மாசி மக வழிபாடு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

நண்பர்களே, மாசி மக பெருவிழா அண்மிக்கும் இந்த வேளையில் , சகல தெய்வ வழிபாடுகளுக்கும் உகந்த இந்த மாசி மகம் முன்னோர் வழிபாட்டிற்கும் மிக முக்கியமான ஒரு தினமாக அமைகிறது.

பௌர்ணமியுடன் இணைந்த மகம், மாசி மகமாகப் பெருமை பெற்றது. `மாக ஸ்நானம்’ புண்ணியத்தைச் சேர்க்கும். மாசி மாதத்தை ‘மாக மாதம்’ என்று புராணம் சொல்லும். மாசி மகத்தில் அத்தனை தெய்வ வடிவங்களும் நீராடி மகிழ்வதுண்டு. மாசி மகத்தையும், மகாமகத்தையும் (மாமாங்கம்), கும்பமேளாவையும் உருவாக்கியது மகம் நட்சத்திரம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்.

சிம்ம ராசியில் இடம்பிடித்த நட்சத்திரம் மகம். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதி. செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நால்வரும் மக நட்சத்திரத்தின் நான்கு பாதங்களிலும் இடம்பிடித்து அம்சகத்தில் இணைந்தவர்கள். இவர்களில் சூரியனை ஆன்மா எனச் சொல்லும் வேதம், சந்திரனை மனதுக்குக் காரகன் என்கிறது. அதேபோல், செவ்வாய் வெட்பம்; சுக்கிரன் தட்பம்; புதன் பூமி என்று ஜோதிடம் குறிப்பிடும். சுறுசுறுப்பு, செல்வம், பகுத்தறிவு ஆகியவற்றைத் தரவல்லவர்கள் இந்த மூவரும்.

சரி! நண்பர்களே, மகத்துக்கு வேறென்ன சிறப்பு?

பித்ருக்களை ஆராதனை செய்ய உகந்தது இது (பித்ருப்ய: ஸ்வாஹா மகாப்ய:…). நம் முன்னோர் திவ்ய பித்ருக்களோடு – வசு, ருத்ர, ஆதித்ய ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் – வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.

`திவ்ய பித்ருக்களைப் படைத்த பிறகு, தேவர்களையும் மனிதர் களையும் மற்ற இனங்களையும் படைத்தார் கடவுள்’ என்கிறது புராணம். தேவர்கள், பித்ருக்களை அண்ணனாகப் பார்ப்பார்கள். தேவர்களின் வழிபாட்டில் முன்னோர் வழிபாடு முன்னமேயே நடந்துவிடும் (நாந்தீச்ராத்தம்). அண்ணனுக்கு முதலிடம் கொடுப்பான் தம்பி என்பது பண்பு மட்டும் அல்ல; சாஸ்திரமும் விரும்புகிறது.

முன்னோர் ஆராதனையும் திருமணமும் சேர்ந்து வந்தால், முதலில் ஆராதனையை முடித்துவிட்டுத் திருமணத்தை ஏற்கச்சொல்லும் சாஸ்திரம் (தஸ்மாத்பித்ருப்ய: பூர்வேத்யு: க்ரியதை). திவ்ய பித்ருக்களுடன் நம் முன்னோரையும் இணைத்து, பித்ருக்கள் என்கிற அந்தஸ்தை அளிக்கிறோம். வசு, ருத்ரன், ஆதித்யன் என்ற மூவரில், நம் பித்ருக்களை இணைத்து, என்றும் ஆராதனைக்குரியவர்களாக அவர்களை உயர்த்துகிறோம்.

இறப்புக்குப் பிறகு, சிறப்பு பெற்ற நம் முன்னோர் அதாவது பித்ருக்கள், மகத்தின் தேவதை கள் (மகா நட்சத்திரம் பிதரோ தேவதா). அவர்களை, ‘வம் வஸூப்ய: ரும் ருத்ரேப்ய: அம் ஆதித்யேப்ய: பித்ரும்ப்யோ நம:’ என்று சொல்லி வழிபடலாம். மந்திரம் தெரிந்தவர்கள் ‘நமோவ: பிதரோ ரஸாய…’ என்ற மந்திரத்தைச் சொல்லி 16 உபசாரங்களை அளித்து வழிபடலாம்.

