திருக்கேதீச்சரம் – இலங்கை

Picture

திருக்கேதீச்சரம் – இலங்கை

ஈழத்திலுள்ள கோயில்களைத் தொன்மைச் சிறப்புக் கொண்டவை, பாடல் பெற்றவை, கிராமியக் கோயில்கள் என மூவகையாகப் பாகுபடுத்தலாம். இவற்றுள் தொன்மைச் சிறப்பும், பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் சிறப்பைப் பெற்ற கோவில்களுள் ஒன்றாகப் போற்றப்படுவது திரக்கேதீச்சரம். இலங்கையிலுள்ள மன்னார் என்னும் சிறுதீவு இருபகுதிகளைக் கொண்டது. இவ்விரு பகுதிகளையும் தலைமன்னார் என்றும், கோட்டை மன்னார் என்றும் குறிப்பிடுவர். தலைமன்னார் துறைமுகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோமீற்றர் தூரத்தில், பாலாவித் தீர்த்தக்கரையில் திருக்கேதீச்சரம் என்னும் திருத்தலம் தற்காலத்தில் காணப்படுகின்றது. ஆதியில் மாந்தை, மாதோட்டம் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட நகரில், இக்கோயில் அமைந்திருந்தது. பின்னர்ஊரின் பெயரும், கோயிலின் பெயரும் ஒன்றாகித் திருக்கேதீச்சரம் எனப் பொதுப்பட வழங்கப்பட்டு வருகின்றது.

திருக்கேதீச்சரம் என்ற பெயர் புராணங்களில் கூறப்பட்ட கதைகளை அடிப்படையாகக் கொண்டு காரணப்பெயராகி அன்று தொட்டு இன்றுவரை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட, புராணக்கதைகள் காணப்படுகின்றன. விஞ்ஞான அறிவு மேலோங்கி நிற்கின்ற தற்காலத்தில், நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்களையெல்லாம், புராணக்கதைகளில் காணக் கூடியதாயுள்ளது. எனவே இவை வெறும் கட்டுக்கதைகள் என்று ஒதுக்கிவிடாது, இவற்றுள் புதைந்து கிடக்கும் அறிவுபூர்வமான சாரங்களை வெளிக்கொணர்ந்து ஆராய்ந்து முடிவெடுப்பது இன்றைய தேவையாகும். “International Society For the Investigation of Ancient Civilzation” என்ற நூலில் இராமாயண, மகாபாரத யுத்தங்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் என்பதை பல்வேறு ஆதாரங்களோடு, மெஞ்ஞான, விஞ்ஞான அறிவில் ஊறிய அறிஞர்கள் ஆராய்ந்து ஆதாரபூர்வமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். இக்கருத்துக்கள் ஈழத்திலே காணப்படுகின்ற ஆலய வரலாறுகளின் தொன்மையை ஆராயப் பேருதவியாக அமைந்துள்ளன. மண்மூடிக் காணப்பட்ட திருக்கேதீச்சரம் ஆலயத்தை மீண்டும் வெளிக்கொண்டு வர உதவியவர் ஷ்ரீலஷ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள். பதிகங்களிலும், புராண வரலாறுகளிலும் காணப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டே ஷ்ரீலஷ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் திருக்கேதீச்சரம் திருவாசகங்கள், புராணவரலாற்றுச் செய்திகளை ஆராய்ந்து அதனுள் புதைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகும். திருக்கேதீச்சரத்தினுடைய ஆரம்பகால வரலாறும் புராணக்கதைகளைத் தழுவியதாகவே காணப்படுகின்றது.

இந்துக்களால் போற்றப்படும் நவக்கிரகங்களுள் ஒருவரான கேது பகவான், தனது வினைகளைப் போக்க ஈழநாட்டின் வடபகுதியிலுள்ளதும், திருக்கயிலைச்சிகரம் வந்து வீழ்ந்த இடமுமான தென்கையலாயம் எனப்போற்றப்பட்ட தலத்திற்கு வந்து வணங்கினார் எனவும், அதனால் மகிழ்ந்த இறைவன் அவருக்குக் காட்சி தந்து, “நீ எம்மை வணங்கியதால் எம்மைக் கேதீச்சரநாதர் என்றும், யாம் உறையும் இவ்விடம் கேதீச்சரம் என்றும் பெயர் பெறும்” என அருளியதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இப்பெயரோடு திரு என்பது அடைமொழியாகச் சேர்க்கப்பட்டு, கேது+ஈச்சரம்=கேதீச்சரம் என வழங்கப்பட்டு வருகின்றது. கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இத்தலம் மகாதீர்த்தம் என அழைக்கப்பட்டுள்ளதைக் கதிர்காமக்கல்வெட்டொன்றின் மூலம் அறிய முடிகின்றது.

