தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பாவம் என்போம், புண்ணியம் என்போம், முன்னைய பிறப்பில் செய்த பாவ புண்ணியங்கள் இப்பிறப்பில் என்போம். சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன??? பார்ப்போம்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்கிறார் ஔவையார். அவரது கூற்றினைக் கருத்தில் கொள்ளும்போது நிச்சயமாக வெறும் பாவங்களை மட்டும் செய்தவன் மனிதப் பிறவியினை எடுக்க இயலாது என்பது தெளிவாகிறது. அப்படியென்றால் முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன்தான் இப்பிறவி என்று எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல ‘ஜெனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம், பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அதாவது முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் அடிப்படையில் இப்பிறவியில் பலன்களை அனுபவிப்பார்கள் என்று உறுதிபடச் சொல்கிறார்கள். முழுமையாக புண்ணியம் செய்தவனும் கிடையாது, முழுமையாக பாவம் செய்தவனும் கிடையாது என்பதே ஆன்மிகவாதிகளின் கருத்தாக உள்ளது. முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கான பலனை இப்பிறவியில் அனுபவிக்கும்போது நிச்சயமாக முற்பிறவியில் செய்த பாவத்திற்கான பலனையும் இப்பிறவியில் அனுபவித்துத்தானே ஆகவேண்டும்? ஆக முற்பிறவியில் செய்த பாவத்திற்கான பலன்தான் இப்பிறவி என்று ஒரேயடியாக எதிர்மறையாகச் சொல்வது தவறு. பாவமும் புண்ணியமும்
கலந்ததுதான் மனித வாழ்வு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வுலகில் பிறந்த எவர் ஒருவரும் நிச்சயம் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்கிறார் ஆதி சங்கரர். இவ்வுலகில் பிறப்போர் மரணிப்பர், மரணித்தவர் மீண்டும் இவ்வுலகில் பிறப்பார்கள் என்பதே இதன் பொருள். ஜனனமும் மரணமும் இயற்கையோடு ஒன்றிணைந்தது. இவை இரண்டும் இறைவனின் கைகளில்தான் உள்ளது. அதை நிர்ணயம் செய்ய யாராலும் இயலாது.
இந்த அற்புதமான பிறவியில் அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காமல் வாழ வேண்டும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், அன்பே சிவம், அன்பே கடவுள் என்ற கருத்தினை மனதில் ஆழப் பதித்து அதன்படி செயல்பட வேண்டும், அது கல்வியாக இருந்தாலும் சரி செல்வமாக இருந்தாலும் சரி இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும், ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் ஒருகாரணம் இருக்கும், இறைவன் நம்மை ஏன் படைத்தான் என்பதை உணர்ந்து நம்மால் என்ன செய்ய இயலுமோ அதை இந்த உலகிற்கு பயன்படும்விதத்தில் செய்து காட்டவேண்டும் நண்பர்களே!!!