சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புரு‌ஷத்தில்……………………………………..

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புரு‌ஷத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். காவல் தெய்வமாக கருதப்படும் இவரும், ஈசனின் முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து வருகிறார். அனைத்து சிவாலயங்களிலும் வடகிழக்கு திசையில் இவருக்கு தனியாக சன்னிதி இருக்கும். திரிசூலத்தை கையில் ஏந்திய படியும், நாய் வாகனத்துடனும் காணப்படுபவர் இவர். பைரவர் என்பதற்கு பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தைப் போக்குபவர் என்று பொருள்.
பைரவர் அவதாரம்
சிவனுக்கு இருக்கும் ஐந்து தலைகளைப் போன்றே, ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதனால் பிரம்மா, ‘தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் என்னையே வணங்க வேண்டும்’ என்று கட்டளை விதித்தார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும், சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய ஈசன், பைரவரைத் தோற்றுவித்தார். ஈசனிடம் இருந்து வெளிப்பட்ட பைரவர் கோபத்துடன் சென்று, பிரம்மனின் ஒரு தலையை நகத்தினால் கிள்ளி தன் கைகளில் ஏந்திக்கொண்டார். பிரம்மனின் தலையை துண்டித்ததால், பைரவருக்கு பிரம்மஹத்தி தோ‌ஷம் உண்டானது. அந்த தோ‌ஷம் விலகுவதற்காக கபால ஓட்டையும், பிரம்மாவின் தலையையும் கையில் ஏந்தியபடி, பிச்சை எடுத்த வண்ணம் உலகம் முழுவதும் வலம் வந்தார். காசியில் அவர் நுழைந்ததும் அவர் கையில் இருந்த கபாலம் உடைந்தது. அன்று முதல் அவர் காசியை பாதுகாக்கும் காவலராக இருந்து அருளாசி புரிந்து வருகிறார்.
அந்தகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, பைரவரை ஈசன் தோற்றுவித்தார் என்றும் கூறப்படுகிறது. பைரவர் 64 வடிவங்களில் உருவமெடுத்து அரக்கர்களை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தற்போது அவற்றுள் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை உள்ளது. அந்த அஷ்ட பைரவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சக்தி பெயர்கள்:–
அசிதாங்கபைரவர் (பிராம்ஹி), குரு பைரவர் (மகேஸ்வரி), சண்டபைரவர் (கவுமாரி), குரோதான பைரவர் (வைஷ்ணவி), உன்மத்தபைரவர் (வராகி), கபாலபைரவர் (மகேந்திரி), பீ‌ஷணபைரவர் (சாமுண்டி), சம்ஹாரபைரவர் (சண்டிகாதேவி).
பல வரங்களைத் தரும் பைரவரை வழிபடுவதற்கு சாலச் சிறந்த தினமாக அஷ்டமி திதி உள்ளது. அன்றைய தினம் அஷ்ட லட்சுமிகளும், பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அதே நாளில் நாமும் பைரவரை வழிபாடு செய்தால் பொன், பொருள், ஐஸ்வரியத்துடன் சகல சவுபாக்கியங் களும் கிடைக்கும்.
பைரவ வழிபாட்டை முதன் முதலாக தொடங்குபவர்கள், தை மாதம் வரும் ஒரு செவ்வாய்க் கிழமையில் வழிபாட்டை தொடங்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வணங்கி வருவதுடன், காலபைரவ அஷ்டக துதியை பாராயணம் செய்து வந்தால், எதிரிகளின் தொல்லை அகலும். எம பயம் நீங்கும். கடன் தொல்லை விலகும்.
பைரவ வழிபாடும்.. கிழமைகளும்…
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். கடன் வாங்கி வட்டி கட்டி கஷ்டப்படுபவர்கள் ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம். சிம்மராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பானது.
திங்கட்கிழமை சிவனுக்கு பிரியமான வில்வத்தால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், சிவனருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக்காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டைமலர் சாற்றி வழிபட கண்நோய்கள் அகலும். கடக ராசிக்காரர்கள் இந்தக் கிழமைகளில் வழிபடலாம்.
எதிர்பாராதவிதமாக இழந்து விட்ட பொருளை திரும்ப பெற பைரவர் வழிபாடு பலன் தரும். செவ்வாய்க்கிழமை மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த பொருள் திரும்ப கிடைக்கும். செவ்வாய்க்கிழமை மே‌ஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட சிறந்த நாளாகும். எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டால் நற்பலன்கள் வந்து சேரும்.
புதன்கிழமை நெய் தீபம் ஏற்றிவழிபட வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் இது.
வியாழக்கிழமை பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு விலகி நலம் கிடைக்கும். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட இந்தக்கிழமை சிறந்தது.
வெள்ளிக்கிழமை மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நீங்காத செல்வம் வந்து நிறையும். ரி‌ஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட ஏற்றநாளாகும்.
சனிபகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோ‌ஷம் விலகி நன்மை கிடைக்கும். மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள்.
சொர்ணாகர்‌ஷண பைரவர்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வறுமை அகலவும், செல்வம் சேரவும் சொர்ணாகர்‌ஷண பைரவர் அருள்புரிகிறார். இவர் அமர்ந்த நிலையில் தன்மடியில் பைரவியை அமர்த்திக்கொண்டு, ஒரு கையில் அமுத கலசமும், இன்னொரு கையில் சூலமும் ஏந்தியிருப்பார். தலையில் வைர கிரீடம், பட்டு வஸ்திரம் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருவார். இவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறந்த பலனைக் கொடுக்கும். இந்த பைரவரை, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி அல்லது பவுர்ணமி நாளில் வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும், பொன், பொருளும் கிடைக்கும். அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். பைரவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். பக்தியுடன் சொர்ணாகர்‌ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து, தினந்தோறும் தூபதீபம்காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும்.
நவக்கிரக பைரவர்களும் உபசக்திகளும்
நவக்கிரகங்கள் – பிராண பைரவர் – பைரவரின் உபசக்தி
1. சூரியன் – சுவர்ணாகர்ஷணபைரவர் – பைரவி
2. சந்திரன் – கபால பைரவர் – இந்திராணி
3. செவ்வாய் – சண்ட பைரவர் – கௌமாரி
4. புதன் – உன்மத்த பைரவர் – வராஹி
5. குரு – அசிதாங்க பைரவர் – பிராமஹி
6. சுக்கிரன் – ருரு பைரவர் – மகேஸ்வரி
7. சனி – குரோதன பைரவர் – வைஷ்ணவி
8. ராகு – சம்ஹார பைரவர் – சண்டிகை
9. கேது – பீஷண பைரவர் – சாமுண்டி
சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புரு‌ஷத்தில்……………………………………..
Scroll to top