தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மனித வாழ்வின் இறுதிக்கால கடன்கள்!!! பகுதி 2.
பன்னிரண்டாம் நாளன்று தன் இறந்த தந்தையையும் தந்தைக்கு முந்தைய மூன்று தலைமுறையினரையும், அதாவது பித்ருக்களாக மாறி நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கும் முன்னோரையும் வரவழைத்து, இறந்த தந்தையை அவர்களுடன் சேர்த்து வைக்கும் வைபவம் நடைபெற வேண்டும். அதற்கு ‘ஸபிண்டீகரணம்’ என்று பெயர். இது, இறந்த தந்தையின் சாந்நித்யம் இருக்கும் சாத உருண்டையை (பிண்டத்தை – பிடித்து வைத்தால் பிண்டம்) பித்ருக்களாகத் திகழும் மூதாதையர்களது பிண்டத்தோடு சேர்க்கும் நிகழ்ச்சி.
அதை சரிவர செய்யும் தகுதி பிள்ளைக்கு இருப்பதாலும், குலத்தின் வாரிசாக பிள்ளை இருப்பதாலும் அவனைக் கொண்டு ஸபிண்டீகரணம் செய்யப்பட வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் பரிந்துரைக்கும்.
இறந்தவரின் மூன்று தலைமுறையினரை மந்திரத் தால் வரவழைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இறந்து, சூட்சும உருவத்தில் தற்போது உலவி வரும் தந்தையை உத்தேசித்து ஒருவருக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். மூதாதையர்களோடு சேர்த்து இறந்தவரையும் ஒன்றாக இருத்தி (அதாவது அப்படி பாவித்துக்கொண்டு) அன்னதானம் வழங்க வேண்டும். தெய்வத்தை உபசரிப்பது போல் அவர்களை உபசரிக்க வேண்டும்.
தகப்பனாரின் மூன்று தலைமுறையைச் சார்ந்த முன்னோர்களே… தங்களை வணங்கி மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். மறுக்காமல் என் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும். இறந்து பதினோரு நாள் ஆன என் தந்தை சூட்சும உருவில் வளைய வந்துகொண்டிருக்கிறார். தங்க ளோடு சேர்ந்து தற்போது உணவு அருந்தியவர் அவரே! ஆகையால், அவரது பரிச்சயம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அவரை அதாவது என் தந்தையை- இறந்தவரை, தங்களைப் போல் பித்ருக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தண்ணீர் மூலமாகவும் உணவு மூலமாகவும் அவரைத் தங்களோடு சேர்த்துவிடுகிறேன். சேர்ப்பதற்கு தங்கள் அனுமதி வேண்டும்!’ என்று தன் விருப்பத்தை முன்வைப்பான் பிள்ளை. அவனது பித்ரு பக்தியையும் பற்றையும் பார்த்து அனுமதி அளிப்பார்கள் முன்னோர்கள். தண்ணீராலும் உணவாலும் இறந்தவரை பித்ருக்களோடு சேர்த்து விடுவான் பிள்ளை.
இறந்தவர் இப்போது பித்ருவாக மாறிவிட்டார் என்று பொருள். உடலைவிட்டுப் பிரிந்த தந்தையின் ஜீவன் தற்போது பித்ரு லோகத்தில் அவரின் மூன்று தலைமுறையினரோடு சேர்ந்து விட்டது.
மூன்றாவதும் இறுதியுமான அடுத்த பகுதி தொடரும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
மனித வாழ்வின் இறுதிக்கால கடன்கள்!!! பகுதி 2.

