தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தனது வாழ்க்கையில் ஒரு நாள் என்றாலும் காசிக்கு போகவேண்டும், வழிபாடுகள் செய்ய வேண்டும் , முன்னொருக்கு திதி கொடுக்க வேண்டும் , என்று பலருக்கு வேண்டுதல்கள் உண்டு. ஆனால் அது எல்லோருக்கும் இலகுவாக நிறைவேறுவதில்லை நண்பர்களே!
பொருளாதாரப் பிரச்சினைகள், நேரமின்மை, நோய் நொடிகள், பலமணி நேரம் பிரயாணம் செய்ய முடியாமை என்று பல காரணங்கள் உண்டு. காசிக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும்வரை தமிழ் நாட்டிலேயே நாம் சிலபல வழிபாடுகளை செய்ய முடியும்!
”அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா..” என்கிற மந்திரம் உங்கள் கேள்விக்கான விடையாக அமைந்திருக்கிறது. அதாவது அயோத்தி, மதுரா (தமிழ்நாட்டில் உள்ள மதுரை அல்ல, வட இந்தியாவில் உள்ள மதுராபுரி என்கிற நகரம்), மாயா என்ற ஹரித்வார், காசி (வாரணாசி), காஞ்சிபுரம், அவந்திகா என்கிற உஜ்ஜயினி, த்வாரவதி என்கிற த்வாரகை இந்த ஏழும் முக்தி ஸ்தலங்கள் என்பதே அந்த மந்திரத்தின் பொருள்.
ஆக காசிக்கு இணையானது நமது தமிழ்நாட்டில் அமைந்துள்ள காஞ்சிபுரம் என்பதை மந்திரத்தின் மூலமாக நமது மகரிஷிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். காசிக்குச் செல்ல இயலாதவர்கள் காஞ்சிபுரத்திற்குச் சென்று திதி கொடுப்பதால் நிச்சயமாக அதற்குரிய பலனை அடைய இயலும். இதுபோக “கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு” என்கிற மந்திரத்தின் வாயிலாக கங்கைக்கு இணையானது நம் காவிரி என்ற உண்மையும் நமக்குப் புரியும்.
காவிரி நதி எங்கெல்லாம் பாய்கிறதோ, அந்த நதிக்கரையின் ஓரமாக அமர்ந்து செய்யும் முன்னோர்களுக்கான கடன்கள் நிச்சயமாக பலனைத் தரும். அதற்கு உங்கள் ஊரே மிகச்சிறந்த உதாரணம் ஆகும். உலகின் பல்வேறு மூலையில் உள்ளவர்களும் உங்கள் ஊருக்கு வந்து துலா ஸ்நானம் செய்வதோடு தங்கள் முன்னோர்களுக்கான கடன்களையும் செய்துவிட்டுச் செல்கிறார்கள். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?
நன்றி: ஹரிப்ரசாத்.