தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்வதற்கு முன்பும், மேலும் நல்ல பல விடயங்கள் ஆரம்பிக்கும் முன்பும் தட்டை நீட்டி, தொட்டுக் கும்பிடச் சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், எதற்கும் ஒரு காரணம் உண்டு அன்பர்களே:
ஒருவருக்கு இந்த இடத்தில், இந்தக் காலத்தில், இப்படி ஒரு வேண்டுதலை முன்னிட்டு, இன்ன பூஜை செய்யப்படுகிறது அல்லது இந்த சுப காரியம் என்று சொல்லி பூஜை செய்வதே சங்கல்பமாகும்.
செல்போன் மூலம் நாம் இருக்கும் இடத்தைத் தேவைப்படுபவர்களுக்கு அனுப்புகிறோம் அல்லவா… அதுபோன்றதுதான் இதுவும். இப்படியான சங்கல்பத்தின் பொருட்டே அர்ச்சனைத் தட்டை தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள்.
ஆலயங்களில் பக்தர்கள் தனித்தனியாக அர்ச்சனை செய்வது காம்ய பூஜை ஆகும். அதாவது, நாம் ஒன்றை வேண்டிக்கொண்டு நம்முடைய பிரார்த்தனையைக் கடவுளிடம் சமர்ப்பிப்பது, காம்ய பூஜை.
தாங்கள் தனியாக ஆலயத்துக்குச் சென்று வழிபட்டாலும் கூட்டத்துடன் சேர்ந்து வழிபட்டாலும், இறைவனின் அருள் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையே செய்யும். அதன்பொருட்டே ஆலயங்களில் அர்ச்சகர் பெருமக்களால் ஆகம முறைப்படி இன்றளவும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள், அனுதினமும் சங்கல்பம் செய்துகொண்டு பூஜைகளைத் தொடங்குவார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை செய்ய விரும்பினால், தட்டிலுள்ள புஷ்பத்தையோ, குங்குமத்தையோ அவர்களின் பெயர், நட்சத்திரத்தைக் கூறித் தொடச் சொல்வது மரபு.
தற்காலத்தில், பயோமெட்ரிக் முறையில் நம் விரல் ரேகையைப் பதித்து, நாம் வந்திருக்கிறோம், ஆத்மார்த்தமாக பங்கு பெறுகிறோம், என்று பதிவு செய்வதைப் போன்றது, இந்தச் செயல். ஓர் ஆத்ம தொடர்பை ஏற்படுத்தும் அற்புதமான செயல்பாடு இது.
இது ஆலய பூஜைகளுக்கும் மற்றும் விவாகம் போன்ற நற்காரிய விடயங்களுக்கும் பொருந்துகிறது.
நன்றி: ஷண்முக சிவாச்சாரியார்.
தகவல் சேகரிப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.