பூர்ண கலசம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம், அறிவோம் நண்பர்களே!
சமய வழிபாட்டில் நிறைகுடம் எனப்படும் பூர்ண கலசம் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது. தமிழில் நிறைகுடம் என்பது முக்காலத்தையும் உணர்த்துவதாகும். இது நிறைந்திருந்த குடம், நிறைந்திருக்கும் குடம் , நிறையப் போகிற குடம் என்னும் முன்று காலத்தையும் குறிப்பதாகும்.
இதில் கலசம் எனப்படும் குடம். அதன் மீது நெருக்கமாக குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றப்படும் நூல். அதன்மீது அலங்காரமாக அணிவிக்கப்படும் நூல், கலசத்துள் இடப்படும் சுக்கிலம் எனப்படும் தாதுப் பொருட்கள், குடத்தில் நிறைக்கப்படும் நீர் குடத்தின் வாயிலில் வைக்கப்படும் தேங்காய் அதன் மீது வைக்கப்படும் பிரம்ம கூர்ச்சம் என பல அங்கங்களைக் கொண்டதாகும்.
பூர்ணகும்பத்தை அதன் தெய்வீகத்தன்மை கருதி அதனை கீழே வைக்காமல் தானியக் குவியலை பரப்பி அதன்மீதே வைப்பர். பூர்ண கும்பத்தில் இறைசக்தி நிறைந்து இருந்து அருள்புரிவதால் அதற்கு பட்டாடை அணிவதி்து சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் அணிவித்து தெய்வமாகவே போற்றி வணங்கப்படுகிறது.
அனைத்து தெய்வங்களையும் பூர்ண கும்பத்தில் எழுந்தருளிவைத்து வழிபடுகிறோம். நமது வேண்டுதலை ஏற்று தெய்வங்கள் கும்பத்தில் எழுந்தருளி இருந்து நமது பூஜைகளை ஏற்றுக்கொண்டு நாம் வேண்டும் வரங்களை அளிக்கின்றன.
கும்பங்களில் நிலைப்படுத்தும் தெய்வங்களின் சக்தி கும்ப நீரில் நிறைந்திருக்கும் என்பதால் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அந்நீரால் நீராடுவது, அதை தலையில் தெளித்துக் கொள்வது, உள்ளங்கையில் ஏற்று அருந்துவது, அந்திய நீரை கவசமாக பாவித்து கண்கள் தலைதோள்கள் மீது தடவிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறோம்.
வேள்விச் சாலைகளில் வைக்கப்படும் புனித நிறை குடங்களான கலசங்களை அலங்கரிப்பது கலசாலங்காரம் என்றும் கும்பாலங்காரம் என்றும் அழைக்கப்படும். இனி இதன் செயல் பாட்டைக் காணலாம்.
பூஜையின் தேவைக்கேற்ப சிறிய கலசம்
( சிறு பானை) குடம் (பெரிய பானை) ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மண்பானைகளாக இருந்தால் முதல் நாள் அவற்றைத் தேய்த்து கழுவித் தூய்மைப்படுத்த வேண்டும். அதில் உள்ள சூளைப் புகை நாற்றம் போக பஞ்ச கவ்யத்தால் சுக்தி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சுத்தம் செய்யப்பட்ட குடத்தின் மீது குறுக்கும் நெடுக்குமாக நெருக்கமாக நூல் சுற்றப்படும். இதில் திலப்பிரமாணம்,யவைப் பிரமாணம், கஜநேந்திரப் பிரமாணம் என்று சுற்றும் நூல் இடைவெளியை ஒட்டி பெயர்களை அமைகின்றன. ஒரு எள் இருக்கும் வகையில் அதிநெருக்கமாக நூல் சுற்றுதல் திலப்பிரமாணம் எனப்படும்.
அதற்கும் மேலாக யவை எனும் தானியம் அளவு இடைவெளியிட்டு சுற்றுவது யவைப் பிரமாணம் எனப்படும். யானைக்கண் அளவு இடைவெளி இருக்கும்படி நூல் சுற்றுவது கஜநேந்திரப் பிரமாணம் எனப்படும் இதில் முதலில் சொன்ன எள்ளளவு இடைவெளி வைத்து நூலைச் சுற்றுவதே உத்தமம் அடுத்தது, மந்திமம் பெரிய இடைவெளிவிட்டு சுற்றுவது அதமம்.
சுற்றப்படும் நூல் மூன்று பிரிவுகளாக இருக்க வேண்டும். சிலர் ஐந்துபுரி நூல்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த நூல் தூய வெண்ணிறம் கொண்டதாக இருக்க வேண்டும். இதன் மீது ஐந்து வண்ண பட்டு நூற்களைக் கொண்டு கண்ணைக் கவரும் வகையில் நூல் சுற்றுவர். இப்போது கம்பளி நூலையும் பயன் படுத்துகின்றனர். இதில் இடம் பெறும் ஐந்து வண்ணங்களும் பஞ்ச பூதங்களைக் குறிப்பதாகும்.
