நகுலேசுவரம் – இலங்கை

Picture

நகுலேசுவரம் – இலங்கை

மானிடசரீரத்தின் வெளிப்பாடாக ஆலயங்கள் காணப்படுகின்றன. மானிடசரீரமே ஆலயங்களுள் மிகவும் சிறந்தது. அண்டமெங்கும் குடிகொண்டுள்ள தெய்வம், மானிடசரீரத்திலும் வீற்றிருக்கின்றது. இத்தத்துவத்தை சாதாரண அறிவுடையோர் புரிந்துகொள்வது கடினம். சாதாரண மக்களும் இறைத்தத்துவத்தை இலகுவாகப் புரிந்துகொள்ளவே ஆலயங்கள் உருவாகின. ஆன்மீக நிலையில் இரு நிலைகள் காணப்படுகின்றது. ஒன்று அறிவு மேம்பட்டோர் நிற்கும் ஞானநிலை. இந்நெறி நிற்பவர்கள் மிக அரிதாகவே காணப்படுவர். ஏனையோர் கிரியை நெறி சார்ந்து நிற்பவர்கள். மனித நாகரிக வளர்ச்சிப்படியில், மக்களைப்பற்றிச் சிந்தித்த ஞானிகள் கோயில், திருவுருவம், வழிபாட்டு முறைகள் என்பனவற்றை இவர்களுக்கா ஏற்படுத்தினர். இவ்வாறான நெறிகளை அடிப்படையாகக் கொண்டதாக இந்துசமயம் விளங்குகின்றது. சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவசமயம் மிகவும் பழமையானது. ‘சைவம் சிவனுடன் சம்பந்தமாவது’ என்று திருமூலர் சைவத்திற்கு இலக்கணம் கூறியுள்ளார். வரலாற்றுக்குமுற்பட்ட காலந்தொட்டு முழுமுதற்கடவுளாகப் போற்றப்படும் சிவனுக்குரிய ஆலயங்கள் ஈழமெங்கும் காணப்பட்டன.

சிவவழிபாடு, வேதகாலத்திற்கு முந்திய வழிபாடென ஆய்வாளர்கள் கூறியுள்ளார். சிந்துவெளி நாகரிகம், மனித இனத்தின் நாகரிகத்தை எடுத்தியம்பும் தொன்மையான ஒரு நாகரிகமாகக் கருதப்படுகின்றது. சிந்துவெளியில் காணப்பட்ட மொகஞ்சதாரோ, உறராப்பா ஆகிய நகரங்களிலே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பலவும், அக்காலத்திருந்த வழிபாட்டுமுறையை வெளிப்படுத்தியுள்ளன. அறிஞர்கள் பலரது கருத்துப்படி, கி.மு. ஏறக்குறைய 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்படும் சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ந்த அறிஞர் சேர். ஜோண் மார்ஷல் அவர்கள், ‘இன்றளவும் வழக்கிலுள்ள மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகின்றது’ என ‘Mohenjodaro and the Indus Civilization’ என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழர் கடவுட்கொள்கை உடையவர்களாய், எல்லாவற்றையும் கடந்து நின்ற, முழுமுதற்கடவுள் ஒருவரைப்பற்றிய கோட்பாட்டினைக் கொண்டிருந்தார்கள் என்பதையும், பழந்தமிழ் நூல்கள் மூலம் அறிய முடிகின்றது.

ஈழத்திலும், சைவம் உயர்நிலையிலிருந்ததை, இதிகாச புராண வரலாறுகள் மூலம் அறிய முடிகின்றது. சிங்கள வரலாற்று நூல்களான மகாவம்சம், தீபவம்சம் ஆகியன இயக்கரும், நாகரும் ஈழத்தின் ஆதிக் குடிகளென்பதை ஏற்றுள்ளன. ஆகவே இம்மக்கள் சிவவழிபாட்டைக் கடைப்பிடித்தவர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில் சிவபக்தனாகிய இராவணன், இலங்கையை ஆண்டமை பற்றிய வரலாறுகளும், புராணக்கதைகளும், அவனது பராக்கிரமமும் உண்மைதான்? என்ற ஐயப்பாடு இன்றும் பலரிடையே காணப்படுகின்றது. சமகால வாழ்வியலை அடிப்படையாகக்கொண்ட சம்பவங்களே அக்காலத்துக்குரிய இலக்கியக்கருவாகப் பின்பற்றப்படுவது வழக்காறாகக் காணப்படுகின்றது. The International Society for the Investigation of Ancient Civilization என்ற அமைப்பினர் செய்த ஆய்வுகளும், அவர்கள் தெரிவித்துள்ள ஆதாரங்களும் இராமாயண, மகாபாரதக்கதைகள் ஒருகாலகட்டத்தில் நிகழ்ந்தவை என்பதை நிரூபித்துள்ளன. ‘Ravana, Maricha and others spoke Tamil and also Sanskrit. They were Tamilians. Ravana was a good Tamil and an excellent Sivabakthan. He had Rakshatha powers and habits. The Era of the Ramayana period is 4400 B.C’ என மேற்கூறிய அமைப்பினர் வெளியிட்டுள்ள Ancient India என்ற நூலிலே தெளிவாகக் கூறியுள்ளார்கள். மேற்கூறிய காலப்பகுதியில் ஈழத்தில் சிவவழிபாடு நிலவியுள்ளதையும், அக்கால மக்கள் சிவ வழிபாட்டைக் கடைப்பிடித்துள்ளார்கள் என்பதையும் மேற்கூறிய கூற்றுக்கின் மூலம் அறியமுடிகின்றது.

