திருமணமும் இல்லறமும் நல்லறமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
திருமணமும் இல்லறமும் நல்லறமும்!!!
தி ருமணத்தில் இருவரும், ‘இல்லறக் கடமைகளை நிறைவேற்றுவோம்’ என்று அக்னி பகவானிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் ( ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானீ ). அவர்கள் அக்னியைப் போற்றுகிறார்கள். அக்னி அவர்களை வாழ வைக்கிறான். உடம்பில் அக்னி குடிகொண்டு இருக்கிறான். சூடு தென்படும் இடமெல்லாம் அக்னியை உணரலாம். ‘சூடு, சுரணை இருக்க வேண்டும்!’ என்ற பழமொழி, அக்னி வழிபாட்டை ஞாபகப்படுத்தும்.
துயில் எழுந்தவுடன் விளக்கை ஏற்றி ஒளி மயமான அக்னியை வரவேற்பாள் இல்லாள். வெளிச்சத்துக்காக விளக்கு ஏற்றவில்லை. ஏற் கெனவே ஆதவன் வெளிச்சம் தந்து கொண் டிருக்கிறான். இல்லறம் விளங்கத்தான் விளக்கு. அக்னியின் முன்னிலையில் இல்லறம் நல்லறமாக மலரும். பரம்பொருளின் திருவுருவமாக ( பரமாத்மதனோதீப ) தீபத்தைப் போற்றுகிறது தர்மசாஸ்திரம்.
தானும் விளங்கி மற்ற பொருட்களையும் விளங்க வைப்பதால், அக்னி என்கிற ஒளியைத் தாங்கிய விளக்குக்கு ‘விளக்கு’ என்ற பெருமை கிடைத்து விட்டது. பூவோடு நாரும் பெருமை அடைகிறது. அந்தி சாயும் வேளையிலும் அவள் தீபம் ஏற்றுவாள். இரவில் இளைப்பாறச் செல்லும் வேளையிலும் அக்னியைப் பணிந்து போற்றுவதைத் தனது கடமையாக நினைக்கிறாள். உயிரினங்களுக்கு உணவைப் பக்குவம் பண்ணுபவன் அக்னி.
அடுப்பில் உலைநீர் வைத்து அரிசியைக் களைந்து அதில் போடு வதற்கு முன்பு சிறிதளவு அரிசியைக் கையில் எடுத்து உலையைச் சுற்றி அடுப்பில் விளங்கும் அக்னி பகவா னுக்கு அளிப்பாள். பின்புதான் அரிசி உலையில் விழும். வெறுமனே வேக வைக்கும் கருவியாக அவள் அக்னியைப் பார்க்கவில்லை. அக்னியைப் பரம்பொருளாக எண்ணி அவள் மனம் மகிழும். அக்னியின் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் முதல் வேதம் ஆரம்பமானது (அ க்னி மீளே… ).
ஐந்து தேவ வடிவங்களைப் பூஜை செய்து வழிபடுவது பஞ்சாயதன பூஜை. சூரியன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், ஈஸ்வரன் ஆகிய ஐந்து வடிவங்களை தினமும் வணங்க வேண்டும் ( ஆதித்யமம்பிகாம் விஷ்ணும் கணநாதம் மகேச்வரம் ).
பஞ்ச மஹா யக்ஞம்; பிரம்ம, தேவ, பித்ரு, பூத, மனுஷ்ய என்ற ஐவர்; பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்ற ஐந்து பூதங்கள்… இப்படி முழு உலகத்தையும் ஐந்தாகப் பிரித்து அதற்கு ஏற்ப வழிபாடுகளைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். ‘இல்லறம் என்பது நல்லறம்’ என்று சொல்லில் மட்டுமல்ல- கருத்திலும் நல்லறம்தான். உலகத்தை ஒரு வீடாகப் பார்க்கச் சொல்கிறது சாஸ்திரம் ( யத்ர விச்வம்பவ த்யேகநீடம் ).
கிருகம் என்றால் வீடு. கிருகத்தில் இருப்பவன் கிருகஸ்தன். இல்லறத்தில் இருப்பவர்கள் உலகத்தையே இல்லமாகப் பார்க்கிறார்கள். முழு உலகமும் மகிழ்ச்சியோடு விளங்க வேண்டும் என்ற கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் இல்லறத்தில் இருப்பவர்கள் (லோகா: ஸமஸ்தா: ஸிகினோ பவந்து). அறம் வளரும் இடம் _ இல்லம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

திருமணமும் இல்லறமும் நல்லறமும்!!!
Scroll to top