தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும் பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும். விஞ்ஞானபூர்வமாக பார்த்தால் அமாவாசை அன்று பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் வருவதால் அந்த நாளில் பூமியின் ஆகர்ஷண சக்தி அதிகமாக இருக்கும் அமாவாசைக்குப் பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து பவுர்ணமி அன்று அழகிய முழுநிலவு வானில் தோன்றும். அன்று பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும். அன்று மனித உடலுக்கு சக்தி அதிகமாக இருக்கும். பவுர்ணமி அன்று கடலுக்கும் சக்தி அதிகமாகி கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக பொங்குவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேட நாட்களாகும்.