கீழே அடியிலே வைப்பார்கள். அது அந்த தெய்வ சக்தியைப் பிரதிபலிக்க உதவும்.
கும்பாபிஷேக நாளில், ஹோமங்களால் ஜோதியை வளர்த்து, அந்த ஜோதியின் அருகே வைக்கப்பட்ட ஒரு கும்பத்துக்குள் குறிப்பிட்ட தெய்வங்களை எழுந்தருளச் செய்வர்.
அந்த கும்பத்தில் இருக்கும் புனித நீரை அபிஷேகம் செய்து, தெய்வச் சிலைக்கு தெய்வ ஆற்றலை ஏற்றுவதே கும்பாபிஷேகம். அதாவது, கும்பத்தில் இருந்து தெய்வ ஆற்றலை பிம்பத்துக்குக் கொண்டு போவதே கும்பாபிஷேகம். கும்பாபிஷேகத்துக்கு முன்பு கல்; கும்பாபிஷேகத்திற்குப் பிறகு அதுவே கடவுள். காகிதம் கரன்சி நோட்டாக மாறுவதைப்போல எண்ணிக்கொள்ளுங்கள். காகிதத்தைக் கிழித்துப் போடுவீர்கள். ஆனால், கரன்சிநோட்டை கிழிப்பீர்களா!
இறைவனே சிலை வடிவில் கருவறையில் இருந்து நம்மை ஆட்கொள்கிறான்!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணைய தள மின் இதழ் ஆசிரியர் www.modernhinduculture.com
கும்பாபிஷேகம் — வாரியார் விளக்கம்