தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நண்பர்களே, எங்கள் அண்மைய பகிர்வான கார்த்திகைத் தீப திருநாள் தொடர்பாக மேலதிக விடயங்களை இங்கு பகிர்கிறோம்.
இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டி வளர்த்தனர்,
சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்- தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.
அப்போது சிவபெருமான், இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகினனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள். இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்துவது போலாகும்.
பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.