புண்யாஹவாசனம் என்பது ஸ்தல சுத்திக்காகச் செய்யப்படுவது

இந்துக்கள்,சைவர்கள் எந்த ஒரு விடயத்தை தொடங்குமுன் புண்யாஹவாசனம் என்று ஓர் சடங்கு செய்துதான் ஆரம்பிப்போம் , அது பற்றிய சிறு விளக்கத்தை இன்று பார்ப்போம்.
புண்யாஹவாசனம் என்பது ஸ்தல சுத்திக்காகச் செய்யப்படுவது. அது மாத்திரமல்ல, இடம், பொருள், ஆத்மா என அனைத்தையும் சுத்தமாக்கும் சக்தி கொண்டது இந்த புண்யாஹவாசனம். “ஹிரண்யவர்ணா சுசய:” என்று துவங்கும் மந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஹிரண்யம் என்றால் தங்கம் என்று பொருள்.
சுத்தமான நீர் தங்கம் போல் பிரகாசிக்கும் தன்மை கொண்டது என்று துவங்குகிறது இந்த மந்திரம். இந்த நீர்தான் தேவலோகத்தில் அமிர்தமாக இருந்து தேவர்களைக் காக்கிறது, இந்த உலகத்தில் மழையாகப் பொழிந்து நம் அனைவரையும் உயிர்வாழச் செய்கிறது, இந்த நீருக்குள் அக்னி முதலான தேவர்கள் அடங்கியிருக்கிறார்கள், என்று தண்ணீரின் பெருமையை விலாவாரியாக எடுத்துச் சொல்லி இத்தகைய பெருமை வாய்ந்த நீரினைக் கொண்டு இந்த இடத்தினையும், இங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களையும், எஜமானனையும் சுத்தம் செய்வதே புண்யாஹவாசனம் என்கிற நிகழ்வு.
இந்த புண்யாஹவாசனம் அனைத்து விதமான விரதங்கள், பூஜைகள், சுபநிகழ்ச்சிகள் அனைத்திலும் கட்டாயம் இடம் பெறும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜையை எவ்வாறு துவக்குகிறோமோ, அவ்வாறே பிள்ளையார் பூஜையைத் தொடர்ந்து அடுத்தபடியாக வருவது இந்த புண்யாஹவாசனம்.
‘கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதீ, நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சந்நிதிம் குரு’ என்று சொல்லி நீரினைத் தெளிப்பார்கள். அதாவது கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என்ற அனைத்து புண்ணிய நதிகளின் தீர்த்தமும் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்து இந்த இடத்தையும், இங்கிருப்பவர்களையும் புனிதமாக்கட்டும் என்பது இந்த மந்திரத்திற்கான பொருள்.
பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு மட்டுமல்ல, திருமணம், க்ருஹப்ரவேசம், கணபதி ஹோமம், விரத பூஜைகள் உட்பட அனைத்து சடங்குகளிலும் புண்யாஹவாசனம் என்கிற ‘சுத்தப்படுத்துதல்’ அல்லது ‘புனிதமயமாக்குதல்’ சடங்கு நிச்சயம் இடம் பெறும்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture.Org
www.modernhinduculture.com
புண்யாஹவாசனம் என்பது ஸ்தல சுத்திக்காகச் செய்யப்படுவது
Scroll to top