இலங்கையில் மொத்தமதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் புகுத்தப்பட்டது. மகாவம்சக் கூற்றுக்கிணங்க, ‘பௌத்தமதம் இலங்கைக்குள் வருமுன், இயக்கர் நாகர் என்போரது’ வழிபாட்டுமுறைகளுள் லிங்கவழிபாட்டு முறையும் ஒன்று என்பதை, எஸ். பரணவிதான அவர்கள் எழுதிய Pre Buddhist Religious Believes in Ceylon என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார். பிராமிக் கல்வெட்டுக்களிற் காணப்படும் சைவம் சார்ந்த பெயர்கள், பௌத்தமத வருகைக்கு முன்னர், சைவ சமயமே ஈழமக்களின் மதமாக இருந்ததையும் எடுத்துக் காட்டுகின்றது. இயக்கரின மக்கள் கடைப்பிடித்து சிலவழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தாதுகோபங்கள் கட்டப்பட்டன. கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் யக்ஷ காலவேலன் கோயில் அமைந்திருந்த இடத்திலேயே தாதுகோபம் ஒன்று கட்டப்பட்டதென, மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்தின் முதல் தாதுகோபமாகிய தூபரான தாதுகோபம், யக்ஷமகேசன் கோயில் கொண்ட இடத்திலேயே கட்டப்பட்டதென, சி.க.சிற்றம்பலம் அவர்கள் பண்டைய ஈழத்தின் யக்ஷநாகவழிபாடு என்னும் நூலிலே குறிப்பிட்டுள்ளார். சிவாலய பல்வேறு நாமங்களுள் மகேசன் என்னும் நாமம் குறிப்பிடத்தக்கது. சிவ என்று தெடாங்கும் பெயர்களையும், சிவ என்று முடியும் பெயர்களையும் அக்கால சாசனங்களிலே காணலாம். முத்துசிவன் (கிமு 307), மகாசிவன் (கிமு 197) போன்ற அரசர்களின் பெயர்கள் அக்காலத்தில் சிவவழிபாடு ஈழமெங்கும் பரவியிருந்ததை எடுத்துக்காட்டுகின்றது. பௌத்தமதம் இலங்கைக்கு வருமுன், ஈழத்தில் சிவவழிபாடு காணப்பட்டுள்ளது. பண்டுகாபயன என்னும் அரசன் சிவன்கோயில் ஒன்றைக் கட்டினான் எனக் குறிப்புக்களிற் காணக்கிடக்கின்றது. கி.மு. 274 ஆம் ஆண்டில் வடஇந்தியாவை ஆட்சிசெய்த அசோகன், கலிங்கப்போரினால் ஏற்பட்ட விரக்தி காரணமாகப் புத்தமதத்தைத் தழுவினான். இதன்பின்பு ஈழத்திலும் புத்தமதம் பரவி, ஈழ மன்னர்களின் ஆதரவையும் பெற்றது. பௌத்தமதம் அரசர்களின் ஆதரவைப் பெற்ற காரணத்தினால், இக்காலப்பகுதியில் காணப்பட்ட சிவாலயங்கள் புத்தவிகாரைகளாக மாற்றம்பெற்றன. அபயகிரி விகாரை, இசுருமுனிய விகாரை என்பன இவ்வாறு மாற்றப்பட்ட விகாரைகளெக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்.

ஈழத்தின் வடபகுதியில், நாகர்கள் கோலோச்சிய காலப்பகுதியில் சிவவழிபாட்டோடு தொடர்புடைய நாகவழிபாடு, நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டுள்ளது. தற்காலத்தில் காங்கேசன்துறை என அழைக்கப்படும் பகுதியின் ஆதிப்பெயர் ஐம்புகோளம் என்பதாகும். இங்கு நாகரிகளின் குடியிருப்புகள் காணப்பட்டுள்ளன. நாகர்கள் புத்த மதத்தைத் தழுவியபின்பும், இப்பகுதிகளில் சிவவழிபாடு மறையவில்லை என்பதை இப்பகுதியிலுள் புராதன சிவன்கோயில்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஈழத்தின் வடபகுதியிலுள்ள புராதன சிவாலயங்களுள் கீரிமலைச் சிவன்கோயிலும் ஒன்றாகும். யாழ்ப்பாணத்திலுள்ள சிவன்கோயில்களுள் கீரிமலைச்சிவன்கோவிலே மிகவும் பழமையானது. இக்கோயில், ஈழத்தின் வடபாலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து, 12 மைல் தொலைவிலுள்ளது. இக்கோயில் ஆதியில், நகுலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் எனப் பலவாறாக அழைக்கப்பட்டுள்ளது. பூர்வீக்காலத்தில் நகுலேச பாசுபதர்களினால், இக்கோயில் அமைக்கப்பட்டதெனவும் ஐதீகமுண்டு.

யாழ்ப்பாணத்திலுள்ள தலயாத்திரைக்குப் பிரசித்தமான தலமாக, கீரிமலைச்சிவன் கோயில் விளங்குகின்றது. இராவணன், இலங்காபுரியை ஆட்சிசெய்த காலத்தில், இவ்வாலயம் மிகச் சிறப்பாக விளங்கியதாகக் கைலாசபுராணம் என்ற நூலிலே கூறப்பட்டுள்ளது. நகுலேஸ்வரம்பற்றிய ஐதீகங்களும், வரலாற்றுக் குறிப்புக்களும், யாழ்ப்பாணவைபவமாலையில் கூறப்பட்டுள்ளது. சிங்களவர்களுடைய வரலாறு விஜயன் என்பவனுடன் ஆரம்பமாவதாக மகாவம்சத்திலே கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணவைபவமாலையின் ஆசிரியரும், தனது நூலிலே, சைவசமயத்திற்கும் விஜயனுக்குமுள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டியுள்ளார். ‘விஜயன், கதிரமலையில் வசித்த நாகவரசனுடன் நட்புக்கொண்டு, இலங்கையின் பலவிடங்களிலும் அழிந்துபோன கோயில்களைப் புதுப்பித்தும், புதிய ஆலயங்களைக் கட்டுவித்தும் வந்தான். தனது அரசாட்சியை ஆரம்பிக்கு முன்னமே, விஜயராசன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலுதிக்கிலும், நாலு சிவாவயங்களை எழுப்பிக் கொண்டான்’ என்று யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு முந்திய காலப்பகுதியில், நாகரினத்தவரின் இராசதானியாக விளங்கிய கதிரமலை என்ற இடமே, தற்காலத்தில் கந்தரோடை என அழைக்கப்படுகின்றது. இப்பகுதியில் கிடைத்த சான்றுகள் மூலம் இப்பிரதேசங்களின் புராதனவழிபாட்டு முறையையும் அறியக்கூடியதாயுள்ளது. நாக அரசர்களுடன் நட்புக்கொண்ட விஜயன், வடதிசைக்குப் பாதுகாப்பாக கீரிமலைச்சாரலில் திருத்தம்பலை என்னும் பகுதியில் திருத்தம்பலேசுவரன், திருத்தம்பலேசுவரி கோயிலையும் கட்டுவித்தான். இங்கு பூசை செய்யக் காசியிலிருந்து வாமதேவாசாரியார் என்னும் பிராமணரையும் வருவித்து தங்குமிடவசதிகளையும் செய்து கொடுத்தான் என்றும் இவ்விடத்திலே காணப்பட்ட கோயிலின் பெயரைக்கொண்டு இக்கிராமம் கோயிற்கடவை எனப் பெயர்பெற்றது எனவும் இந்நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விஜயன் இலங்கைக்கு வருமுன்பே இவ்வாலயம் சிறப்புப் பெற்று விளங்கியுள்ளதை புராண வரலாறுகளும் ஐதீகங்களும் விளக்கியுள்ளன. காலத்திற்குக் காலம் பல்வேறு சூழ்நிலைகளில் ஆலயங்கள் அழிக்கப்படுவதுண்டு. அவ்வாறு அழிக்கப்பட்டிருந்த ஆலயத்தை விஜயன், மீளக் கட்டியெழுப்பியிருக்கலாமேயன்றி, புதிதாக ஆலயத்தை அமைத்தான் என்று எண்ணுவதற்கு இவ்வாலயத்தோடு தொடர்புடைய வரலாறும், ஐதீகங்களும் இடங்கொடுக்கவில்லை.

