தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நண்பர்களே, பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன பல இடங்களில் வீணாக்கப் படுவதை அவதானித்து இருப்பீர்கள். இப்படி வீணாக்குவதை தவிர்ப்போம்.
பிரசாதம் மட்டுமல்ல, வெறும் சாதத்தை வீணாக்கினாலே பாவம் என்பது வந்து சேரும். ‘அன்னம் ந நிந்த்யாத்’ என்கிறது வேதம். அன்னத்தை நிந்திக்காதே. அன்னத்தை பழித்தல் கூடாது, உணவினை உண்ணும்போது கீழே இறைத்தல் கூடாது என்று பலவிதமாக வேதத்தினை ஆதாரமாகக் கொண்டு தர்மசாஸ்திரம் அடித்துச் சொல்கிறது.
வெறும் சாதத்திற்கே இப்படியென்றால் சாதத்திலேயே உயர்ந்ததாகக் கருதப்படும் பிரசாதம் என்பது கிடைத்தற்கரிய ஒன்று. வெறுமனே சமைத்த சாதம் ஆனது இறைவனுக்கு நைவேத்யம் செய்யப்படும்போது அது உயர்ந்த பொருளாக அதாவது பிரசாதமாக மாறிவிடுகிறது. அத்தனை உயர்வான ஒரு பொருளை வீணாக்குவது என்பது மடமையான செயல் அல்லவா.
கையில் கிடைத்த மஹாலக்ஷ்மியை யாராவது தூக்கி எறிவார்களா. சாதத்தைஅன்னலட்சுமி என்றுதானே அழைக்கிறோம். அப்படியிருக்க சாதத்தை வீணாக்குவது என்பதும் செல்வத்தை தூக்கி எறிவதற்குச் சமமே. அதிலும் அத்தனை ஐஸ்வரியமும் நிறைந்த, இறைவனுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட, கிடைத்தற்கரிய கோயில் பிரசாதத்தை வீணாக்குவது என்பது நிச்சயமாக பாவச் செயல்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.