தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சிவாலயங்களை யோக வித்தையின் ரகசியங்களை விளக்கும் மையங்களாகவும்; மானுட யாக்கையின் தத்துவங்களை விளக்கும் தத்துவக் கூடங்களாகவும் அமைந்திருப்பதைப் போலவே இறைவனுக்கு முன்பாக செய்யப்படும் தீபாராதனையை உலகம் பர வெளியிலிருந்து உற்பத்தியாகி இறுதியில் அதனுள்ளேயே ஒடுங்குவதைக் குறிக்கும் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளனர். உலகம் எல்லையற்ற அகண்ட வெட்ட வெளியிலிருந்து படிப்படியாக உற்பத்தியாகி, முழுமை பெற்று சிறப்புடன் வாழ்ந்த பின் ஒரு காலத்தில் யாவும் எங்கிருந்து உண்டானதோ அந்த வெளியிலேயே கலந்து ஒடுங்கிவிடுகிறதென்று தத்துவ நூல்கள் கூறுகின்றன. லிங்கம் என்ற சொல்லுக்குத் தோன்றி நிலைபெற்று ஒடுங்குவது என்பது பொருள். இவ்வாறு தோன்று தோன்றி ஒடுங்கும் நிலையை விளக்குவதாக ஆலயங்களில் நடத்தப்படும் தீபாராதனை அமைகிறது.
தீபாராதனையின் போது இறைவனுக்கு முன்புறம் பெரிய திரை தொங்கவிடப்பட்டுள்ளது. அது உட்புறம் சிவப்பாகவும் வெளிப்புறம் நீலநிறத்துடனும் இருக்குமாறு அமைந்திருக்கிறது. நீலநிறம் அகண்ட வெளியைக் குறிப்பதாகும். இதன் பின்புறத்திலிருந்து முதலில் மணி ஒலிக்கப்படுகிறது. இது நாதத்தத்துவம் ஆகும். அகண்ட வெளியிலிருந்து பெரிய ஒலியுடன் உலகப் படைப்புக்கான ஆரம்பம் நிகழ்வதைக் குறிக்கிறது. புலன்களுக்கு எட்டாத ஒலியிலிருந்தே மந்திரங்களும் மொழிகளும் உண்டாயின என்று புராணங்கள் கூறுகின்றன.ஒலியை, அடுத்துப் புகை மண்டலமான தூபம் காட்டப்படுகிறது. இது உலக உற்பத்திக்கான அணுத்துகள்கள் உற்பத்தியாவதைக் குறிக்கின்றன. இதையடுத்து ஒற்றைத்தீபம் காட்டப்படுகிறது. இது உலகைப் படைக்க ஜோதி வடிவம் கொண்ட இறைவனின் இச்சை வெளிப்படுவதைக் குறிக்கின்றது.
திரை விலகியதுடன் அடுக்கு தீபம் காட்டப்படுகிறது. இது உச்சியில் ஒற்றை தீபத்தையும் அதன் கீழ் சிறிய வட்டத்தில் ஐந்து தீபம், அதன் கீழ் வட்டத்தில் ஏழு தீபம் என்று படிப்படியாக அறுபத்து நான்கு தீபங்கள் வரை கொண்டதாகும். இது அனேக உயிர்கள் உலகில் பல்வேறு நிலைகளில் தோன்றியதைக் குறிக்கிறது.இதையடுத்துக் காட்டப்படுவது பஞ்சதட்டு, குடம் ஆகும். இதில் ஐந்து தட்டில் வைக்கப்பட்ட தீபங்களும் குடத்தின் மீது ஏற்றப்பட்ட தீபமும், காண்பிக்கப்படுகின்றன. ஐந்து தட்டுகள் சிவனின் பஞ்சபிரம் மங்களைக் குறிக்கின்றன. இவை உயிர்களிடத்தில் ஐம்புலன்கள்.
