தீர்த்த உத்சவம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தீர்த்த உத்சவம்!
ஆலயங்களில் நடைபெறும் மகோத்ஸவ இறுதியில் தீர்த்த உத்சவம் நடைபெறுவதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.,தரிசித்து இருப்பீர்கள். இது மிக மிக அவசியமான உத்சவம்.
பெருந் திருவிழாக்கள் யாவும் நீரோடு தொடர்புடையவையாகும். இவை கலசங்களில் புனிதநீரைச் சேகரித்து எடுத்துவரும் தீர்த்த சங்கிரமணம் எனும் நிகழ்வுடன் தொடங்கித் தீர்த்தவாரி எனப்படும் சடங்குடன் முடிவடைகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வு இறுதிநாளில் நடைபெறும் தீர்த்தவாரியே ஆகும். தீர்த்தத்தை வரித்தல் என்பதே ‘‘தீர்த்தவாரி’’ யாகும். தீர்த்தம் என்பது புனிதமாக விளங்கும் நீர்; வரித்தல் என்றால் உரிமையாகக் கொள்ளுதல் என்பது பொருள். விழாவின் முடிவில் இறைவன் தண்ணீரில் மூழ்கி அதைத் தூய்மைப்படுத்தித் தன்மயமாக்கும் வேளையில் மக்கள் அத்தீர்த்தத்தில் நீராடி தூய்மை பெறுதலே தீர்த்தவாரி விழாவாகும்.
சிவாலயப் பெருந்திருவிழாவின் இறுதி நாளான பத்தாம்நாள் காலையில் தீர்த்தவாரி சிறப்புடன் நடைபெறுகிறது. காலையில் முதலில் நடராஜப்பெருமாள் சிவகாமி அம்மையுடன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் அளிப்பார். பிறகு சோமாஸ்கந்த மூர்த்தி பரிவாரங்களுடன் யாகசாலைகளில் வைக்கப்பட்ட பாலிகைகளுடன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருள்வார். அவர் முன்னிலையில் முளைப்பாலிகையின் முளைகள் நீரில் விடப்படும். பிறகு சூலதேவரை ஏந்தியவாறு அர்ச்சகர் நீரில் மூழ்குவார். அந்நிலையில் அந்தத் தீர்த்தம் சிவசக்தி மயமாவதால் அதில் மூழ்குவதைப் பெரும் பேறாகக் கருதுகின்றனர்.
தீர்த்தவாரியின் போது தீர்த்தமாடிப் பெருமானை வழிபட்டால் தான் விழாவைக் கண்ட பயன் பூரணமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. தீர்த்தவாரி விழாக்கள் பெரும்பாலும் ஆலயத்திற்கு முன்னுள்ள திருக்குளங்களிலேயே நடைபெறும். சிறப்பு நாட்களில் சுவாமி அருளிலுள்ள ஆறுகள் (அல்லது) கடலுக்குச் சென்று தீர்த்தம் அளிப்பார். பெருந்திருவிழாவின் இறுதிநாளில் மட்டுமின்றி, கிரகணம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, அர்த்தோதயம். மகோதயம் முதலிய புண்ணிய காலங்களிலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
நன்றி: ஆன்மிக இதழ்.
தீர்த்த உத்சவம்!
Scroll to top