வருவான் வடிவேலன் குறை தீர்க்க!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

அரிய வரங்களை பெற்ற சூரன் தேவலோகத் தைக் கைப்பற்றினான்; அகப்பட்ட தேவர்களை அடிமையாக்கினான். செய்வதறியாது திகைத்த தேவர்கள், சிவனாரைச் சரணடைந்தார்கள். அவர்களை ரட்சிக்க சிவம் சித்தம்கொண்டது; முருக அவதாரம் நிகழ்ந்தது.

சிவனாரின் திருமுகங்களாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோ ஜாதம் மற்றும் அவரின் உள்முகமாகிய அதோ முகத்தின் நெற்றிக்கண் திறக்க ஆறு பொறிகள் தோன்றின. அவற்றைச் சிவப்பரம்பொருள் வாயுதேவனிடம் அளித்தார்.

வாயுவோ, ஆற்றல்மிகு பொறிகளைத் தாங்க இயலாமல், அவற்றை அக்னியிடம் அளித்தார், அக்னி பகவான் பொறிகளைக் கங்கையில் சேர்த்தார். கங்காதேவி அவற்றைச் சரவணப் பொய்கையில் சேர்த்தாள். அங்கே, பொறிகள் ஆறும் குழந்தைகளாய் மாறித் தவழ்ந்தன. கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப் பட்டன.

உரிய காலத்தில் அம்மையும் அப்பனும் வந்தார்கள். ஆறு குழந்தைகளையும் அருகில் அழைத்து சேர்த்து அணைத்தாள் ஆதிசக்தி. ஆறு முகங்கள்- பன்னிரு கரங்களுடன் ஓருருவாய் ஒளிர்ந்து நின்றான் கந்தப்பெருமான். அக்கணமே தேவர்களின் வினைகள் யாவும் ஒழிந்தன என்றே சொல்லலாம். ஆம்! கந்தனரு ளால் விரைவில் அசுரகுலம் வீழ்த்தப்பட்டு தேவர் குலம் தழைத்தது.

தேவர்களை மட்டுமல்ல, கலியுகத்தில் வாழும் நம்மை ரட்சிக்கவும் ஓடோடி வருவான் வடிவேலன்.

”’அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்”’

– எனப் போற்றுகிறது திருமுருகாற்றுப்படை. நாமும் சிந்தையில் கந்தனை நிறைத்து, அவன் தாள்களில் சரண்புகுந்துவிட்டால், வெற்றிகள் பெருகும்; வாழ்க்கை வளமாகும்.

Image may contain: 4 people
தகவல் தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.
வருவான் வடிவேலன் குறை தீர்க்க!
Scroll to top