மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நிலவில் வாரம் பதின்மூன்றாம் நாள் இரவும் பதினான்காம் நாள் பகலும் சிவராத்திரி என்று அழைக்கப்படுகின்றன.

விக்கிரம வருடக் கணக்குப்படி, பங்குனி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்து வருடாந்தரக் கணக்குப்படி, மிகப் புனித தினங்களில் ஒன்றாகவும், மிக மங்கலமான நாட்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

பிற மாதங்களில் வரும் சிவராத்திரி, மாச சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இவை அனைத்துமே மங்கலமாகவும் புனிதமாகவும் கருதப்பட்டாலும், மகா சிவராத்திரியே மிகச் சிறந்தது. ஏனெனில், இன்றுதான் உலகு அனைத்தையும் அழித்திருக்கக்கூடிய (ஆலகால) விஷத்தை சிவன் அருந்திய தினம் என்று ஒரு பெருங்கதை உண்டு. உலகு காப்பாற்றப்பட்டதைக் குறிக்க மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் மிக முக்கியமான திருவிழாக்களில் மகா சிவராத்திரியே மிக அமைதியுடன், தீவிர பக்தியுடன் கொண்டாடப்படும் திருவிழாவாகும். உண்ணாமை, பிரார்த்தனை என்று விரதம் கடைப்பிடிக்கவே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, கொண்டாட்டங்களோ, கேளிக்கைகளோ கிடையாது.

சிவராத்திரி இரவன்று சிவபக்தர்கள் கண்விழித்து, பஜனை செய்வது, சிவநாமத்தை ஜெபிப்பது, பூஜைகள் செய்வது என்று பலவகைகளில் வழிபாடு செய்கின்றனர். அதிகாலையில் இறுதி பூஜை செய்து முடித்ததும், சிவபூஜையில் படைக்கப்பட்ட பிரசாதம் அல்லது நைவேத்யம் உண்டு தங்கள் உண்ணா நோன்பை முடித்துக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு கதை என்று பல்வேறு கதைகள் சிவராத்திரி குறித்து வழங்கப்படுகின்றன. 12 அல்லது 14 அல்லது 24 ஆண்டுகள் மகா சிவராத்திரி பூஜை செய்வதாய் சங்கல்பம் எடுத்துக் கொள்ளும் பக்தர்கள் பலர் உண்டு.

வாரணாசி, ராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீ காளஹஸ்தி, சோம்நாத் முதலான பல்வேறு சிவாலயங்கள் அனைத்திலும் மிகச் சிறப்பாக மகா சிவராத்திரி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி
Scroll to top