அதனால் அனுபவிக்கப்படும் போகங்கள், உண்டானதைக் குறிக்கின்றன. உயிர்கள் போகங்களை அனுபவிக்கும் இடமான பூமண்டலத்தைக் குடதீபம் குறிக்கிறது. பூ மண்டலத்திற்கு வந்த உயிர்கள் பல்வேறு உடல்களைப் பெற்று அத்தன்மைக்கேற்ப இயங்குவதைக் குறிக்கும் வகையில் தொடர்ந்து மத்ஸ தீபம், கூர்ம தீபம், நாகதீபம், ரிஷப தீபம், அம்சதீபம், மயூரதீபம், புருஷாதீபம், கஜதீபம், அஸ்வதீபம், ரிஷி தீபம் என்று பல்வேறு உருவங்களுடன் கூடிய தீபங்கள் சுழற்றிக் காட்டப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து ஒன்று முதல் பத்து எண்ணிக்கை வரையுள்ள பத்து தீபங்கள் வரிசையாகக் காட்டப்படுகின்றன. இவை உலக உயிர்கள் பெற்றுள்ள பல்வேறு அறிவு நிலைகளைக் குறிக்கிறது என்பர். இதில் ஆறுவரை உள்ள தீபங்கள் ஓர் அறிவு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரையுள்ள உயிர்களின் நிலையைக் குறிப்பதாகும். ஏழாவது ஞானத்தை அறிதலையும் எட்டாவது அதில் திளைத்தலையும் ஒன்பதாவது அதிலிருந்து விடுதலை அடைதலையும், பத்தாவது இறைவனோடு இரண்டறக் கலந்து விடுதலையும் குறிக்கின்றன என்பர்.
இதையடுத்து, கண்ணாடி, ஆலவட்டம், சூரியன் , சந்திரன், குடை, வெண்கவரி, ஸ்ரீவத்சம், விசிறி ஆகியவற்றைக்காட்டி உபசாரம் செய்யப்படுகிறது. இவை உயிர்கள் சகல போகங்களையும் பெற்றுச்சுகமுடன் வாழ்வதைக் குறிக்கின்றன. இதையடுத்து மந்திரபுஷ்பம் ஓதுதல், பல்வேறு தேசங்களில் இருந்து வந்த பொருட்களைச் சமர்ப்பித்தல், முதலியன நடைபெறும். இது உயிர்கள் நாடு, மொழி, இனம் என்று பலவாறாக விரிந்து மேன்மையுடன் புகழ் பெற்று விளங்குவதைக் குறிக்கும் என்பர். இறுதியில் கற்பூரக்கிளை எனப்படும் ஏழு அல்லது ஒன்பது கிளைகளைக் கொண்ட அமைப்பில் கற்பூரம் ஏற்றிக் காண்பிக்கப்படும்.
கற்பூரம் காட்டப்பட்டதும் அதன் மீது விபூதியிடுவதி போல் மடலிருந்து மூன்று முறை விபூதியை எடுத்துக் காட்டுவர். இதற்கு ரட்சை சாத்துதல் என்பது பெயர். இது உலக உயிர்கள் இறைவனின் அருட்கவசத்தைப் பெறுவதைக் குறிக்கிறது. இதையடுத்து பக்தர்களிடம் அந்த தீபம் வரிசையாகக் காட்டப்படுகிறது. பக்தர்கள் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வர். கற்பூரதீபம் கரைந்து விடுவது உலகம் மீண்டும் அகண்ட வெளியில் உருவமற்றுக் கரைந்து விடுவதை உணர்த்துகிறது. தீபாராதனை என்பது இறைவடிவில் முன்பாக தீபங்களை சுழற்றிக் காட்டும் வெற்றுச் சடங்கு என எண்ணாமல் உலகின் தோற்றம் ஒடுக்கத்தைக் குறிக்கும் தத்துவக் குறியீடாக எண்ணவேண்டும். தீபாராதனையைக் காண்பதால் இல்லறத்தானுக்கு சுகபோகங்களும், ஞானிகளுக்கு ஆத்ம ஞானமும் பெருகும்.
தீபாராதனை மண்டபத்தில் கூடியிருக்கும் பக்தர்கள் யாவரும் ஆன்மஞானத்தை விரும்பும் உயிர்கள், அவர்களுக்கு இறைவனைக் காட்டி அவனுடைய படைப்பாற்றலையும் உயிர்களின் நிலையையும் விளக்கும் குருவாக இருப்பவர் சிவாச்சாரியார். இதை உணர்பவர்களுக்கு இறைநாட்டம் உண்டாகும். ஞானம் பிறந்து மனம் அமைதியில் திளைத்து அளவில்லா ஆனந்தம் உண்டாகும் என்று பூஜாபத்தி நூல்கள் கூறுகின்றன.
நன்றி: ச. அருணவசந்தன்
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
தீபாராதனைகள் விளக்கம்