நூலை சுற்றும்போது கழுத்துவரை சுற்றுகின்றனர். ஆனால் கலசத்தின் வாய், கண்டம், உடல் ஆகியவை முழுவதுமாகவே சுற்ற வேண்டும். அதுவே ஆகமவழிச் செயலாகும். நூல் நெகிழ்ந்து போகாமல் நல்ல இருக்கத்துடன் இருக்க வேண்டும். இதுவே குடத்தை அழகுபடுத்துவதாகும்.
ஆதியில் மண்குடங்களே பயன்படுத்தப்பட்டன. பின்னர் வெள்ளி தங்க கலசங்களும் வசதிக்கு ஏற்பப் பயன்படுத்தப்பட்டன. இப்போது அதிக அளவில் பித்தளை செப்புக் குடங்கள் வழக்கத்திற்கு வந்து விட்டன.
இப்போது பித்தளை குடங்களே அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை பொன்மஞ்சள் நிறத்துடன் இருப்பது ஜொலிப்பது போன்ற காரணங்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் குடங்களின் மீது பூ வேலைகளையும் செய்து வைத்துள்ளனர். பெரும்பாலும் அஷ்ட லஷ்மி வடிவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
குடத்தில் நிறைக்கப்படும் நீர் சுத்தமான சூழலில் உள்ள கிணற்றில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சில இடங்களில் அருகிலுள்ள ஆறுகள், புனித நீரூற்றுகள், புராணச்சிறப்பு மிக்க திருக்குளங்கள் போன்றவைகள் இருப்பின் அவற்றிலிருந்தும் நீரை எடுத்துக் கொள்ளலாம். இப்படி வெளியில் இருந்து நீரை எடுத்து அதை பெரிய கலசத்தில் முகந்து வரும் போது அதை யானையின் மீதோ உயர்ந்த காளைகள் பூட்டிய வண்டிகளில் வைத்தோயாக சாலைக்கு எடுத்து வரவேண்டும்.
பிறகு அந்தத் தண்ணீரைப் புதிய வெள்ளைத் துணியில் வடிகட்டிபயன்படுத்த வேண்டும். இந்த நீர் குளிர்ச்சி மிகுந்ததாகவும் கிருமிகள் தோன்றாதிருக்கவும் வாசனை மிக்கதாக இருக்கவும் ஏலம் லவங்கம், ஜாதிக்காய், மாசிக்காய், விளாமிச்சை வேர் பச்சைக் கற்பூரம் போன்றவற்றை இடுகின்றனர். இதில் ஏலவரிசியும், இலவங்கமும் முக்கிய பொருளாக இருக்கின்றன. இவற்றைப் பொடி செய்து இட வேண்டும். இவற்றைக் கலசத்திரவியம் என்பர்.
இந்த தீர்த்தத்துடன் புனித நதிகளான கங்கை, காவேரி முதலிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட நீரையும் சேர்த்துக் கொள்வர். தீர்த்தக் குடத்தில் தெய்வத்தின் பிரதிமைகள், பொன், வெள்ளியாலான மீன்கள், ஆமை வடிவங்கள், நவரத்தினங்கள் பஞ்ச லோகத்தகடுகள் முதலியனவும் இடப்படும். இப்படி இடப்படும் நவரத்தினத்திற்கு சுக்கிலம் என்பது பெயர். அதுவே தெய்வத்தின் வீர்ய சக்தியைக் குறிக்கும் என்கின்றனர்.
கலசத்தில் நீரை நிறைக்கும் முன்பாக நன்கு தணலை மூட்டி அதில் குங்கிலியம் மட்டிப்பால் சாம்பிராணி, அகில், குகில் போன்றவற்றை இட்டு புகைக்கச் செய்து திரண்டு எழும் புகையின் மீது நூல் சுற்றிய கலசத்தை கவிழ்த்துப் பிடித்து அதில் புகை நிறைந்து வெளியேறும்படி செய்வர். குடத்தின் உள்ளே தூபப்புகை இருக்கும்படி அதை சற்று நேரம் மூடிவைப்பர். இப்படிச் செய்வதால் குடத்துக்குள் இருக்கும் நுண்ணுயிர்கள் அழிவதுடன் குடம் தூய்மையும் மணமும் பெறும்.
அதன் பின்னர் குடத்தை நிமிர்த்தி வைத்து அதனுள் புனித நீரை நிறைப்பர். அதில் வீர்யம் உள்ள நவரத்தினம் பஞ்ச லோகம், மீன், ஆமை, தெய்வப் பிரதிமைகள் இடப்படும், மேலும் எலுமிச்சப்பழம் வாசனை மிகுந்த திரவியப் பொடியும் சேர்க்கப்படும். பின்னர் வாயில் மாவிலை கொத்தினை வைப்பர். மாவிலைகள் துளிராகவும், முற்றினதாகவும் இல்லாமல் வளமானதாக இருக்கவேண்டும்.