இவ்வாலயத்தின் தொன்மையை வேறு சில புராண வரலாறுகளும் விளக்கியுள்ளன. மகாதுவட்டா என்பவர் சூரபன்மனின் மனைவியான புதுமகோமளையின் பாட்டனார். சிறந்த சிற்பவல்லுனரான இவர் கேதீச்சரப்பெருமானை வழிபட்டு, கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்தார். தேவதச்சனாகப் புராணங்களிலே கூறப்படும் மகாதுவட்டா வழிபட்டதால், திருக்கேதீச்சரம் ஆலயம் `மகாதுவட்டாபுரம்’ என அழைக்கப்பட்டது எனக் கந்தப்புராணத்திலும், தட்சிணகைலாயமான்மியத்திலும் கூறப்பட்டுள்ளது. மகாதுவட்டாபுரம் என்பது மாதோட்டம் எனப்பிற்காலத்தில் மருவியது. மாகதுவட்டாவின் மகனே விஸ்வகன்மா எனப்புகழப்படும் தேவசிற்பி இவர்கள் மாந்தைக்கம்மியர் வம்சத்தைச் சேர்ந்த ஓவிய குலத்தவர். இவர்களது பெயராலேயே ஓவியம் என்ற பெயர் ஏற்பட்டது. தென்கைலாயமெனப் புகழப்படும் மாந்தைநகர், ஓவியர்தேசயம் என விவிலிய நூலில் காணப்படுவதாக யாழ்ப்பாணச்சரித்திர ஆசிரியர் முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். குபேரன் பயன்படுத்தியதான ஆகாயவூர்தி, சீதையைக் கவர்ந்து செல்ல இராவணன் பயன்படுத்திய சீதையைக் கவர்ந்து செல்ல இராவணன் பயன்படுத்திய புஷ்பகவிமானம் ஆகியனவும் மாந்தைக் கம்மியரால் செய்யப்பட்டது என்பன போன்ற பல கருத்துக்களும் இவரால், ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூற்றுக்கள் திருக்கேதீச்சர ஆலயம் அமைந்திருந்த நகரின் சிறப்பை எடுத்தியம்பியுள்ளதோடு, ஆலயத்தின் தொன்மையையும் விளக்குகின்றது.

விசுவகன்மனால் கட்டப்பட்ட காந்தக்கோட்டையை புறநானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள், `தூங்கெயில்’ எனக் குறிப்பிட்டுள்ளன. சீனப்பிரயாணியாகிய உறியூன்திசங் (Hiouen Thsang) எழுதிய நூலிலும், அரபிக்கதைகளிலும், மாந்தைப்பள்ளிலும் காந்தக்கோட்டையைப் பற்றிய குறிப்புகள்காணப்படுகின்றன. மாந்தையிலிருந்த சிற்பிகளும், ஓவியர்களுமான நாகர்கள்செய்த கற்சிலைகளும், குகை ஓவியங்களும் இவர்கள் திறனை எடுத்துக்காட்டுவனவாகக் காணப்படுகின்றன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மாதோட்டத் துறைமுகம், கடல்வாணிப மையமாக விளங்கியுள்ளமைக்கு இதன் அமைப்பே காரணமாகும். அரபிக்கடல் வழியாகக் கப்பற்போக்குவரத்து நடைபெற்ற காலத்தில், அவ்வழியாக வரும் கப்பல்கள், தென்மேற்குப்பருவக் காற்றிலிருந்து தப்ப, இத்துறைமுகத்தில் தங்கிச் செல்வது, அக்கால வழக்கமாயிருந்தது. இதனால் இப்பகுதி புகழ்பெற்ற வணிகச்சந்தையாக விளங்கியுள்ளது. தற்காலத்;தில் திருக்கேதீச்சரம் என அழைக்கப்படும் பகுதியே மாந்தை என அழைக்கப்பட்டுள்ளது. கடல் வாணியத்தில் முக்கிய கேந்திரமாக இப்பகுதி விளங்கியுள்ளதால் இதனை, மாச்சந்தை என அழைக்க, அது பின்னர் மாந்தையாக அருகியிருக்க வேண்டும். கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கொண்ட சங்ககால இலக்கியமான அகநானூறில் ‘..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..’ என்றும், முத்தொள்ளாயிரத்தில் ‘…புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை…’ என்றும் மாந்தையின் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாகச் சிங்கள இனத்தவர்களால் கருதப்படுவது மகாவம்சம். கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பௌத்த பிக்கு ஒருவரால் பாளிமொழியில் மகாவம்சத்தின் முதற்பகுதி எழுதப்பட்டது. பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் மீண்டுமொருமுறை திருத்தி எழுதப்பட்டது. கி.பி. 1877 இல் மீண்டும் மகாவம்சம் திருத்தங்களுடன் பௌத்தகுருமரால் தொகுக்கப்பட்டது. இந்நூலிலும் திருக்கேதீச்சரம் ஆலயம் இருந்த மாதோட்டநகர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. மாதோட்டநகரை, ‘மகாசித்தா’ என மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது. மாந்தை என வழங்கப்பட்ட தமிழ்ப்பெயரின் பாளி மொழிபெயர்ப்பே மகாசித்தா எனலாம். மகா என்றால் பெரிய என்றும், தித்தா என்றால் இறங்குதுறை அல்லது துறைமுகம் என்றும் பொருள்படும். மாந்தைப்பிரதேசம் பெருந்துறை எனவும் வழங்கப்பட்டுள்ளது. திருவாசகம் குயிற்பத்திலுள்ள, ‘ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்’ என்பது மாந்தையைக் குறிக்குமென்பர்.

