தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மனித வாழ்வின் இறுதிக்கால கடன்கள்!!! பகுதி 3
இந்தத் தலைப்பில் கடந்த இரண்டு நாட்களாக வந்த பதிவின் இறுதிக் கட்டுரை இது!!!
பித்ருக்களோடு சேர்ந்துவிட்டார் என்பதை உறுதி செய்ய இறந்தவரின் பெயரை பித்ருக்களோடு சேர்த்து அழைத்து அவருக்குத் தனியாக அன்னதானம் அளிக்கப்படும். அதற்கு ‘ஸோத கும்பம்’ என்று பெயர்.
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் துயரத்தைத் தவிர்க்க நவக்கிரகங்களை பதிமூன்றாம் நாள் ஆராதனை செய்வது சம்பிரதாயம்.
கையால் பிடித்த ஒரு கையளவு சாத உருண் டைக்குப் ‘பிண்டம்’ – என்று பெயர். உணவு வழியாக தொடர்பு ஏற்படுகிறது. மனம் உணவிலிருந்து உண்டா னது. உடல், உணவால் வளர்ந்தது. உடலும் மனமும் தொடர்பை உண்டு பண்ணுகிறது. ஒரு பொழுது உணவளித்தவனை என்றும் நினைவில் இருத்துவது நம் பண்பாடு. நம் உபசரிப்பில் தண்ணீர் முதலிடம் பெறும். வீடு ஏறி வந்தவருக்கு முதலில் தண்ணீர் கொடுத்து உபசரிப்போம். விருந்தோம்பலுக்குப் பேர் போனது நம் நாடு.
உதம் என்றால் தண்ணீர். கும்பம் என்றால் குடம். ‘ஸோத கும்பம்’ என்றால் தண்ணீர் நிரம்பிய குடம். அதை முதலில் அளித்து பிறகு அன்னதானம் அளிக்க வேண்டும். தண்ணீர் நமக்கு உயிரை அளிக்கும். உணவு, உயிருக்கு உயிர் என்று வேதம் கூறும் (அன்னம் ப்ராணஸ்யப்ராண:).
இறந்தவரை ‘பிரேதம்’ என்று குறிப்பிடுவதுண்டு. பிரேத என்ற சொல்லுக்கு ‘இங்கிருந்து போனவன்’ என்று பொருள். பூலோகத்திலிருந்து போனவனை பித்ரு லோகத்தில் இருக்க வைக்கும் சடங்கு இது. பிரேதத்தை பித்ருத்வமாக மாற்றும் வழிவகைகளை தர்ம சாஸ்திரம் எடுத்துரைக்கிறது.
தகப்பனாரின் மூன்று தலைமுறையினரான பித்ருக்களை ஆராதனை செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அவர்கள் அந்தத் தண்ணீரில் உறைந்திருப்பார்கள். இறந்தவரை ஆராதனை செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும்.
அதில் பிரேதம், அதாவது இறந்தவர் உறைந்திருப்பார். இரு பாத்திரத்திலும் இருக்கும் தண்ணீரை ஒன்றாகச் சேர்த்து விடுவான் பிள்ளை. பிரேதத்தின் தண்ணீர் பித்ருக்களின் தண்ணீரோடு கலந்துவிடும். இது தண்ணீர் வாயிலாகச் சேர்ப்பது. இதை ‘அர்க்ய ஸம்யோஜனம்’ என்று சொல்வார்கள். இரண்டு தண்ணீரும் ஒன்றானால், தனித்தனியே பிரிக்க முடியாது. கடலில் கலந்த ஆற்றின் தண்ணீர் தனியே தெரியாது.
இறந்த தந்தை, தந்தையின் மூன்று தலைமுறை யினர், எதிரில் அக்னி, அறம் தெரிந்த பெரியோர் ஆகியோரின் முன்னிலையில் தந்தையின் பிண்டத்தை முன்னோர்களின் பிண்டத்தோடு மந்திரபூர்வமாகச் சேர்த்து வைப்பான் பிள்ளை. கைகள் பிண்டத்தை நகர்த்தும்; வாய் மந்திரம் சொல்லும்; மனம் தந்தையை நினைக்கும். இப்படி மனம், வாக்கு, காயம் என்கிற த்ரிகரண சுத்தியோடு நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்திரத்தின் கட்டளை.
தந்தையின் புதிய வரவால் நான்கு தலைமுறையினர் தென்படுவார்கள். முன்னோர்களில் முற்றும் முதிர்ந்தவருக்கு கட்டுச் சாதம் தந்து பிரியாவிடை கொடுத்து மூன்று தலைமுறையை மட்டும் தக்க வைப்பார்கள். சேர்த்து வைப்பதற்கு முன்னால் தந்தையை நினைத்து நிறைய தான தர்மங்கள் செய்ய வேண்டும். பசுமாட்டை தானமாக அளிக்க வேண்டும். இருபத்தி நான்கு தானங்கள் அளிக்க வேண்டும். கருட புராணமும் இந்த வேளையில் தான தர்மங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. குறிப்பாக பசுமாடு தானம் சிறந்தது. இறந்தவர் எமலோகம் செல்லும் வழியில் ‘வைதரணீ’ என்ற பெயருடைய ஆறு ஓடுகிறது. அதைக் கடப்பதற்கு பசு மாட்டின் உதவி தேவை. ஆகையால் நிச்சயமாக பசு மாட்டை தானம் செய்யவேண்டும் என்று அது வற்புறுத்தும்.
எமலோகத்துக்குப் பயணம் மேற்கொண்ட தந்தைக்கு வழியில் தாகத்துக்குத் தண்ணீர், இருட்டில் செல்ல தீபம், மழையில் பிடிக்க குடை, நடக்க உதவியாக தடி, காலுக்கு செருப்பு, வீசிக்கொள்ள விசிறி, பூசிக்கொள்ள விபூதி, திருமண், தாகத்துக்கு பானகம், நீர்மோர் இப்படி அவருக்கு உதவி செய்யும் வகையில் தானத்தை பரிந்துரைக்கிறது கருட புராணம்.
மகா விஷ்ணுவிடம் கருடன், ‘‘ஹே ப்ரபோ! உடலை விட்ட ஜீவனின் கதி என்ன, அவர்களது எமலோக யாத்திரையை, அவர்களது இலக்கை விளக்கி அருள வேண்டும்!’’ என்று வேண்டினான்.
பித்ருக்களின் பெருமை, பிரேதத்தின் விமோசனம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து விளக்கமளித்தார் ஸ்ரீமன் நாராயணன். தர்ம சாஸ்திரமும் புராணமும் இறந்தவரின் ஈமச் சடங்குகளுக்கு முதலிடம் அளிக் கின்றன. தேவர்களை வணங்குவதைவிட பன்மடங்கு பயனளிப்பது நம் முன்னோர்களின் ஆராதனை. அதை ஏற்படுத்தும் சம்ஸ்காரம் அந்த்யேஷ்டி.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
மனித வாழ்வின் இறுதிக்கால கடன்கள்!!! பகுதி 3— இறுதிப்பகுதி.

