தர்மத்தின் வடிவானவன் நந்தியெம்பெருமான்!

நண்பர்களே, பலவழிபாட்டு முறைகளை நாம் இங்கு பல பதிவுகளிலும் பார்த்திருக்கிறோம். இன்று நந்தி தேவர் வழிபாட்டை பார்போம், தெரிவோம்.

தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும். `நந்தி’ என்ற சொல்லுக்கு ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம். `நந்தி’ என்ற வார்த்தையுடன் `ஆ’ சேரும்போது `ஆநந்தி’ என்ற பொருள் தருகிறது.

`நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு! என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது. ஆக, நந்தியம் பெருமான் தன்னை வணங்குபவர்க்கு ஆனந்தத்தைத் தருபவர் ஆவார். நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பி விட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.

சிவபெருமான் இடத்தில் இருந்து சிவாகமங்களைத் தெளிந்து நமக்கு அருளினார் நந்திதேவர். ஆதலால் சைவ சமயத்திற்கு முதல் குருவாக விளங்குகிறார். நந்திக்கு `அதிகாரநந்தி’ என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான் நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார்.

ஆலயங்களை காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது. இதன் அடையாளமாகத்தான் கோவில்களில் சுற்று சுவர்களில் நந்தியின் உருவை அமைத்துள்ளார். நந்திதேவர் சித்தர்கள், முனிவர்க்கெல்லாம் முதல் குருவாக விளங்குகிறார். சிவ, சக்தி இருவர் முன்னிலையிலும் இருப்பவர் நந்திதேவர், சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது.

இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும். நந்திதேவரின் உத்தரவு பெற்ற பின்பே, சிவபெருமானின் ஆலயத்தினுள் நாம் பிரவேசிக்க வேண்டும் என்கிறது வேதம். சிவபெருமான் ஒரு தடவை நாரதரிடம் நான் விரைவில் பூலோகம் செல்வேன்.

தர்மத்தைக் காத்து மீண்டும் சைவம் தழைக்கச் செய்வேன். நான் வரும் வரையில் கயிலாயத்தில் நந்தி தேவன் எனது இடத்தில் இருப்பான் என்றார். அனைவரின் முகத்திலும் ஆச்சரியம் விரிந்தது. அதைப் புரிந்து கொண்ட சிவபெருமான், நந்திதேவன் பக்தியில் என்னைப் போன்றவன். ஆதியில் அவதரித்தவன்.

நானே நந்திதேவன். நந்தி தர்மமே வடிவானவன். சிவாய நம என்ற பஞ்சாட்ச மந்திரத்தின் உருவகம் நந்தி தேவனே.

நந்திதேவனை வழிபடுபவர்களுக்குச் சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச், செல்வங்களும், சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும், நல்ல எண்ணங்களும், நல்லொழுக்கமும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடுபேற்றையும் அவர்கள் அடைவர் என்று நந்திதேவரின் பெருமைகளை எடுத்துக் கூறினார். சிவபெருமான்.
சிவபெருமான் தனக்கு இணையாக நந்திதேவரைக் கூறி உள்ளதால் சிவபெருமானை வழிபடுவதற்கு முன் நந்தி தேவரை வணங்க வேண்டும். அதனால், தன்னை வணங்குபவருக்கு மட்டுமல்ல, நந்திதேவரை வணங்கியவருக்கும் மோட்ச சுகத்தையும் மக்கட் பேற்றையும், பக்தியையும், ஊக்கத்தையும், காரிய சித்தியையும், எல்லா வரங்களையும் அளித்து வருகிறார் சிவபெருமான்

தர்மத்தின் வடிவானவன் நந்தியெம்பெருமான்!
Scroll to top