மகாவம்சத்திலே கூறப்பட்டுள்ள இலங்கை வரலாறு கலிங்க இளவரசனான விஜயன் வருகையுடனேயே ஆரம்பமாகின்றது. ஆனால், விஜயன் இலங்கைக்கு வந்ததாகக் கருதப்படும் கி.மு. 543 ஆம் ஆண்டில், திருக்கேதீசரம் ஆலயம் புகழ்பெற்ற ஆலயமாக இருந்துள்ளது என்பதற்கு, இலங்கை வரலாற்றிலே கூறப்படும் செய்திகளே ஆதாரமாயுள்ளன. இவன் தந்தையாரால் நாடு கடத்தப்பட்டு மாந்தைத் துறைமுகத்தில் வந்திறங்கினானென்றும், அப்பொழுது இலங்கையில் இயக்கரும், நாகரும் ஆட்சி செய்தனர் என்றும் வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. இவனது மேலாதிக்கம் ஈழத்தில் பரவியபோது, பல திருத்தலங்களைக் கட்டியும், புதுப்பித்தும் திருப்பணிகளைச் செய்துள்ளான். அவற்றுளொன்றாகத் திருக்கேதீச்சரம் குறிப்பிடப்பட்டு விஜயன் ‘திருக்கேதீஸ்வரர்கோயில் திருப்பணியைத் திருத்தமுறச் செய்வித்தான்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜயன் வருகைக்கு முன்பிருந்தே திருக்கேதீச்சரம் ஆலயம் இருந்ததென்பது புலனாகின்றது.

இராம இராவண யுத்தகாலத்திலும், இக்கோயில் இருந்ததென்பதை ஒரு சம்பவம் எடுத்தியம்புகின்றது. சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் இராமனைப் பிரமகத்தி தோஷம் தொடர்ந்ததென்றும், அதனைப்போக்க இலங்கையிலுள்ள முனீசுவரம் என்ற சிவத்தலத்தில் பொன்லிங்கமும், திருக்கோணேசுவரத்தில் இரத்தினலிங்கமும், திருக்கேதீச்சரத்தில் வெள்ளிலிங்கமும், பிரதிஷ;டை செய்து வழிபட்டபின், தென்னகத்திலிருந்த (தமிழகம்) இராமேசுவரம் கோயிலில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டுத் தன் தோஷத்தைப்போக்கிக் கொண்டார் எனப் புராண வரலாற்றிலே கூறப்பட்டுள்ளது. இராமர் வழிபட்டதாகக் கூறப்படும் இப்புராண வரலாறும் இவ்வாலயத்தின் தொன்மைக்கு ஒரு சான்றாகக் காணப்படுகின்றது.

பஞ்சபாண்டவர்களுள் ஒருவராகிய அருச்சுனன், தீர்த்தியாத்திரையின் பொருட்டுத் தென்னகத்தலங்களை (தென்னகம் – தமிழகம்) வழிபட்டபின்னர், ஈழநாட்டிலுள்ள திருக்கேதீச்சரநாதனை வழிபட்டாரென்றும், பின்னர் நாககன்னிகையை மணம்புரிந்தாரென்றும் ஐதீகமுண்டு.

