தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்… ’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இப்படி தத்துவ ரீதியிலான பொருள் புரியாதவருக்கும் புரிய வைக்கும்விதமாக நாம் வழிபடும் தெய்வத் திருவுருவங்கள் திகழ்கின்றன.மனிதருக்கு அபயம் அளிக்கும் பாவனையுடன் தீயவற்றை அழிக்கும் வண்ணம் திருக்கரங்களில் ஆயுதங்களுடனும் திகழ்கின்றன. வேல், திரிசூலம், சுதர்சன சக்கரம், கதை, பாசம், அங்குசம் என்று எத்தனை எத்தனை ஆயுதங்கள்?
ஆயுதங்கள் தாங்கிய தெய்வத் திருவுருவங்கள் வெறுமனே வீரத்தை மட்டுமே குறிக்கவில்லை. வீரத்தை வெளிப்படுத்தத் தேவையான ஆயுதங்களைத் தாங்க வேண்டிய உடல் உறுதியையும் உடல் நலனையும் மறைமுகமாக உணர்த்துகின்றன.
நம்முடைய நிரந்தரமான பெற்றோர்களாகத் திகழும் தெய்வங்களே உடல் உறுதியைப் புரியவைப்பதுபோல் இருக்கும்போது, குழந்தைகளான நாம் உடலினை அலட்சியப் படுத்தலாமா?
இறைவன் குடியிருக்கும் ஆலயம் என்று சொல்லப்படும் உடல். நமக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்? அப்படிச் சொல்வது இறைவனையே எதிரி என்று சொல்வதற்கு ஒப்பாகும்.
இருக்கும்வரை ஜாலியா இருந்துட்டுப் போகலாம்’ என்று நினைப்பவர்கள் செய்கின்ற பல காரியங்கள் உடலுக்குக் கேடாகத் தான் முடிகின்றன.
விரதம், பாத யாத்திரை,ஆலய வழிபாடுகள், போன்ற நம் வழிபாட் டின் நடைமுறைகள் எல்லாம் உடல்நலனைப் பேணும் பொருட்டுச் செய்யப்பட்டவையே. இறைவனை வழிபட நோய் நொடி இல்லாத மனதையும் உடலையும் பேணுவோம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்!!!