தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இல்லற வாழ்க்கையில், தீபம், அக்னியின் பங்கு!!!
ஆண்டவன் வீதி உலா. கடவுளின் முன்னே ஒளிப் பிழம்பை உமிழ்ந்து கொண்டு தீப வரிசை பயணிக்கும். ஆராதனைகளில் தீப ஆராதனைக்கு முதலிடம் உண்டு. தேரில் பவனி வரும்போதும் அவனுடன் தீப ஒளி மிளிரும். ஆலயத்தில் நுழையும் தறுவாயிலும் தீபம் முன்னே சென்று வழிகாட்டும். அணையா விளக்காகக் கருவறையை அலங்கரிக்கும். பேரொளியின் தனி உருவம் கற்பூர ஒளி.
ஒளி, தன்னை அண்டியவனை ஆட்கொண்டுவிடும். ‘ஆச்ரயாச’ என்பது அக்னியின் பெயர். தன்னிடம் அடைக்கலம் ஆனவனை அணைத்துக் கொள்பவன் என்பது பொருள். ஆண்டவனுக்கும் அது பொருந்தும். ஒளியில் கற்பூரம் கரைந்து விடும். தத்துவத்தின் செயல் விளக்கம் கற்பூர ஆராதனை. கார்த்திகை தீபம் என்பது அவனுக்காக. சொக்கப்பனையில் அவன் தோன்றுவான். தீபாவளியும் அப்படியே.
லட்ச தீபம் ஏற்றுவது அவனுக்குச் செய்யும் பணிவிடை. அவனுக்குச் செய்யும் ஆராதனையின் ஆரம்பம் தீபம். நடை முறையிலும் பல விழாக்கள் தீபம் ஏற்றி ஆரம்பிக்கப்படுகின்றன. பரம்பொருளின் வடிவமாக தீபத்தைப் பார்க்கிறது தர்மசாஸ்திரம் ( பரமாதமதனோதீப… ).
புதுமனை புகுவிழாவில் தீபம் முன்னே செல்ல வேண்டும். வீடு ஒளியால் நிரம்ப வேண்டும். உயிர் நீத்தவனின் தலை மாட்டிலும் ஒரு தீபம் எரியும். கடைசிப் பயணத்தின்போதும் அக்னி முன்னே செல்லச் செல்ல, பேரப் பிள்ளைகள் நெய்ப்பந்தம் ஏற்றி வழிகாட்டுவார்கள். மறு உலகம் நோக்கிப் பயணம் மேற்கொண்டவனுக்கு வழிகாட்ட தீப தானத்தைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம்.
அடுப்பூதிய அருந்ததி விண்மீனாக விளங்குகிறாள். அக்னியை வணங்கிய திரௌபதி, திரௌபதி அம்மனாகக் காட்சி அளிக்கிறாள். விளக்கேற்றிய வைதேகி வில்லங்கங்களைக் கடந்தாள். அக்னிப் பிரவேசம் செய்து அரியாசனத்தில் அமர்ந்தாள். காலையிலும் மாலையிலும் ஒளபாசனம் என்ற பெயரில் உணவளித்து வழிபட வேண்டும் என்று கூறுகிறது தர்மசாஸ்திரம் ( ஸாயம்ப்ராத: யாவஜ்ஜீவம் யாவதாதானம் தாவத்ஹோஷே ).
அக்னியோடு புது மணத் தம்பதி இல்லத்தில் நுழைவார்கள். இருவரது இருப்பிடமும் இல்லமாகும். இல்லத்துக்கு கிருஹம் என்று பெயர். இரு வரும் கிருஹபதிகள், அதாவது இல்லக் காப்பாளர்கள் என்று வேதம் சொல்கிறது. நாம் இருவரும் ஒருவருக்கொருவர் காப்பாளராகச் செயல்பட்டு மகிழ்கிறோம். இல்லத்தைக் காப்பாற்றுவதிலும் இருவருக் கும் பங்குண்டு என்கிற தகவல் வேதத்தில் தென்படும் ( அக்னே க்ருஹபதே… ).
பரம்பொருள் ஒளி வடிவில் அக்னியில் தோற்றமளிக்கிறது என்று வேதம் கூறும் (தஸ்யபாஸா ஸர்வமிதம் விபாதி). உடலில் வெப்பமாகப் பரவியிருக்கும் அக்னி, நம்மைச் செயல்பட வைக் கிறான். அக்னியை இழப்பது முழு இழப்பாகும். உண்ணும் உணவை செரிக்க வைத்து படிப்படியாக தாதுக்களை வளர்த்து நம்மைக் காப்பாற்றுபவன் அவன். அக்னியின் புழுக்கத்தில் ஜீவராசிகள் தோன்று கின்றன. ஈசனின் நெற்றிக்கண் அக்னி. கிருத்திகை நட்சத்திரத்துக்கு அக்னி நட்சத்திரம் என்று பெயர். சூரியன், சந்திரன் என்ற இரு ஒளிகள் நாராயணனின் இரு கண்கள் என்று புராணம் கூறும். ‘உலகத்தின் ஆன்மா இவ்விரு ஒளிகள்’ என்கிறது ஆயுர்வேதம் (அக்னீஷோமாத்மதம் ஜகத்).
வேள்வி செய்பவன் மேல் உலகத்தை அக்னி வழியாகப் பார்க்கி றான் என்கிறது வேதம் ( தேவலோகம் வா அக்னினா… ). அக்னி வாயிலாக தேவர்களுக்கு உணவளிக்க வேண்டும் ( அக்னி முகா வைதேவா: ).
பொது இடத்தில் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து விளக்கு பூஜை செய்வதைப் பார்க்கிறோம். அவர்கள் விளக்கின் ஒளியில் இறைவனைப் பார்க்கிறார்கள். ‘கற்பூர ஜோதியே’ என்று இறை வனைப் பாடுகிறோம். ‘வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு கோயிலில் விளக்கு ஏற்ற வேண்டும்’ என்ற முதுமொழி அதன் பெருமைக்குச் சான்று. இல்லறத்தில் இன்பத்தைச் சுவைத்துக் கொண்டு இந்த உலகத்தை இன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்கிற கோட்பாட்டை தர்மசாஸ்திரம் வலியுறுத்தும்.
ஆண்டவன் சேவையோடு மக்கள் சேவையையும் சேர்த்துச் செய்யும் தருணத்தை இல்லறம் ஏற்படுத்துகிறது. வீட்டின் அணையா விளக்கு வாழ்க்கையின் ஒளிவிளக்காகும். வரவேற்பு அறையில் எரியா விளக்கை வைக்கிறோம். பார்வைக்கான பொருளல்ல அது. பணிவிடைக்கு உகந்த பொருள். பாபத்தை அகற்றுவது அகல் விளக்கு. வாழ்க்கையை நிலை நிறுத்துவது நிலை விளக்கு.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
இல்லற வாழ்க்கையில், தீபம், அக்னியின் பங்கு!!!