சோழர் இலங்கையை 126 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். இக்காலப்பகுதி இந்துமதத்தின் பொற்காலமாகக் கருதப்படுகின்றது. கி.பி 1028இல் இராசேந்ரதிரசோழனால் ஈழம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் ஆட்சியில் ஊரின் பெயர்களும், ஆலயங்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டன. திருக்கேதீச்சரம் ஆலயத்தை இராஜராஜேஸ்வரம் என்றும், மாதோட்ட நகரினை இராஜராஜபுரம் என்றும் வழங்கியுள்ளனர். இவர்களால் பாதுகாப்பின் பொருட்டு, திருக்கேதீச்சரம் ஆலயத்தைச்சுற்றி நன்னீர், கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டிருந்ததென்பர். இராசேந்திரசோழன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், இவ்வாலயத்தின் ஆண்டுதோறும். ஏழுநாள் விழாவெடுத்து, வைகாசிவிசாகத்தன்று தீர்த்தவிழா நடத்தியதாக, இராசேந்திரசோழன் கல்வெட்டுக் கூறுகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தரபாண்டியன், இவ்வாலயத்தில் சிற்பவேலைகள் பலவற்றைச் செய்ததோடு வேறு பல திருப்பணிகளையும் செய்துள்ளான். இலங்கையை ஆட்சிசெய்த 4வது மகிந்தனின் அநுராதபுரக் கல்வெட்டில், மாதோட்ட நகர் ஒரு புண்ணியதலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான புராதனப் பெருமையும், வரலாறும் கொண்ட இவ்வாலயம் பாடல்பெற்ற தலமாகவும் காணப்படுகின்றது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இராமேஸ்வரத்தில் இருந்தவாறே, திருக்கேதீச்சரத்தின் பெருமையை ஒரு பதிகத்தில் பாடியுள்ளார். இப்பதிகம் இரண்டாந்திருமுறையில் உள்ளது. இவர் திருகேதீச்சரம் அமைந்துள்ள மாதோட்டத்தின் எழிலை ஒவ்வொரு பாடலிலும் கூறிச்செல்கின்றார். கடிகமழ் பொழிலணி மாதோட்டம், எழில்திகழ் மாதோட்டம், இச்சையில் உழல்பவர் உயர்தரு மாதோட்டம், மறிகடல் மாதோட்டம், இறப்பிலர் மலி கடல் மாதோட்டம், மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம், மஞ்ஞை நடமிடு மாதோட்டம், முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டம், மாவும் பூகழும் கதலியும் நெருங்கு மாதோட்டம், என்றெல்லாம் ஊரின் பெருமையை, எழிலைப் புகழ்ந்து கூறிய சம்பந்தர், இங்கு எழுந்தருளியுள்ள கேதீச்சரப் பெருமானை ‘…பாமாலை பாடலாயின் பாடுமின் பக்தர்கள் பரகதி பெறலாமே’ என்று முடிக்கின்றார்.

கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் சேரமான் பெருமான் நாயனாருடன் இராமேசுவரம் வந்து தங்கியிருந்தபோது, அங்கிருந்தே திருக்கேதீச்சரப்பெருமானின் சிறப்பை ஒரு பதிகத்தில் பாடியுள்ளார். ஏழாந்திருமுறையிலே இத்திருப்பதிகம் காணப்படுகின்றது. இவர் பாடிய பாடல்கள் பத்திலும், திருக்கேதீச்சரத்தானே என்று இறைவனை ஏத்தும் பண்பு காணப்படுகின்றது. இவரது இறுதிப் பாடலில் ‘..மறையார் புகழ் ஊரன் அடித் தொண்டனுரை செய்த குறையாத்தமிழ் பத்தும்சொலக் கூடாகொடு வினையே’ என்று முடிக்கின்றார்.

அப்பர்சுவாமிகளின் திருவீழிமிழலைப்பதிகத்தில் ‘பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..’ என்று திருக்கேதீச்சரநாதனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல் ஆறாந்திருமுறையில் உள்ளது.

கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இரண்டாம பாண்டியப் பேரரசர் காலத்திலும், பின் ஆதக்கம் பெற்ற விஜயநகரப் பேரரசர் காலத்திலும் திருக்கேதீச்சரம் ஆலயம் சிறப்போடு விளங்கியுள்ளது.

இவ்வாறான பல பெருமைகளைக் கொண்ட மாதோட்ட நகரும், திருக்கேதீச்சரம் ஆலயத்தின் சில பகுதிகளும், கி.பி 1545இல் ஏற்பட்ட கடற்கோளினால் கடல்வாய்ப்பட்டது. எனினும், கி.பி 1585ஆம் ஆண்டு வரை நித்தியபூசைகள் நடைபெற்று வந்துள்ளது.

