திருமணத்தின் போது அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தால்!

கடந்த சில பதிவுகளில் மாங்கல்ய தாரணம் , மெட்டி அணிதல் என்று பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் ‘அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் என்ற நிகழ்வுகளை அறிவோம் நண்பர்களே! இந்து மத ,சைவ சமய விடயங்களை தெளிவாக அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பவர்கள் தற்குறிகளே!
அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை ‘அச்மாரோஹணம்’ என்று குறிப்பிடுவார்கள். இந்து மதத்தில் திருமணத்தின்போது செய்யப்பட வேண்டிய முக்கியமான சடங்கு இது. அச்மன் என்றால் கல் என்று பொருள். அசைவற்ற ஒரு கல்லின் மீது மணப்பெண்ணை நிற்க வைத்து மணமகன் ‘ஆதிஷ்டேமம்…’ என்று துவங்கும் மந்திரத்தைச் சொல்வார். “வாழ்க்கை என்பது கரடு முரடாக இருக்கும், சுகம் வரும்போதும் சரி, துக்கம் வரும்போதும் சரி, சோதனைக்குரிய தருணத்திலும் சரி, மனதில் எந்தவித சஞ்சலமும் இன்றி இந்தக் கல் போல திடமான மன உறுதியை நீ பெற்றிருக்க வேண்டும்” என்று மணமகன், மணப்பெண்ணை நோக்கிச் சொல்வதே இந்த மந்திரத்தின் பொருள்.
அம்மியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அக்காலத்தில் திருமணத்தை அவரவர் இல்லத்திலேயே நடத்தினார்கள். வீடுகளில் பயன்படுத்தக் கூடிய கல்லாக அம்மி இருந்ததால் அதனைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அச்மன் என்ற வார்த்தை மருவி தமிழில் அம்மி என்று ஆகியிருக்கலாம். ஒரு கருங்கல்லின் மீது நிற்க வைத்து இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்பதே விதி.
அருந்ததி என்பவர் வசிஷ்ட மகரிஷியின் பத்னி. அருந்ததி என்ற வார்த்தைக்கு தர்மத்திற்கு விரோதமான காரியத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் செய்யாதவள் என்று பொருள். அருந்ததி பார்ப்பது என்கிற நிகழ்வு திருமண நாள் அன்று மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யப்பட வேண்டிய ஒன்று. தற்காலத்தில் நேரமின்மை காரணமாக மண்டபத்திற்கு உள்ளேயே இந்த சம்பிரதாயத்தையும் முடித்துவிடுகிறார்கள்!
சூரியன் அஸ்தமனமானதும், ஆகாயத்தில் வடக்கு திசையில் கிழக்கு நுனியாக ஸப்தரிஷி மண்டலம் காணப்படும். அவற்றில் கிழக்கு மூலையில் இருப்பது மரீசி என்ற ரிஷியைக் குறிக்கும். அவருக்கு மேற்கு திசையில் சற்று கீழே காணப்படுவது வசிஷ்ட மகரிஷி. இதனை விஞ்ஞானிகள் Mizar என்று குறிப்பிடுவர். வசிஷ்டருக்கு தென்கிழக்கில் சற்று மங்கலாகத் தெரிவது அருந்ததி நட்சத்திரம். இதனை Alcor என்று குறிப்பிடுவார்கள். ஸப்தரிஷி பத்தினிகளில் அருந்ததி மட்டுமே தனது கணவருடன் காட்சியளிக்கிறார்.
ஸப்தரிஷி பத்தினிகளிலேயே சிறந்தவர் என்று மற்ற ஆறு ரிஷிபத்தினிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அருந்ததி. அப்பேற்பட்ட அருந்ததியை நோக்கி புதுமணத் தம்பதியர் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மணமகன் அருந்ததி நட்சத்திரத்தை தனது இளம் மனைவிக்கு காண்பித்து இவளைப்போல் நீயும் கற்புக்கரசியாகவும், எந்தச் சூழலிலும் தர்ம நெறி மாறாதவளாகவும் நடந்து கொள்ள பிரார்த்தனை செய்துகொள் என்று அறிவுறுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு இது.
நமது இந்து மதத்தில் உள்ள சடங்குகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை மட்டுமல்ல, மனித உணர்வுகளோடு ஒன்றிணைந்தவை என்பதற்கு சிறந்த உதாரணமே இந்த இரண்டு நிகழ்வுகளும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றி நடந்தால் வாழ்க்கை சிறப்பானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Org
www.modernhinduculture.com
திருமணத்தின் போது அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தால்!
Scroll to top