பஞ்சஈஸ்வரங்களாகக் கருதப்படுகின்ற ஆலயங்களுள் திருக்கேதீச்சரமும், திருக்கோணேஸ்வரமும் எவ்வாறு பழமையுடையனவாகக் கருதப்படுகின்றனவோ, அத்தகைய பழமையையுடையது நகுலேஸ்வரம். மகாபாரதத்திலே காணப்படும் சம்பவமொன்று இவ்வாலயத்தின் பழமையை எடுத்தியம்பி, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து யாத்திரையை மேற்கொள்வோர் தரிசிக்கும் யாத்திரைத்தலமாகவும் விளங்கியுள்ளமையைத் தெளிவுப்படுத்துகின்றது.

கி.மு. 1500 வருடங்களுக்கு முன் வட இந்தியாவிலிருந்து அரசாண்ட பஞ்சபாண்டவர்களுள் ஒருவனாகிய அருச்சுனன், தீர்த்தயாத்திரையை மேற்கொண்டு, புண்ணிய தீர்த்தஷேத்திரமான நகுலமலையைக்கொண்ட மணிபுரத்திற்கு (யாழ்ப்பாணம்) வந்தான் என்ற மகாபாரதக் குறிப்பிலிருந்து நகுலேஸ்வரம் என்ற தலத்தின் தொன்மையை அறிய முடிகின்றது. ஆதியில், கீரிமலையின் பெயர் திருத்தம்பலை. இங்குள்ள ஆலயம் திருத்தம்பலேசுவரன் என்றும் தேவியின் திருநாமம் திருத்தம்பலேசுவரி அம்மன் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அம்மன் பெயரால் அமைக்கப்பட்ட ஆலயம், திருத்தம்பலேசுவரி அம்மன் ஆலயம் என்று அழைக்கப்பட்டது.

இக்கோயிலின் ஆரம்பநிலையினையும், தலச்சிறப்பினையும் விளக்கப் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. நகுலேஸ்வரத்தின் தலபுராண வரலாற்றை, யாழ்ப்பாணவைபவமாலை என்ற நூலின் மூலம் அறியமுடிகின்றது. ‘நகுலமுனி என்பவர் சாபத்தின் காரணமாகக் கோயிற்கடவை (கீரிமலை) மலைச்சாரலிலே தங்கி, அங்குள்ள புனிததீர்த்தத்தில் நீராடித் தன் முகத்திலிருந்த குறை நிங்கப்பெற்றார். இதன் மூலம் அவ்விடத்தின் பெருமையையும், அங்குள்ள தீர்த்தத்தின் விசேட மகிமையையும் அறிந்த முனிவர் அவ்விடத்திலேயே தவம் செய்து, வழிபாடியற்றி வந்தார். அம்முனிவருக்கிருந்த கீரிமுகம் மாறியதால், முனிவதங்கியிருந்த மலை, கீரிமலையெனப் பெயர் பெற்றதென்பர் இச்சம்பவத்தின் பின், திருத்தம்பலேசுவரர் கோயிலை நகுலேசர்கோயில் என்றும், திருத்தம்பலேசுவரி அமமன் கோயிலை, நகுலாம்பிகை அம்மன் கோயில் என்றும் வழங்கப்பட்டது’ என யாழ்ப்பாண வைபவமாலையிலே கூறப்பட்டுள்ளது. நகுலம் என்றால் கீரி எனப் பொருள்படும் சமஸ்கிருதச் சொல்லாகும். நகுலமுனிவர் வழிபாடு செய்ய காரணத்தினால், இத்தலம் கீரிமலை என்றும், நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றது. நாகுலம் என்னும் இதன் பழையநாமம். நகுலமென மருவிப் பின் கீரிமலையாக வழங்கப்பட்டு வருகின்றது. என எண்ண இடமுண்டு. ‘நாகுலம் நாம சம்சுத்தம் அஸ்தி ஸதானம் மகிதலே’ என்று சூதசம்கிரைதயிலே காணப்பட்ட கூற்ற மேற்கூறப்பட்ட கருத்தை வலியுறுத்துகின்றது.