கதி.பி 1505ஆம் ஆண்டு இலங்கையுள் நுழைந்த அன்னியரான போத்துக்கேயரின் ஆட்சி இலங்கையெங்கும் பரவியது. இவர்கள் இந்துசமயத்தையும், இந்துக்கோயில்களையும் நிர்மூலமாக்கியதோடு இந்துக்கோயில்களிலே காணப்பட்ட பெருஞ்செல்வங்களையும் கொள்ளையடித்தனர். கி.பி 1590ஆம் ஆண்டு போத்துக்கேயர், இவ்வாலயத்தைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டனர். இதனை எவ்வாறோ அறிந்த கோயிலைச் சார்ந்தோரும், மக்களும் முக்கியமான பொருட்களையும், அழகும், அருளும்மிக்க கௌரியம்மன் திருவுருவத்தையும் பெயர்த்தெடுத்துக் கொண்டு இரவோடிரவாக ஊரைவிட்டோடி, காட்டுமார்க்கமாகச் செல்லும்வழியில், தற்போது மடுமாதா கோயிலுள்ள அடர்ந்த காட்டுப்பிரதேசத்தில் சிறு கிராமத்தில் தங்கினர். பின்னர் அவ்விடத்தில் சிறு கோயிலொன்றை அமைத்து, திருக்கேதீச்சரம் ஆலயம் இருந்ததாகக் கருதப்பட்ட பிரதேசத்தில், 1894ஆம் ஆண்டு பூமியை அகழ்ந்த போது அம்மன் திருவுருவம் கிடைக்காது ஏனைய பல திருவுருவங்கள் கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்துக்களால் வணங்கப்பட்ட ஆலயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் கிறிஸ்தவ ஆலயங்களை எழுப்புவதும், இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதும் தமது தலையாயபணி எனப் போத்துக்கேயர் கருத்தில் கொண்டு செயற்பட்டமைய, இலங்கையின் வரலாற்றிலே தெளிவாகக் காணலாம்.

திருக்கேதீச்சரம் ஆலயத்துள் நுழைந்த போத்துக்கேயர், பெறுமதிமிக்க ஆபரணங்களையும், பொருட்களையும் கொள்ளையடித்து, சிலைகளையும், திருவுருவங்களையும் உடைத்து நாசம் செய்தனர். திருக்கோயில், மதில், கோபுரம் ஆகியவற்றறைப் பீரங்கியால் தாக்கி அழித்தனர். கோயிலை உடைத்த கருங்கற்களைக் கொண்டு மன்னர் துறைமுகத்தைக் கட்டினர். இதன் பின்னர் ஏற்பட்ட மண்மாரியால் கோயிலின் எஞ்சியிருந்த பகுதிகளும் மண்ணால் மூடப்பட்டு, இப்பகுதி அடர்ந்த காடாக மாறியது. இந்நிலையில், 1926ஆம் ஆண்டிலும், 1949ஆம் ஆண்டிலும் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆய்வின் பயனாகப் பல அரிய தகவல்கள் கிடைத்தன. புதைந்த பிரதேசத்திலிருந்து மனித எலும்புக்கூடுகள், மட்பாண்டங்கள் மற்றும் பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாய்வுகள் இன்றும் தொடர்கின்றன.

போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட பின்பு, சுமார் மூன்று நூற்றாண்டுகளாகத் திருக்கேதீச்சரம் ஆலயமும், மாதோட்டநகரும் மக்களறியாத, மக்களால் மறக்கப்பட்ட இடமாக மாறியிருந்தது. காலநியதிப்படி, பூமிமாதாவின் மடியில் துயில்கொண்ட திருவுருவங்கள், மீண்டும் வெளிவரத் தூண்டுகோலாக இருந்தவர், யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள். இவருடைய எண்ணத்தில், இங்கு மறைந்திருந்த திருக்கோயிலின் சிந்தனைகள் எவ்வாறோ எழ ஆரம்பித்தன. மாதோட்டத்தைப் பற்றியும், திருக்கேதீச்சரம் ஆலயத்தைப் பற்றியும் தெரிவித்து, கி.பி 1872ஆம் ஆண்டு, ‘யாழ்ப்பாணச் சமயநிலை’ என்று நாவலர் அவர்கள் வெளியிட்ட பிரசுரம், மக்களை விழிப்படையச் செய்தது. சம்பந்தர், சுந்தரரால் திருக்கேதீச்சரத்தின் மீது பாடப்பட்ட பதிகங்களே இவ்வாலயத்தை மீண்டும் பழையநிலைக்குக் கொண்டுவரும் எண்ணத்தை இவருக்கு அளித்திருக்க வேண்டும். இவருக்கு இவ்வாறான எண்ணம் ஏற்பட்டதைத் தெய்வசங்கல்பம் என்று கூறுவதே பொருந்தும்.

