இறைவனுக்கு எப்படி நன்றி கூற வேண்டும்?

எங்களை இப்படி நல்லபடியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எப்படி நன்றி கூறவேண்டும்? தடுக்கி விழப் போன எங்களை யாரும் கை கொடுக்க எத்தனித்தால் உடனே நன்றி என்கிறோம். இறைவனுக்கு???
நிவேதனம், பிரசாதம் என்பதெல்லாம் என்ன? நமக்காக நன்மைதரும் வேலையை ஒருவர் செய்தாரென்றால் அதற்காக மகிழ்ந்து நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்; அல்லது ஏதேனும் அன்பளிப்பை அவருக்கு அளித்து நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். ஏன், வீட்டிலேயே சின்னப் பையன்களுக்கு அவர்கள் ஏதாவது வீட்டுவேலையை சிறப்பாகச் செய்தார்களென்றால், சாக்லெட், பிஸ்கட் என்று சில தின்பண்டங்களைக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறோம்; நாமும் மகிழ்கிறோம்.
ஏதேனும் நன்மை நமக்கு விளையுமானால் அதற்குப் பிரதி நன்மையாக நாம் சிலவற்றைப் பிறருக்கு அளிப்பது என்பது நம் சந்தோஷத்தின் பிரதிபலிப்பு என்றாலும், எந்த நன்மையையும் அடையாவிட்டாலும் அதே அன்பைப் பிறருக்கு அளிக்கவேண்டும் என்பதுதான் சிறந்த நற்குணம். மனிதருக்கு இப்படியென்றால், தெய்வத்துக்கு?
நம்முடைய இப்போதைய நல்வாழ்க்கைக்குப் பெரிதும் காரணமான தெய்வத்துக்கு என்ன அர்ப்பணிப்பது? இங்குதான் நிவேதனமும் பிரசாதமும் முன்னிலை வகிக்கின்றன. தெய்வம் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்றுகூட யோசிக்காமல் மனமுவந்து பிரசாதங்களை அர்ப்பணிக்கிறோமே, அங்கே நம் நன்றி மனம் பளிச்சிடுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், நமக்காகவே இறைவன் படைத்த மூலப்பொருட்களையே உணவுப் பொருட்களாக்கி அதே இறைவனுக்கு நாம் படைப்பதுதான்!
இறைவனுக்கு எப்படி நன்றி கூற வேண்டும்?
Scroll to top