கீரிமலைத்தலத்தின் சிறப்பை எடுத்துக்காட்டும் பல சம்பவங்கள், மாருதப்புரவல்லி பற்றிய கதையிலும் காணப்படுகின்றது. சோழ தேசாதிபதியான திசையுக்கிரசோழன் மகள் மாருதப்புரவல்லி. சில நூல்களில் திசையுக்கிரசோழனைத் தேசாதிபதியென்றும், சிலவிடங்களில் சோழஅரசனென்றும் மாறுபட்ட குறிப்புகள் காணப்படுகின்றன. ஒருநாள் மாருதப்புரவல்லி செத்த பாம்பொன்றை முனிவரொருவருடைய கழுத்தில் மாலையாகப் போட்டுச் சிரித்த காரணத்தால், அம்முனிவரின் சாபத்திற்குள்ளானாள். இதனால் குன்மநோய் ஏற்பட்டுக் குதிரைமுகம் பெற்றவளாகிக் காணப்பட்டாள். இவள் குன்மவியாதியால் வருந்தி, உடல் மெலிந்து, வைத்தியம் எதுவும் பலனளிக்காது வருந்தினாள். தீர்த்தயாத்திரை செய்தால் வியாதியிலிருந்து மீளலாம் என்ற எண்ணம் மாருதப்புரவல்லிக்கு ஏற்பட்டது. இவள், பல தலங்களிலும் தீர்த்தமாடிவருகையில்ஈ சாந்தலிங்கர் என்னும் ஒரு சந்நியாசி கண்டு, ‘மருந்துகள் எதுவும் பயன்தராது. தீர்த்த யாத்திரயின் மூலமே சுகமடைவாய். இலங்கையின் வடமுனையிலே கீரிமலை என்றொரு மலையுண்டு. அது சமுத்திர தீரத்திலுள்ளது. அங்கே உவர்ச்சல் மத்தியில் சுத்த தீர்த்தமும், மலையருவித் தீர்த்திழுங்கலந்த உத்தமதீர்த்தம் ஒன்றுண்டு. அப்புனிததீர்த்தத்தில் நீராடினால் சுகம் பெறுவாய்’ என்று கூறினார். இவர்க வாக்கை அருள்வாக்காகக் கொண்டு, மாருதப்புரவல்லி புறப்பட்டு வந்து, கீரிமலைச் சாரலில், குமாரததிபள்ளமென்றும் இடத்தில் தவம்செய்து கொண்டிருந்த நகுலமுனிவரைக் கண்டு வணங்கினாள். அம்முனிவரும் நகுலேஸ்வரத்தின் தலமகிமை, தீர்த்த விசேடம் ஆகியவற்றை எடுத்துக்கூறி, தனி கீரிமுகம் மாறிய அற்புதத்தையும் எடுத்துரைத்தார். இதனால் மகிழ்வுற்ற மாருதப்புரவல்லி, அவ்விடத்திலேயே தங்கிக் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனமும் செய்து வந்தாள். சிவகாலத்தில் அவளது குன்மநோய் நீங்கி, குதிரை முகமும் மாறி அழகிய பெண்ணாக விளங்கினாள். மாருதப்புரவல்லி தான் தங்கியிருந்த பாளையத்துக்கு அண்மையில், கந்தவேளுக்கு ஓர் ஆலயத்தை அமைத்தாள் என்றும், அவ்வாலயமே மாவிட்டபுரம் என அழைக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண இராச்சியம் என்ற வட இலங்கை இராச்சியத்தின் பண்டைப்பெயர்களாக, சிங்கைநாடு, சிங்கைநகர், வடஇலங்கை, நாகநாடு, மணவை, மணற்றி, ஈழம், உத்தரதேசம், தமிழ்ப்பட்டினம், நாகதீபம், நாகதீவு என்பன வழக்கிலிருந்தன. பின்னர் நாகதீவு என்ற பெயர் யாழ்ப்பாணக்குடா நாட்டிற்குரிய பெயராக மாறியது. அக்காலத்தில் கதிரமலை (கந்தரோடை) யைத் தலைநகராகக்கொண்டு உத்தரதேசத்தை (வடபகுதி) ஆட்சி செய்தவன் உக்கிரசிங்கன். இவன் கலிங்கதேசத்திலிருந்து குடியேறியவன் என்றும், விஜயனுடைய பரம்பரையைச் சேர்ந்தவமென்றும் வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது. அநுராதபுரத்தை (கி.பி. 777-797) மகிந்தனுக்கு எதிராக உத்தரதேசத்து (வடஇலங்கை) முதலிகள் கிளாச்சி செய்தனர். சிங்கள ஆட்சியாளனான மகிந்தனுக்கெதிரான கிளர்ச்சிக்கு உக்கிரசிங்கனே தலைமைவகித்தான். இக்கிளர்ச்சியில் வெற்றிகண்டு, வடஇலங்கை மன்னனாகி ஆட்சி செய்தான். கலிங்க தேசத்தவனான உக்கிரசிங்கன், மணற்றியில் குடியேறியிருந்தவன் என்று சில குறிப்புகளிலும், இவன் இலங்கையின் ஏதாவதொரு பிரதேசத்தின் சிற்றாசனாயிருக்கலாமென்று வேறு சில குறிப்புகளிலும் குறிப்பிட்டுள்ளார்கள். எப்படியிருப்பினும், நெடுங்காலம் இழந்திருந்த உரிமையை மீட்டு, நாகதீபத்தை (வடபகுதி) மீண்டும் சிங்கள ஆட்சியாளரிடமிருந்து வெற்றிகொண்டவன் உக்கிரசிங்கன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 785 ஆம் ஆண்டாகும். யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மன்னனாக இவனைக் கருதுவர்.

உக்கிரசிங்கன், கதிரமலையிலிருந்து நகுலேஸ்வரம் வரும்வேளைகளில், கீரிமலைச்சாரலில் பாளையம் அமைத்துத் தங்குவதுண்டு. இவ்வாறு தங்கிய இடம் வளவர்கோன்பள்ளம் என அழைக்கப்பட்டது. இவ்வாறு நகுலேஸ்வரம் வந்தவேளையில் சோழஇளவரசியாகிய மாருதப்புரவல்லிமீது காதல் கொண்டு, மணம்புரிந்தான். இவன் தீவிர சைவனாக விளங்கியுள்ளான் என்பதை இவன் செய்த சைவத்திருப்பணிகள் நிரூபிக்கின்றன. கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் இவனால் புனருத்தாரணச் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றிய கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, மிகச் சிறப்புப் பெற்ற காலப்பகுதியாகும். சுதந்திர தமிழ் இராச்சியம் நிலைகொண்ட காலமாக வரலாற்றாசிரியர்கள் இக்காலப்பகுதியைச் சிறப்பித்துக் கூறுவர். ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற சிறப்புப்பெயர் பெற்ற தமிழ்மன்னர்களின் ஆட்சிக்கால ஆரம்பமாக இக்காலப்பகுதி விளங்குகின்றது. யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்திகள் சைவசமயிகளாக இருந்த காரணத்தினால், இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்த பல தலங்களையும் பேணிப்பாதுகாத்துள்ளனர். நகுலேஸ்வரம் இம்மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், சிறப்புப்பெற்றுக் காணப்பட்டது. நல்லூரில் இராசதானியமைத்த சிங்கையாரியன், கீரிமலையோடு தொடர்புகொண்டிருந்தான் என்பதை மயில்வாகனப் புலவர், ‘சிங்கையாரிய மகாராசனும், புவனேகவாகு மந்திரியும் கீரிமலைக்குப் போய்த் தீர்த்தமாடி, சிவாலய தரிசனஞ் செய்துகொண்டு, அவ்வாலய விசாரணையை அரசாட்சி விசாரணைக்குள்ளாக்கி, கந்தசுவாமிகோயில் வந்து சிதம்பர தீட்சிதரின் மகன் சின்னமனத்துளார் விருந்திட உண்டு இனைப்பாறினார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் என்ற பெயர்க்காரணம் ஏற்பட்ட மூலவரலாற்றோடும் நகுலேஸ்வரம் தொடர்புபட்டுள்ளது. இக்கதை கீரிமலையின் தலச்சிறப்பினை விளக்குவதாகக் காணப்படுகின்றது. இராவணனின் யாழோசையினால் கவரப்பட்ட சுசங்கீதன் என்னும் கந்தருவன், இராவணனின் யாழினைக் கவரத் தருணம் பார்த்திருந்தான். இராவணனை இராமபாணம் தாக்கியபோது, அவன் கையிலிருந்த யாழ் நழுவிவிழ, அதனைச் சுசங்கீதன் கைப்பற்றிக்கொண்டான். அதன் பின்னர், சுசங்கீதன் நகுலேஸ்வரம் சென்று அங்கெழுந்தருளியுள்ள நகுலேஸ்வரப்பெருமாளைத் தொழுது யாழ்மீட்டினான். இவனது யாழிசையில் மகிழ்ந்த ஈஸ்வரன், சுசங்கீதனுக்குக் காட்சிகொடுத்து, ‘காடுகொன்று நாடாக்கி நகரமைத்து அதனை வீணாபணம் என்னும் பெயரோடு ஆட்சி புரிவாய்’ என்று அருள்செய்தார். யாழ்ப்பாணம் என்ற பெயர்க் காரணத்தினை விளக்கும் யாழ்பாடிக்கதையின், ஆரம்ப வடிவமாக இக்கதையினைக் கருதலாம். இதனைக் கைலாசபுராணம்.