ஆலயம் இருந்ததாகக் கருதப்பட்ட, காடுமூடிய பிரதேசத்தை விலைக்கு வாங்கி, திருக்கேதீச்சரத்தானுக்குப் புதுக்கோயில் அமைத்து, நித்திய நைமித்திக பூசைகள் நடத்த வேண்டுமென்பது இவர் எண்ணமாகக் காணப்பட்டது. அன்றைய அரசியல் நிலை, இவர் எண்ணம் நிறைவேற முட்டுக்கட்டையாயிருந்தது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இவ்வுலகை நீத்த 14ஆண்டுகளின் பின்பு, நாவலரின் எண்ணம் நிறைவேறியது. கி.பி 1893ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 13ஆந் திகதி, கோயில் இருந்து மறைந்ததாகக் கருதப்பட்ட 40 ஏக்கர் நிலத்தையும் 3100 ரூபாவிற்கு திரு.மு.பழனியப்பச் செட்டியார் அவர்கள் இலங்கைச் சைவமக்கள் சார்பாக, ஏலத்தில் வாங்கினார். அக்காலத்தில் வடமாகாண அரசப் பிரதிநிதியாயிருந்த சேர் வில்லியம் துவைனம் (ளுசை றுடைடயைஅ வுறலநெஅ) அவர்கள், தமது ஆண்டறிக்கையில் திருக்கேதீச்சரத்தின் பண்டைய சிறப்புக்களையும், நிலம் ஏலம் விடப்பட்டதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

கோயில் பணிகளை ஆரம்பிப்பதில் முன்னின்று உழைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த திரு.மு.பசுபதிச்செட்டியார் அவர்கள். இவரோடு இணைந்து பல சைவப்பெரியார்கள் ஆலயப்பணியில் முன்னின்றுழைத்துள்ளனர். இவர்களுடைய முயற்சியினால் கி.பி 1894ஆம் ஆண்டு காடுகளை வெட்டும்போது, நிலத்துள் புதைந்துள்ள திருவுருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பழைய கோயிலின் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், துவசத்தம்பபீடம், பலிபீடம் ஆகியவற்றோடு சோழர்கள் கட்டிய கேணியின் அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவலிங்கம், நந்தி, விநாயகர் கற்சிலைகளும், ஆலயத்தில் பாவிக்கப்படும். தட்டங்கள் போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அகழ்ந்தெடுக்கும்பொழுது சிவலிங்கம் பின்னப்பட்டதால், அதனை மூலநாதராக வைக்காது, பின்புறமுள்ள மண்டபத்தில் பிரதிஷ;டை செய்தனர். காசி வாரணாசியிலிருந்து தருவிக்கப்பட்ட காசிலிங்கத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ;டை செய்தனர். புதிதாக வடிக்கப்பட்ட கௌரி அம்பாள் திருவுருவமும் பிரதிஷ;டை செய்யப்பட்டது. திருப்பணிகள் ஓரளவு நிறைவேறி, 1903ஆம் ஆண்டு யூன் மாதம் 28 ஆந்திகதி மகாகும்பாபிNஷகம் நடைபெற்றது. பின்னர் மேலும் சில திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு, கி.பி 1910ஆம் ஆண்டு மற்றுமொரு கும்பாபிNஷகம் நடைபெற்றது. இதன்பின் மிகப் புகழ்பெற்ற ஆலயமாகத் திருக்கேதீச்சரம் திகழ்ந்தது. எனினனும் நாளடைவில் திருப்பணிகள் நடைபெறாது ஆலயம் அழியத் தொடங்கியது. இதனைக் கண்ணுற்ற சைவப்பெருமக்கள் பலர் ஒன்றுசேர்ந்து 1944ஆம் ஆண்டு ‘ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம்’ என்ற சமய அமைப்பை ஏற்படுத்தினர். இவர்களுள் திரு.கா.நாகலிங்கம், திரு.வ.க.செல்லப்பா, ஸ்ரீ சி.சரவணமுத்து அடிகளார் மற்றும் திரு.நீ.ஆறுமுகம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் பெருமுயற்சியால் 1948ஆம் ஆண்டு சைவமாநாடொன்று நடைபெற்றது. இதன் மூலம் சைவ மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையிலே, இதே வருடம் திருக்கேதீச்சரர் ஆலயத்தில் கும்பாபிNஷகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சபையால் மேலும் பல திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆலய புனருத்தாரணப் பணியில் மதுரை ஆதீனத்தின் பங்களிப்பும் காணப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக வன்னிவிருட்சம் காணப்படுகின்றது. இத்திருக்கோயில் கிழக்குநோக்கிய ஐந்தடுக்கு நிலையினைக் கொண்ட இராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. இராஜகோபுரத்தின் அருகின் அமைந்துள்ள உயரமான கோபுரத்தில் இரண்டு தொன் எடையுள்ள, லண்டனில் வார்க்கப்பட்ட பிரமாண்டான வெண்கல ஆலயமணி காணப்படுகின்றது. இசைக்குறி;ப்பில் காணப்படும் ‘இ’ என்ற நாத ஒலியமைப்பில் இது உருவாக்கப்பட்டதென்பர். இவ்வாலயத்தில், சுவாமி சந்நிதி கிழக்கும், அம்பாள் சந்நிதி தெற்கும் நோக்கியுள்ளன. திருக்கோயிலைச்சுறிறிக் காணப்படும் நான்கு திருவீதிகளும் மூன்றாம் பிரகாரம் என வழங்கப்படும். நான்காம் பிரகாரமாகத் தேரோடும்வீதி காணப்படுகின்றது.