மேலும் நுனி சுருங்காமலும் பூச்சிகளால் அரிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும். நல்ல பச்சை வண்ணத்துடன் கவர்ச்சியான இலைக் கொத்தை வைக்க வேண்டும். இதுவே மந்திர ஒலிகளை கலச நீரில் செலுத்தி தெய்வ சக்தியை குடத்துள் நிறைப்பதாகும். அதனால் மாவிலைகளை நன்கு தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
பிடியளவு தர்ப்பையை எடுத்து நுனியில் முடிந்து வண்ண நூலால் அலங்கரித்து மாவிலைகளுடன் வைப்பர். இதுவும் மந்திர ஒலிகளையும் பீஜ ஒலிகளையும் நுனியால் வாங்கி அடியால் கலச நீருக்குள் செலுத்தி அதை மந்திர சக்தியுள்ளதாக மாற்றுவதாகும். இந்த மாவிலையுடன் கூடிய அந்தர் கூர்ச்சம் எனப்படும் இந்த தர்ப்பை ஆகியவற்றை வைத்த பின் அதன்மீது தேங்காயை வைப்பர்.
தேங்காய் மூன்று கண்களைக் கொண்டிருப்பதாலும் மேல்தோல், நார், ஓடு, பருப்பு தண்ணீர் என்று ஐந்து அங்கங்களைக் கொண்டிருப்பதாலும் அது தெய்வசக்தி கொண்டதாகப் போற்றப்படுகிறது. தோலுடன் கூடிய தேங்காயே பூர்ணபலம் (வெட்டுப்படாது முழுவதுமாக இருப்பது) நிறைவான பழம் எனப்படும்.
இப்போது வசதிக்கு ஏற்ப நாருடன் கூடிய மட்டைத் தேங்காய், நன்கு உரித்து மஞ்சள் பூசிய தேங்காய் என தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வைக்கின்றனர். தேங்காயின் மீது தர்ப்பையை முடிந்து முடி உச்சியிலும் அடிகள் நாற்புறமும் இருக்கும்படி வைப்பர். இதற்கு பகிர் கூர்ச்சம் என்பதும் பெயராகும். பிறகு மலர்மாலைகளால் கும்பத்தை அலங்கரிப்பர்.
இப்படி அலங்கரிக்கப்பட்ட பூர்ண கும்பத்தை தானியக் குவியல் மீது வைப்பர். நெல், யவை, மூங்கில் நெல்(அ) அரிசி நவதானியங்கள் போன்றவற்றை இலைகள் மீது பரப்பி அதன் மீது நெல்லை இட்டு அதன் மீது கலசத்தை வைக்கின்றனர்.இப்படி படிப்படியாக அலங்கரித்து தெய்வீகம் ஏற்றப்பட்ட கலசங்களில் நெய்வங்களை நிலைப்படுத்தி வழிபாடு செய்கின்றனர். கலச வழிபாடு பாரத தேசத்தில் தோன்றியுள்ள அனைத்து சமயங்களுக்கும் பொதுவானதாகவே உள்ளது.
கலசத்தில் வைத்து பூசிக்கப்பட்ட நீரை பூசையில் நிறைவில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வர். ஆகாசத்தில் இருக்கும் தெய்வ சக்தியைச் சாதகன் தனது ஆற்றலால் தனது கபால வாயில் வழியாக உள்ளே அழைத்து, இருதயத்தில் பூசித்து பின்னர் அக்னியில் வளர்த்து அக்கினியிடமிருந்து கலசத்தில் இருக்கும்படி செய்து, பின்னர் தெய்வச்சிலையில் நிலை பெறச் செய்கிறார்.
வானில் ஒலி வடிவாக இருக்கும் சக்தி ஆன்மாவுக்குள் ஒலியாக இறங்கி நெருக்கில் வளவந்து நீரில் கலந்து அதிலுள்ள தண்ணீர் வழியாக சிலையை அடையச் செய்வதே குட முழுக்கு விழாவாகும். இதில் நீர் நிரம்பிய குடத்தை பூசித்து அதிலுள்ள தண்ணீர் மூலம் தெய்வ சக்தியை பிம்பத்தில் செலுத்துவதால் அது குடமுழுக்கு எனப் பெயர் பெற்றது.
பூசை முடிந்ததும் பூரண கும்பங்களில் எஞ்சியுள்ள நீரை கால்படாத இடத்தில் கொட்ட வேண்டும். பூஞ்செடிகள், கிணறுகள் ஆறுகள் இவற்றில் சேர்க்க வேண்டும். அதுபோலவே அதில் அலங்கரிக்கப் பயன்படுத்தும் மாவிலை, கூர்ச்சம், நூல் போன்றவற்றையும் உயரமாக மரக்கிளைகளில் வைத்துவிட வேண்டும்.
நன்றி: ஆன்மிக மலர்.
பூர்ண கலசம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்,