பண்ணுதலுஞ் சிவபிரான் மகிழ்ந்து வெளிப்பட்டு
கசங்கீதனைப் பார்த்
துண்ணெகிழ்ந்து நீ வீணாகரனாய்
நின்றிசைத்தமையா லோங்கு மிங்ஙன்
முண்ணவர்கள் புகழ் வீணா பணமெனும்
பெயராக மாற்றிப் பாங்க
ரெண்ணில் பதலமுளவிக் காட்டை வெட்டி
நகராக் கொன்றியம்பிப் போனான்.

போனவரன் மொழிப்படியச் சுசங்கீதன்
காட்டை வெட்டிப் புரமதாக்கித்
தானழிந்த வாலயங்க டனையுமெழில் பெறப்
புதுக்கிச் சனங் கடம்மை
யானகுடியாயிருத்தி நகுலேசரடி
பரவியருள் பெற்றேகி
மானிலமெலாம் புகழத் தனதுலயந்தனி
லடைந்து வாழ்ந்தானன்றே

என்று மேற்கூறிய சம்பவத்தினை அழகுற விளக்கியுள்ளது. யாழ்ப்பாணம் (வீணாபணம்) என்னும் பெயரை அந்நிலப்பரப்பப் பெறுவதற்குக் கீரிமலையில் எழுந்தருளியுள்ள இறைவளே அருள்வாக்குக் கொடுத்தான் என்னும் கருத்து மேற்கூறிய பாடலில் கூறப்பட்டுள்ளது. காலத்திற்குக் காலம் யாழ்ப்பாணத்தை, அன்னியரும், அயல்நாட்டவரும், ஆட்சியாளரும் அழிக்க எடுத்த முயற்சிகளினின்றும், தப்பிப்பிழைத்து, மீண்டும் மீண்டும் உயிர்ப்புப் பெறுவதற்கு, இவ்வாறான அருள்வாக்குகளும் காரணமாயிருக்கலாம்.

கலியுகம் 3000 என்பது கி.மு. 101 ஆம் ஆண்டுக்குச் சமமானது. அப்பொழுதே இலங்கையின் வடபாகத்திலிருந்த மணற்திடல்பகுதிக்கு யாழ்ப்பாணம் என்ற பெயர் காணப்பட்டதென வையாபாடலில் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச்சரித்திர ஆசிரியர் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள், கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, ஏலேலசிங்க மன்னனால், அந்தகனான யாழ்பாடி ஒருவனுக்குக் கொடையாக, வடபகுதியிலிருந்த மணற்றிடல் வழங்கப்பட்டதென்பர். கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் உக்கிரசிங்கன், மாருதப்புரவல்லி ஆகியோரின் மகனான வாலசிங்கன் என்பவனால், யாழ்பாடி ஒருவனுக்குப் பரிசாக வழங்கப்பட்டமையால், யாழ்ப்பாணம் எனப் பெயர்பெற்றதென, கைலாயமாலை என்னும் நூலிலே கூறப்பட்டுள்ளது. இந்நூல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இதே செய்தியைச் சில மாற்றங்களுடன், கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையும் குறிப்பிட்டுள்ளது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், எல்லாளன் என்னும் தமிழ் மன்னன், அநுராதபுரப் பகுதியிலிருந்து ஆட்சி செய்துள்ளான். சங்கப்புலவர்களுள் ஒருவராக விளங்கிய ஈழத்துப் பூதந்தேவனார் வரலாறு, அக்காலப்பகுதியில் ஈழத்தின் வடநிலப்பரப்பில் தமிழர் சமுதாயம் வளர்ச்சியடைந்தமையைக் காட்டுகின்றது. யாழ்ப்பாணம் பெயர்க்காரணத்தை ஆராய்வோர் யாவருடைய குறிப்பிலும் யாழ்பாடியே கருவாகக் காணப்படுகின்றது.

ஆதியில் நகுலேஸ்வரத்தில் மூன்று பிரகாரங்களும், ஐந்து கோபுரங்களும் இருந்ததாக ஐதீகமுண்டு. கி.பி. 1505 ஆம் ஆண்டு இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்த போத்துக்கேயரால், கி.பி 1621 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணநகரைக் கைப்பற்ற முடியாதவாறு, யாழ்ப்பாணத் தமிழரசர்கள் ஆட்சிசெய்தனர். பின்னர் கூலிப்படைகளின் உதவியோடு, யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டபோது, யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக்கோயில்கள் யாவும் தரைமட்டமாக்கப்பட்டன. இவ்வாறு தரைமட்டமாக்கப்பட்ட கோயில்களுள் இதிகாச, புராண வரலாற்றுப் பிரசித்திபெற்ற நகுலேஸ்வரமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. போத்துக்கேயரால் இவ்வாலயம் இடிக்கப்படுமுன்னர், பரசுபாணி ஐயரென்னும் பிராமணர், ஆலயத்திலுள்ள முக்கியமான பொருட்களையும், விக்கிரகங்களையும் கிணற்றிலே போட்டு மூடிவைத்தார். இவ்விக்கிரகங்களெதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. போத்துக்கேயர் ஆட்சியில், கோயில்கள் அழிக்கப்பட்டபோது. இவ்வாறாகப் பாதுகாக்கப்பட்ட வேறு சில விக்கிரகங்களும் தொல்பொருட்களும் பின்னர் மீட்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட தலங்கள் பலவும், ஆங்கிலேயராட்சியில் மீளக் கட்டப்பட்டு, புனருத்தாரணம் செய்யப்பட்டன. இவ்வாறான புனருத்தாரணப்பணிகளின் அக்காலத்தில் முன்னின்று உழைத்தவர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள். இவரது தீர்க்கதரிசனத்தாலேயே. திருக்கேதீச்சரம் ஆலயம் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் பழைய இடத்திலேயெ திருக்கேதீச்சரம் ஆலயம் அமைக்கப்பட்டது. கீரிமலைச்சிவன் கோயிலை மீண்டும் அவ்விடத்தில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மனதில் தோன்றியுள்ளது. இவ்வெண்ணத்தின் வெளிப்பாடாக, கி.பி. 1878-ஆம் ஆண்டு வெகுதானிய வருடம் வைகாசி மாதம் 24 ஆந் திகதி, கீரிமலைச்சிவன் கோயில்பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையிலே ‘யாழ்ப்பாணத்தில் கீரிமலையில் ஓர் சிவாலயம் முற்காலத்திலிருந்து, பின்னர் அழிந்துவிட்டது. அதே இடத்தில் மீளவும் சிவாலயம் எழுப்பப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டு, இதிதாச, புராண, ஆலய ஆதிவரலாறுகளை மனதிற் கொண்டு, கீரிமலைச்சிவன் கோயில் என்ற பெயரைக்கொடுத்து, ஒரு பத்திரிகையை எழுதித் தமது கையெழுத்தோடு வெளிப்படுத்தினார். ஆரம்பித்தில் ஆலயம் இருந்ததாகக் கருதப்பட்ட இடத்தையும் குறிப்பிட்டு, இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு பிராமண குருமாரையும் ஊக்குவித்தார்.