இங்கு பல மடங்கள் காணப்பட்டன. இவற்றுள் ஈழத்துச் சிவனடியார் திருக் கூட்டத்தினரால் 1952ஆம் ஆண்டு திருவாசகமடம் கட்டப்பட்டது. இம்மடத்தில் சிவனடியார்கள் வந்து தங்கிச் செல்வர். மகேசுவரபூசையும் நடைபெறுவதுண்டு. பிராமணச் சிறுவர்களுக்கும், ஆதிசைவச்சிறுவர்களுக்கு வேத, சிவாகமங்களைக் கற்பிக்கும் நோக்கமாக, 1960ஆம் ஆண்டு சிவானந்தகுருகுலம் அமைக்கப்பட்டது.

இங்கு எழுந்தருளியுள்ள கேதீச்சரநாதனை கௌரிநாதர், கேதீச்சரர், மகா துவட்டாபுரநாதர், ஈழக்கைலாயநாதர் தென்கைலாயநாதர், மத்யசேதுநிவாசர், நாகநாதர், இராஜராஜேஸ்வரர், நித்தியமணவாளர், பெருந்துறைஈசன் எனப் பல பெயர்களால் அழைப்பர்.

இவ்வாலயத்தில் 35 வருடங்களுக்கு மேலாக நித்திய பூசகராகவும், பிரதம குருவாகவும் விளங்கியவர், சிவஸ்ரீ சதாசிவ சுப்ரமணிய பட்டாச்சாரியார் அவர்கள். இவர் கௌரியம்பாள் சமேத திருக்கேதீச்சரப்பெருமானுக்கு, அன்போடும் பயபக்தியோடும் திறம்பட நித்திய, நைமித்திக பூசைகளை நடத்தியுள்ளார். இக்கோயிலின் வளர்ச்சியில் இப்பெருமகனாரது பணி என்றும் நினைவுகூரத்தக்கது.

திருக்கேதீச்சரம் ஆலயத்தில் நித்திய, நைமித்திக பூசைகள் சிறப்பாக நடைபெறும். நித்தியபூசையென்றால் காலை, மாலை நடைபெறும் பூசைகளையும், நைமித்திக பூசை யென்பது விசேடநாள் பூசைகளையும் குறிக்கும். ஆலய உற்சவவிழா 17 நாட்கள் நடைபெறும். கேதாரகௌரி விரத விழா 21 நாட்கள் விரதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, பின் விழாவாகவும் கொண்டாடப்படும். அவ்வாறே மகாசிவராத்திரியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இத்தினத்தன்று குடங்களில் பாலாவித்தீர்த்தத்தை எடுத்துச்சென்று, மகாலிங்கப் பெருமானுக்கு அபிNஷகம் செய்வர். இதனைத் தீர்த்தக்காவடி என்றழைப்பர். இவைதவிர குருபூசைகளும், விசேடநாள் விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுவதுண்டு.

ஐந்து பெரிய தேர்கள் ஆலயத்தில் காணப்படுகின்றன. வைகாசி விசாகத்தின்போது இத்தேர்கள் பவனி வருவதுண்டு. 180 அடி உயரமுள்ள சிற்பவேலைப்பாடுகள் அமைந்த தேரில் எம்பெருமான் பவனிவருவர்.

ஆலயங்களின் மேன்மைக்குப் புண்ணியதீர்த்தங்களும் காரணமாயிருக்கின்றன. பிணியையும், பாவத்தையும் போக்க வல்லவை தீர்த்தங்கள். இதனால் இறைவனுக்குத் தீர்த்தன் என்றொரு பெயரும் உண்டென்பதை, மாணிக்கவாசகசுவாமிகள் அருளிய திருவாசகத்தில் ‘ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்’ என்றும், அப்பர்சுவாமிகள் ‘சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே’ என்றும் குறிப்பிட்டுள்ளதன் மூலம் அறியலாம்.