மந்திரம் தெரியாதவர்கள் ‘தேவதாப்ய: பித்ருப்ய: சமஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:’ என்ற செய்யுளைச் சொல்லி வழிபட வேண்டும். அதுவும் இயலாதவர்கள், காலையில் எழுந்து நீராடியதும், இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளி எடுத்து, ‘பித்ரூன் தர்ப்பயாமி’ என்று சொல்லி விட வேண்டும். ஜலத்தை அள்ளி அளித்து வழிபடுவதில் மகிழ்பவர்கள் அவர்கள்.

தகப்பனின் ஜீவாணுக்களின் தொடர்பு, தன்னோடு சேர்த்து ஏழு தலைமுறைகளில், விகிதாசாரப்படி படிப்படியாகக் குறைந்து ஒட்டிக் கொண்டிருக்கும். அதன்பிறகு ஓய்ந்துவிடும். மூன்று தலைமுறைகளில் முழுமையாக இருக்கும். ஆகையால், மூன்று தலைமுறை பித்ருக்களை நிரந்தர ஆராதனையில் சேர்த்திருக்கிறது தர்ம சாஸ்திரம் (நம: பிதா புத்ர: பௌத்ரோ வஷட் ஸ்வாஹா).

மனதில் பதிந்துவிட்ட, இறந்து போன தந்தையின் உருவத்தை நினைத்துக்கொண்டு வழிபடலாம். தற்போது தந்தையின் வரைபடத்தை வைத்து சிலர் வழிபடுகிறார்கள். இன்னும் சிலர், போட்டோவை வைத்து வழிபடுகின்றனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை, கிரஹண காலங்கள், மஹாளயபக்ஷம் போன்ற காலங்களில் இறந்தோரை நினைத்து அன்னதானம் செய்வதும், விசேஷமான முன்னோர் வழிபாட்டில் அடங்கும்.

சரி நண்பர்களே, எள்ளை ஏன் பிரதானமாக பயன் படுத்துகிறோம்?

ஸ்னேஹம் என்றால் நட்பு என்று பெயர் உண்டு. பற்றிக்கொள்ளுதல் என்றும் சொல்லலாம். எள்ளிலிருந்து வந்த ஸ்னேஹம், அதாவது எண்ணெய் ஒட்டிக்கொள்ளும்; விட்டுப்போகாது. பித்ருக்களுடன் ஒட்டுதலை உறுதி செய்ய ஒட்டும் தன்மை பொருந்திய எண்ணெய்க்கு ஆதாரமான எள்ளைச் சேர்த்துக் கொள்கிறோம்.

பித்ரு தர்ப்பணத்தில். நீரிலும் ஸ்னேஹம் உண்டு. அதன் அளவு குறைந்து காணப்படும். ஆகையால் ஒட்டுதலை உறுதி செய்யும் ஜலத்தால் பித்ருக்களை வழிபடுகிறோம். தினமும் வழிபட வேண்டியவர்களில் பித்ருக்களும் அடங்குவர். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் மூவரையும் தினமும் வழிபடச் சொல்லும் தர்ம சாஸ்திரம்.

பருவகாலங்களை நடைமுறைப்படுத்தி உலகை இயங்கச் செய்பவர்கள் தேவர்கள். கல்வியை அளித்து, சிந்தனை வளத்தைப் பெருக்கி, மனித இனத்தைச் செழிப்பாக்குபவர்கள் ரிஷிகள். அறம் காக்கும் வாரிசு களை தடை இல்லாமல் அளித்து, உலக இயக்கத்தை நிலைநாட்டுபவர்கள் பித்ருக்கள். அவர்களது வழிபாடு உலக நன்மைக்கு உகந்தது.

சூரிய வம்சம், சந்திர வம்சம், யாதவ வம்சம் போன்ற வம்ச பரம்பரை வளர்ந்தோங்க, அவர்களது அருள் பயன்பட்டது. இயற்கையாக இவ்வுலகம் அழிவைத் தொடும் வரை உலக இயக்கத்தை முறைப்படுத்த, அறத்தைக் காக்க, நல்ல குடிமகன்களைத் தோற்றுவிக்க அவர்களது அருள் வேண்டும். எனவே, மறக்காமல் தினமும் அவர்களை வழிபட வேண்டும்.

மகத்தன்றும் முன்னோரை வழிபடுங்கள்; மகத்தான வாழ்க்கையைப் பெறலாம்.

— நன்றி ”ஆன்மிக மலர்”

Image may contain: one or more people
மாசி மக வழிபாடு.
Scroll to top