தற்காலத்தில் காணப்படும் கீரிமலைச்சிவன்கோயில் உள்ள இடம், நாவலரால் குறிக்கப்பட்ட இடமாகும். இக்குறிப்புகளை ஆறுமுகநாவலர் சரித்திரம் என்ற நூலில் த.கைலாசபிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கா.தியாகராஜக்குருக்கள் என்பவரும் நாவலர்பெருமான் கீரிமலைச்சிவன் கோயிலைப் புனருத்தாரணம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளை விரிவாக வெளியிட்டுள்ளார். இக்குறிப்புகளடங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருடைய அறிக்கை கி.பி. 1882 ஆம் ஆண்டு சித்திரபானுவருஷம் ஐப்பசி மாதம், அச்சிட்டு வெளியிடப்பட்டது. ஆறுமுக நாவலரைப்பற்றிய வேறு நூல்களிலுள்ள குறிப்புகளும், கீரிமலைச் சிவன் கோயிலை மீள அமைப்பதற்காக, இவர் செய்த பணிகளைக் குறிப்பிட்டுள்ளன. அன்னியராட்சியில் என்ன செய்வதென்று அறியாது வாழ்ந்த, சைவர்களைத் தட்டியெழுப்பி, சைவ உணர்வையூட்டி, மீண்டும் சைவக்கோயில்கள் பழைய நிலையை அடையவும், மக்கள் அவற்றைப் பாதுகாப்பதற்குமுரிய முறையில், மக்கள் எண்ணத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள்.

இவ்வாறான முயற்சியின் பயனாக, கி.பி. 1895 ஆம் ஆண்டு, மன்மத வருஷம் ஆனிமாதம், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நகுலேஸ்வரத்தில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின்னர், 1918 ஆம் ஆண்டு கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது. 1953 ஆம் ஆண்டில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், இந்தியாவைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். 1955 ஆம் ஆண்டு, ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் 1973 ஆம் ஆண்டிலும், மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இங்குள்ள அம்மன்கோயிலில், 1976 ஆம் ஆண்டு தொடக்கம், வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் மும்முரமடைந்து, அண்மைக் காலம்வரை தொடர்வது யாவருமறிந்ததே. இக்காலப்பகுதியில் அன்னியரைப்போன்றே, இலங்கையின் ஆட்சியாரும், இந்துக்கோயில்களை விட்டுவைக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவ விமானங்களின் குண்டுவீச்சுக்கும் ஏவுகணைத்தாக்குதலுக்கும் உள்ளாகிய, கீரிமலைச்சிவன்கோயில் பாரதுரமாகப் பாதிக்கப்பட்டது. கோயிலின் பூசைவழிபாடுகள் தடைப்பட்டன. ஆலயச்சூழல் பற்றைக் காடாக மாறியது.

புராதனப் பெருமை வாய்ந்த இத் திருத்தலத்தின் ஆலயத்தோற்றம் மிகவும் அற்புதமானது. கர்பக்கிருகம் அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிருத்தமண்டபம், பரிவார தேவர் கோயில்கள், கோபுரவாயில், கோயில்பிரகாரம் என்னும் அமைப்புக்களுடன் இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயில் சிவாகமவிதிகளுக்கும், சிற்பசாத்திர முறைகளுக்கும் அமையவே உருவாக்கப் பட்டிருந்தது. கோயிலின் அடித்தளபீடம் வெள்ளைக் கல்லினாலான வேலைப்பாடுகளோடு காணப்பட்டது. இங்கு காணப்பட்ட அலங்கார வேலைபை;பாடுகளைக் கொண்ட துண்களும், வெள்ளைக் கல்லினாலேயே அமைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தின் தென்குமாடத்தில் தட்சிணமூர்த்தியும், மேற்கு மாடத்தில் இலிங்கோற்பவரும் எழுந்தருளியுள்ளனர்.

ஆலயங்கள் கலைகளின் பிறப்பிடமாகக் காணப்பட்ட தென்பதற்குக் கீரிமலைச்சிவன் கோயில் தக்க உதாரணமாகும். இவ்வாலயத்தின் சுவர்களிலே எழில்மிகு ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. புராணக்கதைகளின் வெளிப்பாடுகளைத் தத்ரூபமாக இந்த ஓவியங்கள் சித்திரித்தன. நிருத்தமண்டபத்தின் முகப்புச்சுவரிலே, பார்வதி பரமேசுவரனின் திருக்கலியாண ஓவியம அனைவரையும் ஈர்த்த ஓவியமாகும். நான்முகன் திருமணச் சடங்கினைச் செய்ய, திருமால் தாரை வார்த்துக்கொடுக்கும் காட்சியில் நுண்மை சிறப்பானது. இவற்றோடு முழுடுதற்கடவுளாகிய சிவனோடு தொடர்புடைய புராணக் காட்சிகளின் கைவண்ணம் சொல்லுந்தரமன்று. தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடையும்போது, ஆலகாலவிஷம் பரவியமை, திருநீலகண்டனாகிய சிவன் அதனைப் பருகி, அனைவரையும் காத்தமை, பகீரதன் தவம் புரிந்ததன் பயனாகக் கங்கை நதியானது ஆகாயத்திலிருந்து உற்பத்தியாகி, நிலவுலகிலே பாய்ந்தமை போன்றவை, சிறப்பான ஓவியங்களாகக் காணப்பட்டன. இவற்றைப் பார்வையிடுவதற்கென்றே நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் மக்கள் இங்கு வருகைதருவர்.

பிரகாரத்தின் உள்ளே, பரிவாரதேவர்களின் ஆலயங்கள் உள்ளன. பிள்ளையார், சண்முகர், சோமாஸ்கந்தரி மகாவிஷ்ணு, மகாலக்சுமி, பஞ்சலிங்க வடிவிலான பரமேஸ்வரர் ஆகியோருக்குரிய ஆலயங்கள், மேற்குப்புறத்தில் காணப்பட்டன. கிழக்கிலே வைரவர் சந்நிதானமும், நவக்கிரக நிலையமும் அமைந்திருந்தது. திருவுலா நடைபெறுவதற்கேற்ற முறையில் பஞ்சலோகவார்ப்பு விக்கிரகங்கள் காணப்பட்டன. நிருத்தமண்டபத்தின் வடக்கே, நடராஜரின் உருவத்தைத் தெற்கு நோக்கியவண்ணம் அமைத்திருந்தனர். இரண்டாம் பிரகாரத்தின் வடக்கே, துர்க்கை அம்மனின் கோயில் அமைந்திருந்தது. இந்து ஆலயங்களில், ஏனைய ஆலயங்களை விடச் சிவாலயத்தினை நடத்துவதற்குப் பெரும்பொருள் தேவை என்பதை மேலே கூறப்பட்ட கோயில் அமைப்பு விளக்கியுள்ளது.

