தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
”மூஞ்ச்சூறு (எலி)விநாயகரின் வாகனமானது எப்படி?”
கஜமுகன் – மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன். இந்த அசுரன் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவமிருந்தான். தவத்தின் பலனாக எந்த ஆயுதங்களாலும் தான் அழியாத மாபெரும் வரத்தினை பெற்றான். தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற வரத்தின் ஆணவத் திமிரில் இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு பல தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தான். வலி வேதனையை விளைவிக்க, தேவர்கள் சிவபெருமானிடம் அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டி முறையிட்டனர்.
இதனால் மனமிறங்கிய சிவபெருமான் ஆணைக்கு இணங்கி விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். அசுரன் கஜமுகனுக்கும் விநாயகருக்கும் போர் மூண்டது. அசுரன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அசுரனை அடித்தார்.
ஆனால் அந்த அடிகளால் அசுரன் கஜமுகன் மயங்கி விழுந்தாலும், சிவபெருமானிடம் பெற்ற வரத்தின் காரணமாக அசுரன் இறக்கவில்லை.
இதனால் விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அசுரன் மீது ஏவினார். அசுரன், மூஞ்ச்சூறுவாக (மூஷிஹம்) உருமாறி விநாயகரைத் தாக்க வந்தான். அதை அடக்கிய விநாயகர் அதை தனது வாகனமாக்கிக் கொண்டார்.