இத்தலத்தின் புண்ணியதீர்த்தமாகப் பாலாவி ஆறு காணப்பட்டுள்ளது. சம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் ‘…மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே’ என்றும், சுந்தார் அருளிய திருக்கேதீச்சரத் திருப்பதிகத்தில் ஒவ்வோரு பாடலிலும், பாலாவியின் கரைமேல் என்றும் சிறப்பித்தும் கூறப்படுகின்றது. பலவினை போக்கும் பாலாவி என்றும், பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி என்றும் திருக்கேதீச்சரப்புராணம் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பெருமை பெற்ற பாலாவி ஆறு, காலவோட்டத்தில் மறைந்து விட்டது. இப்பாலாவித் தீர்த்தத்தைத் தாலமி, பிளினி முதலிய ஆராய்ச்சியாளர்கள் பாலாவி மண்டலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாலாவி ஆறு மறைந்ததற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பகாலத்தில் இலங்கையின் வடமத்தியபகுதியின் பரந்தவெளிகளில் ஓடிய நீர், மல்வத்துஒயாவுடன் சேர்ந்து வற்றாத பேராறாய் விளங்கி, பாலாவி ஆறு எனப் பெயர்பெற்று மாந்தைக் கடலில் கலந்தது. மாந்தைத்தறை பல்வேறு காரணங்களால் மணல்மேடாகியது போல, பாலாவி ஆறும் மறைந்தது. மல்வத்துஒயா நீர்ப்பாசனத்திட்டத்தை ஆய்வுசெய்ய வந்த நிபுணர்கள் பாலாவிநதி திசைமாறித் தெற்குப்பக்கமாக மதவாச்சிப்பகுதிக்குள் பாய்ந்ததாகவும், அதிலிருந்து பிரிந்ததே, அருவியாறு என்ற பெயரில் மன்னார்த்தீவுக்கு அப்பால் கடலில் கலக்கிறது என்றும் தெரிவித்தனர். அக்காலத்தில் வெட்டப்பட்ட கட்டுக்கரைப் பெருங்குளம் (புயைவெ’ள வுயமெ) பாலாவி ஆற்றின் போக்கை மாற்றியது எனச் சேர்.கந்தையா வைத்தியநாதன் அவர்கள் தொகுந்த ‘Thiruketheswaram Papers’ என்ற ஆங்கில நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலஞ்சென்ற இப்பெரியார் திருக்கேதீச்சர புனருத்தாரணப் பணியில் பெரும்பங்காற்றியுள்ளார்.

பெருங்குளம் வெட்டப்பட்டதால் இரண்டாகப் பிரிந்த பாலாவி ஆற்றின் ஒருபகுதி, பாலாவி என்ற பெயரைத் தாங்கிப் பின்னர் சகதி நிறைந்த பள்ளமாக மாறியது. 1948ஆம் ஆண்டு பாலாவித்தீர்த்தத்தை மீண்டும் உருவாக்கும் பணியில் ஈழத்துச் சிவனடியார் கூட்டம் பெருமுயற்சி செய்தது. இவர்களோடு, சைவப்பெரியார் சேர்.கந்தையா வைத்தியநாதன் அவர்களும், இலங்கை நீர்ப்பாசனஇலாகா முன்னாள் பணிப்பாளரான பொறியியலாளர் எஸ்.ஆறுமுகம் அவர்களும், நவீனமயப்படுத்தும் திட்டத்தில் முன்னின்று உழைத்தனர். இவர்களது பெருமுயற்சியால் அணைகட்டித் தேக்கப்பட்ட நீர்நிலையே, தற்காலத்தில் பாலாவித்தீர்த்தம் என வழங்கப்படுகின்றது. இத்தீர்த்தம் ஏறக்குறைய அரைமைல் சுற்றளவைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர்மடம், நாட்டுக்கோட்டை நகரத்தார்மடம், அம்மன்மடம், பசுமடம், பூநகரிமடம், சபாரத்தினசாமிமடம், சிவராத்திரிமடம், திருவாசகமடம், திருப்பதிமடம், கௌரீசர்மடம், நாவலர்பெருமான்மடம், விசுவகன்மடம், திருக்குறிப்புத்தொண்டர் மடம் என பல மடங்கள் 1990ஆம் ஆண்டு வரை காணப்பட்டன. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் அரசபடைகளின் தாக்குதல்களுக்குள்ளாகி, இந்துக்கோயில்கள் பெரிதும் பாதிப்படைந்தன. தற்போது யுத்தம் ஓய்ந்து அமைதியான சூழ்நிலை காணப்படுகின்றது. திருக்கேதீச்சரத்தில், சிவராத்திரி விழா அமைதியாகக் கொண்டாடப்படுகின்றது.

திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுவது மனதுக்கு அமைதியைக் கொடுப்பதோடு, அன்பையும், அறிவையும், பண்பையும் வளர்க்கின்றது. ஒரு இனத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்ற, கருவியாக ஆலயங்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பேணிப்பாதுகாத்தல் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். திருமூலர் கூறுவதுபோல,

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்தேடித் திரிந்து சிவபெருமா னென்றுபாடுமின். பாடிப் பணிமின் பணிந்த பின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே என்பதற்கிணங்க, ஆலயந்தோறும் சென்று வழிபடுவோர் உள்ளத்தை ஆண்டவன் தனக்கு ஆலயமாகக் கொண்டு எழுந்தருளுவான்.

திருக்கேதீச்சரம் – இலங்கை
Scroll to top