கீரிமலையிலே காணப்படும் தீர்த்தம் மிகவும் புனிதமானது. நகுலமுனி, மாருதப்புரவல்லி போன்றோருடைய நோய்களை நீக்கிய பெருமைகொண்டது. ஈழத்தின் பல பாகத்திலிருந்து மட்டுமன்றி, இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் யாத்திரை மேற்கொள்ள, இத்தீரத்தத்தின் பெருமையே காரணமாயிருந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான நிலப்பரப்பு, முருகைக் கற்பாரின் மேலேயே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் வடகடற்கரையில், நிலத்தினின்றும் கடலுட்பாயும் பல அருவிகள் காணப்படுகின்றன. இவ்வருவிகளுள் முக்கியமானது கீரிமலையிலுள்ளது. இவ்வருவி, புராதன காலந்தொட்டே மிகப் பரிசுத்தமானதாகப் போற்றப்பட்டு வருகின்றது.

கீரிமலையின் புனித தீர்த்தத்தைப்பற்றிப் புராண இதிகாசங்களிலும் தற்காலத்தவர் குறிப்புகளிலும் காணலாம். திருவாளர் எஸ். ஆறுமுகம் என்பர் தமது Ancient Hindu Temples of Srilanka என்ற நூலில், இத்தீர்த்தத்தைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது, ‘…the spring water flow at Keerimalai is of great value and bathing in its waters imparts therapeutic medicinal benefit to the humam body. From its source in the rocks of Telipallai – Maviddapuram (30 feet elevation) area, the spring waters flowing through the crevices and fissures of the carbonated rocks> encountering sea water as emerges at Keerimalai, acquire chemical values and minute electrolytic charges, which tonic the funtioning of the human system’ என்று குறிப்பிட்டுள்ளமை கீரிமலையிலுள்ள புனித தீர்த்தத்தின் பெருமையை எடுத்தியம்புவதாகக் காணப்படுகின்றது.

இவ்வாலயத்திலே நடைபெறும் நித்திய நைமித்திய வழிபாடுகள், சிவாகம முறைப்படி நடைபெறுவது வழக்கம.; ஆனால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பூசை வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டது. கீரிமலைச் சிவன்கோயிலில் திருப்பிள்ளி எழுச்சி முதலாக அர்த்தசாமப்பூசை ஈறாக நாள்தோறும் ஆறுகாலப்பூசை, மிகச் சிறப்பாக நடைபெற்ற வந்துள்ளது. இவ்வாலயத்தின் மூலமூர்த்திக்குத் திருமணமான சிவாச்சாரியார்களே பூசைசெய்யும் மரபும் இக்கோவிலில் உண்டு.

இங்கு மாதந்தோறும் நடைபெறும் சோமவார விழாக்கள் திருவிழாக்களாகவே நடைபெறுவதுண்டு. சுக்கிரவாரவிரதம், புரட்டாதிச்சனி, மாதப்பிறப்பு, வருஷப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், மானம்பூ, ஆவணி உத்தரம், கார்த்திகை விளக்கீடு, திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாசம் ஏகாதசி போன்ற இன்னுமு; பல்வேறு விரதங்களும் விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறுவதுண்டு. கீரிமலைச் சிவன்கோயிலின் வருடாந்த உற்சவம் மாசி மாதத்தில் நிகழும். சிவராத்திரி அமாவாசையன்று தீர்த்தோற்சவம் நிகழும். அம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் கொடியேற்றத்திருவிழா நடைபெறும். சித்திரை வருஷப்பிறப்பன்று தேர்த்திருவிழா நடைபெறும். இங்கு அடியார்கள் தங்கியிரந்து, விரதம் நோற்பதற்கு ஏற்றவகையில் பல மடங்களும் காணப்பட்டன.

வழிபாட்டிலே சிவவழிபாடு சிறப்புப்பெற்ற வழிபாடாகக் காணப்படுகின்றது. சிவம் என்பதற்கு மங்கலம், சுபம், நன்மை, பேரானந்தம், உண்மை, மேன்மை எனப் பல பொருள்கள் காணப்படுகின்றன.

‘சைவம் சிவத்துடன் சம்பந்தமாகுதல்
சைவந் தன்னையறிந்தே சிவஞ் சாருதல்’

எனத் திருமந்திரத்திலே கூறப்பட்டுள்ளது. சைவக்கோயில் கிரியைகள் அனைத்தும் திருவுருவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆலயங்கள் அருளுடையவையாகக் காணப்படுவதற்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள திருவுருவங்களே காரணமாகவுள்ளன. திருவுருவங்களின் அமைப்போடு தொடர்புடைய வரலாறுகள் இதிகாச புராணங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

உருவவழிபாட்டில், சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சிவவழிபாடு சிறப்பானது. சிவனின் திருமுகங்கள் ஐந்து. அவை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் எனப்படும். இந்த ஐந்து முகங்களும் ஐந்தொழில்களோடு தொடர்புடையவை. எனினும் கோயில்களில் நாம் காணும் திருவுருவம், ஒரு முகம் மட்டுமே கொண்டதாக விளங்குகின்றது. சிவனின் சடை தனிச்சிறப்புடையது. சடை விரித்தாடும் நிலையிலேயே, மக்கள் வழிபடுவதற்காகச் சிற்பிகள் சிவனை உருவாக்கியுள்ளார்கள். சடை மேல் நோக்கியதாகக் கட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இதனால் சிவனுக்கு, சடாடசரன், சடாமௌலி என்ற திருநாமங்களும் காணப்படுகின்றன. சிவனுக்குச் சிறப்பாயுள்ளது நெற்றிக்கண். இராசதம், தாமசம், சாத்துவீகம் என்னும் மூன்று குணங்களே முக்கண்கள் எனப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனின் திருக்கோலங்கள் அறுபத்திநான்கு. இசை தனித்தனியே, இறைவன் நிகழ்த்திய பெருஞ்செயல்களைக் குறிப்பன.

தென்னிந்திய, இலங்கைக் கோயில்களில் சிவனின் தோற்றம் நான்கு கரங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. சிவனின் கழுத்து நீலநிறமுடையது. அதனால் நீலகண்டன் என அழைப்பர். சிவனின் திருவுருவம் எட்டு அம்சங்களைக் கொண்டது. அவை நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும், சூரியசந்திராகிய இருகோள்களுடன், வேட்கும் இயல்பினனான இயமானனும் ஆகியவையே எட்டு அம்சங்களெனப் புராணங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சிவனை அட்டமூர்த்தி என்றும் அழைப்பர்.

சிவனின் உடலில் பாதி பெண் வடிவானது. இதனால் மாதொரு பாகன், அர்த்தநாரீஸ்வரன் என்ற பெயர்கள் சிவனைக் குறிப்பதாகக் காணப்டுகின்றது. சிவனும் விஷ்ணுவும் கலந்த வடிவம் ஹரஉறாவடிவம். சிவனின் புறத்தோற்றம், தலைசிறந்த யோகியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதனால் யோகீஸ்வான என்ற பெயர் ஏற்பட்டது. சிவனது கோலம் கல்லாவின் கீழமர்ந்து முனிவர்கட்கு அறிவுரை புகட்டும் நிலையில் காணப்படுகின்றது. தென்முகமாக வீற்றிருக்கும் இந்நிலையைத் தட்சிணாமூர்த்தி என அழைப்பர். சிவன் புலித்தோலை ஆடையாகவும். சுடலைப்பெடி பூசிய பெம்மானாகவும் விளங்குகின்றார். சுடுகாட்டைக் கோயிலாகக் கொண்ட சிவனை, ‘கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை’ என்று திருச்சாழலியே திருவாதவூரடிகள் குறிப்பிட்டுள்ளார். கீரிமலைச் சிவன் கோயினுக்கு அயலில், கடற்கரையோரத்தில், செம்பொன் வாய்க்கால் எனப்படும். சுடுகாடு காணப்படுவதாகவும், அங்கு சேரும் சாம்பலை கடல்நீர் உள்வாங்கிக்கொள்வதாகவும் ஐதீகமுண்டு.

யாழ்ப்பாணத்திலுள்ள பல கோயில்களில், புராணபடனம் நடைபெறுவது தொன்றுதொட்டுக் காணப்படும் மரபாகக் காணப்படுகின்றது. இம்மரபினைப் பின்பற்றும் கோயில்களுள் கீரிமலைச் சிவன்கோயிலும் சிறப்பிடம் பெறுகின்றது. திருவிளையாடற் புராணம், பெரியபுராணம், கந்தபுராணம், நகுலாயபுராணம், ஏகாதசிப்புராணம் என்பன இங்கு படிக்கப்படும். சிவன்கோயில் கொடித்தம்பத்திற்கு முன் பார்க்க பெரியபுராணபடனமும், நகுலாய புராணபடனமும் நடைபெறும். முருகன் சந்திதானத்தில் கந்தபுராணபடனமும், விஷ்ணு ஆலயத்தின் முன்பாக ஏகாதசிப் புராணபடனமும் நடைபெறும் வழக்கமுண்டு. மார்கழிமாத ஏகாதசியில், ஏகாதசி புராணபடனனும், மார்கழித் திருவெம்பாவை காலத்தில், திருவாதவூரடிகள் புராணமும் படிக்கப்பட்டு, பொருள் சொல்லும் வழக்கமும், இங்கு நடைமுறையிலிருந்துள்ளது. சிவாச்சாரியார்கள் புராணபடனத்தைத் தொடக்கி வைப்பது இக்கோயிலுக்குரிய வழக்கமாகும்.

இக்கோயிலுடைய வரலாறு, ஐதீகங்களை அடிப்படையாகக் கொண்டு, கீரிமலைச் சிவன்கோயில்மீது பலவகையான பிரபந்தங்கள் பாடப்பட்டன. இரவ இலக்கியப் பண்புகளக் கொண்டனவாகக் காணப்படாது, தமது வித்துவத்தைக் காட்ட எழுதப்பட்டமையால், மக்கள் இலக்கியமாகத் துலங்கவில்லை. நகுலாசலபுராணம், நகுலேஸ்வர மான்மியம், நகுலமலைக்குறவஞ்சி, நகுலேசர் ஊஞ்சல், நகுலேசர் சதகம், நகுலேசுவரர் விநோத விசித்திர கவிப்பூங்கொத்து ஆகியவை இக்கோவிலின் சிறப்பை எடுத்தியம்புகின்றன.

உடற்பிணி, உளப்பிணி இரண்டையும் ஒருங்கே அழிக்கவல்ல கீரிமலைச் சிவன்கோயில், அன்று அன்னியரால் அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் இன்றோ நிலைமை வேறாகக் காணப்படுகின்றது. 1983 இல் ஆரம்பித்து, 1990 ஆம் ஆண்டளவில், இன அழிப்புப் போர் வடபகுதியில் உக்கிரம் அடைந்தது. தமிழரின் பாரம்பரியங்களையும், சலாச்சாரச் சின்னங்களையும், அழிப்பதன் மூலம் ஓர் இனத்தையே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை ஆட்சியாளரின் இராணுவவிமானக் குண்டுவீச்சும், ஏவுகணைத்தாக்குதல்களும், கீரிமலைச்சிவன் கோயிலையும் அதன் தொன்மைமிக்க பிரதேசங்களையும், சின்னாமின்னப்படுத்தியுள்ளன. மக்கள் தரிசிக்கச் செல்லமுடியாத பற்றைக்காடாக மாறிய இப்பிரதேசம், சிறிது சிறிதாகத் திருத்தம் செய்யப்பட்டு, 1998 ஆம் ஆண்டு சிவராத்திரி பூசை நடைபெற்றது. ஆலயத்தைப் புனர்நிர்மாணம் செய்வதில், இவ்வாலயத்தின் பிரதம சிவாச்சாரியாரான, பிரம்மஸ்ரீ நகுலேஸ்வரக்குருக்களின் பணி அளவிலடங்காதது. முதுமையிலும், மனந்தளராது புலம்பெயர்ந்த நாடுகளெங்கும் சென்று, சைவமக்களின் ஆதரவைப்பெற்று, மீண்டும் கீரிமலைச் சிவன்கோயிலின் தொன்மையை நிலைநாட்ட அரும்பாடுமட்டு வருகின்றார்.

‘மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் வணங்கினோர்க்கு வார்த்தை சொலக் சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்று தாயுமான சுவாமிகள் உரைத்துள்ளார். அவரின் வாக்கிற்கிணங்க நகுலேஸ்வரத்தின் சிறப்பைப் போற்றுதல் வேண்டும். ‘சைவம் மிகப்பழைய வரலாற்றுக்கு முற்பட்ட சமயம். அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்துள்ளது’ என்ற ஜி.மு.போப் அவர்களின் வாக்கிற்கிணங்க, பழம்பெருமையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பின்னணியையும் கொண்ட நகுலேஸ்வரம் போன்ற திருக்கோயில்கள் தமிழரின் வரலாற்றுச்சின்னங்கள் என்பதை உணர்ந்து பாதுகாப்பது அனைவரது கடமையாகும்.

நகுலேசுவரம் – இலங்கை
Scroll to top